மௌன விரதம் கடைப்பிடிப்பவர்கள் சைகையில் பேசலாமா?

ஆர்.கேநகர் தேர்தலில் வெற்றி பெற்ற  டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற்றார். பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், சசிகலா மௌன விரதம் இருப்பதாகவும்  சைகை மூலமாகவே தனக்கு ஆசி வழங்கியதாகவும் தெரிவித்தார் தினகரன்.

மௌனவிரதம்

உண்மையில், மௌன விரதம் என்றால் என்ன, அதை எந்த நாளில் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் என்ன நன்மை உண்டாகும். மௌன விரதம் இருப்பவர்கள் சைகையால் பேசலாமா?  கே.குமார சிவாச்சாரியாரிடம் கேட்டோம்.

 "ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே  'மௌன விரதம்'.  உடல் உறுப்புகளை எந்தவித செயல்பாடுகளிலும் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பது 'இந்திரிய மௌனம்', உடலைச் சிறிதுகூட அசைக்காமல் இறைநினைப்பில் மட்டுமே லயித்திருப்பது  'காஷ்ட மௌனம்'. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை மீறி நாம் இருப்பது 'சுழித்தி மௌனம்'. எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் முழுமையாக இறை நினைப்பில் ஆழ்ந்திருப்பது மகா  'மௌனம்'

மௌன விரதம் இருக்க உகந்த நாள்கள்: 

சந்திரன் மனோகாரகன். அதனால் சந்திரன் ஆதிக்கம் அதிகமாக நிறைந்திருக்கும் நாள்களில் விரதம் இருக்கலாம். பௌர்ணமி , ஏகாதசி, அமாவாசை, சோமவாரம், குருவாரம், அஷ்டமி, தசமி, சதுர்த்தி மற்றும் மாதத்தின் முதல்நாள் ஆகிய நாள்களில் விரதம் இருப்பது நல்லது. 

மௌனவிரதம்

மௌன விரதம் எவ்வளவு நாள்கள் இருக்க வேண்டும்?

குறைந்தது இரண்டு நாள்களாவது தொடர்ந்து மௌன விரதம் இருந்தால்தான் அதன் முழுமையான பலன்கள் நமக்குக் கிடைக்கும். தொடர்ந்து இரண்டு நாள்கள் இருக்க முடியாதவர்கள் ஒரு நாளோ, அல்லது  ஒரு மணி நேரம் கூட விரதம் இருக்கலாம். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தெய்வம் உண்டு.  உதாரணமாக, திங்கட்கிழமை என்றால் சிவ வழிபாடு, செவ்வாய் என்றால் அம்மன் வழிபாடு இதுபோன்று அந்தந்த நாள்களுக்கு உரிய தெய்வங்களை மனதில் நினைத்து விரதம் இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு நாள்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் எவ்வளவு நாள்கள் விரதம் இருக்கிறோமோ அதற்கேற்ப நமக்குப் பலன்கள் கிடைக்கும். 

மௌன விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டும்?

மனதில் வேறு எந்தத் தேவையற்ற சிந்தனைகளும் இருக்கக் கூடாது.  இறை நினைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். புத்தகம் படிக்கக் கூடாது. யாருடனும் சைகையில் பேசுதல், பேப்பரில் எழுதிக் காண்பித்தல், போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அசைவ உணவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும. அதிக உப்பு, காரம் இல்லாத உணவுகளையே சாப்பிட வேண்டும். சர்க்கரை கலக்காத பால் மட்டும் அருந்தலாம். 

தவம்

மௌன விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் : 

உடல் , உள்ளம் தூய்மையடையும்.

தேவையற்ற சிந்தனைகள் மறையும். 

குழப்பங்கள் மறைந்து, அறிவு கூர்மையாகும்

கோபம், உணர்ச்சிவசப்படுதல் வெகுவாகக் குறையும்.

நமக்குள் இருக்கும் பேராற்றலை உணரவைத்து ஆன்ம ஞானத்துக்கு வழிவகுக்கும். 

நம்மைப் பற்றிய சுயஆய்வுக்குப் பேருதவி செய்யும். 

நம்மிடம் இருக்கும் மொத்த ஆற்றலையும் ஓரிடத்தில் குவித்து நம்மை வலிமைப்படுத்தும்

மௌன விரதம் நம்மிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்துத் தரும்.

ஜென் துறவி

ஒருவாரத்துக்கு மேல் மௌன விரதம் இருந்து பழகிவிட்டால், விரதம் இல்லாத நாள்களில் கூட தேவையற்ற வார்த்தைகள் நம்மிலிருந்து பிறக்காது..."  என்கிறார் குமார சிவாச்சாரியார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!