Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`தமிழ் வேறு, இறைவன் வேறு இல்லை’ - திருமூலர் வாக்கு! சித்தர்கள் உறையும் ஜீவசமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 7

சித்தர்கள்

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்

அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

(திருமந்திரம் - 270)


பொருள்:

அன்பும் சிவமும் வேறு வேறு என்போர் அறிவற்றவர்கள். இரண்டும் ஒன்று என்பதை எவரும் அறிவதில்லை. இரண்டும் ஒன்றென உணர்ந்து விட்டால் சிவனுடன் இயல்பாகக் கலந்து சிவமய மாவார்கள். இவ்வாறு பேரன்பு செலுத்தும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி 'ஜீவனும் சிவனும் ஒன்றே' என்ற பெரும் பேறை அடைவார்கள்!

திருமூலர்

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர்! 

‘திட்டமிடும் இடங்களையெல்லாம் நம்மால் பார்த்துவிட முடிவதில்லை. எதிர் பாராத இடங்களையும் அனுபவங்களையும் பார்க்க நேரிடுகிறது' என்பதே அனுபவத்தின் பயணமொழி. குறிப்பாக ஆன்மிகப் பயணங்கள். தொடங்குவதோடு நின்று விடுகிறது திட்டங்கள். அதன் பிறகு கிடைப்பதெல்லாம் எதிர்பாராத அனுபவங்களே அதை உணர்வதே ஆன்மிகம் எனலாம்...

சித்தர் திருமூலரின் ஜீவசமாதிப் பயணமும் நமக்கு அப்படியே வாய்த்தது...

பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ளது, திருமூலர் அருளிய ‘திருமந்திரம்’. சித்தர் திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்து, மூவாயிரம் பாடல்களைப் பாடியதாக ஓர் ஐதீகம். சித்தர்களின் பாடல்களில் பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது 'தமிழ் மூவாயிரம்' எனப் போற்றப்படும் திருமந்திரம்!

கயிலையில் குருகுலவாசம் இருந்தவர் திருமூலர் என்று சொல்லப்படுகிறது. அங்கு திருமூலரோடு உடன்சாலை மாணாக்கராகப் பயின்றவர்கள் சனகர், சனந்தனர், சனத்குமாரர், சிவயோக மாமுனி, பதஞ்சலி முனிவர், வியாக்ரமர் என எண்மரைக் குறிக்கின்றனர்.

வடகயிலையில் குருகுலம் பயின்று முடித்த திருமூலர், தில்லையம்பதி என சைவம் போற்றும் சிதம்பரம் வந்து சேர்கிறார். பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவருடன் வருகின்றனர். மூவரும் அங்கு செய்த தவத்தால் ஆடல்வல்லானின் அற்புத நடனக் காட்சியைக் கண்டுகளிக்கின்றனர்.

(திருமூலரின் பெருமைகளைக் கூறும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் ..)

‘தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் ஏழுகோடி யுகம் இருந்தேனே'

எனத் தன் மூவாயிரத்தில் அக்காட்சி கண்ட விதத்தை திருமூலர் விவரிக்கிறார்.

அங்கிருந்து திருமூலர் சிவத்தல யாத்திரை மேற்கொள்கிறார். பொதிகைமலை நோக்கிப் போகும் திட்டத்துடன் பயணம் தொடர்கிறார்...

திருவாவடுதுறை செல்லும்போது மனதுக்குள் சிறு அசரீரியாய் 'திருவருள்' எதையோ உணர்த்த, அங்கேயே திருமந்திரத்தை அரங்கேற்றுகிறார்.

அதன் பிறகு அவரின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள் முக்கியமானவை. அதற்கு முன் நம் பயணத்திட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்களைப் பார்ப்போம்.

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை தமிழுக்கும், சைவத்துக்கும், சித்தர் உலகுக்கும் முச்சிறப்பாய் அளித்த திருமூலர், ஜீவ ஐக்கியம் பெற்ற ஸ்தலம் சிதம்பரம். அங்குள்ள ஆதிமூலர் சந்நிதியே அவர் 'ஒளி ஐக்கியம்' ஆன ஜீவ பீடம்!

திருமூலரின் மகிமை மிகுந்த இடம் காட்டுமன்னார் கோயில் அருகிலிருக்கும் திருநாரையூர். அங்குள்ள பொள்ளாப் பிள்ளையார் கோயிலில் திருமூலர் சந்நிதானம் என இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

திருவாவடுதுறைக்கு அருகே ஆடுதுறையிலிருந்து சில கி. மீ தொலைவில் உள்ள ஊர் சாத்தனூர்.

மாடுமேய்க்கும் மூலன் என்பவனின் உடலுக்குள் அவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடமே சாத்தனூர். அங்கு திருமூலருக்குத் தனியே கோயிலுள்ளது.

திருமூலரின் இத்தனை மகிமை பொருந்திய இடங்களுக்குச் செல்ல முன்னேற்பாடுகள், திட்டங்கள் செய்தும் நாம் போக வாய்த்த திருவிடம் சாத்தனூர் திருமூலர் ஆலயமே!

திருமூலர் கோயில்

‘நினைப்பது நாம் எனினும் தீர்மானிப்பது அவன்தானே' என்ற நிறைவுடன் சாத்தனூரை நோக்கிப் பயணித்தோம்.

ஆடுதுறையிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சிறுசாலையின் இருமருங்கிலும் அடர் மரங்கள். மழை பெய்து ஓய்ந்த ஈரமான மண் வாசனை, வழியெங்கும் மாடுகள் மேயும் காட்சிகள். மூலன் திருமூலராக மாறிய அந்த இடத்தில் பயணிக்கும்போது நமக்கு அந்தக் கதை நினைவில் எழுந்தது.

திருமூலரின் வரலாற்றைத் தெளிவாகக் கூறும் நூல் சேக்கிழாரின் பெரியபுராணம். அதில் இருபத்தெட்டு பாடல்களால் இவரின் வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ('புலவர் புராணம்' என்னும் நூலிலும் திருமூலரின் வரலாறு கூறப்பட்டுள்ளது.)

திருமூலர் திருக்கயிலை மலையில் வாழ்ந்திருந்தவர். சிவபக்தர். நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்றவர். சிறந்த சிவயோகி. வேத சாஸ்திரங்களில் தேர்ந்த ஞானி. அகத்தியரைச் சந்திக்கவும், சிவத்தலங்களை தரிசிக்கவும் தென்னாடு வந்தவர். தில்லையம்பதி சென்று பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்றோருடன் தவம் செய்தவர். அங்கு சிவபெருமானின் தாண்டவம் கண்ட பின் பொதிகை மலை புறப்படுகிறார். காவிரிக் கரையில் உள்ள சாத்தனூருக்கு வரும்போது, மேய்ச்சல் காட்டில் மாடுகள் ஓலக்குரல் எழுப்புவது கண்டு நிற்கிறார். அங்கு, மேய்ப்பன் மூலன் இறந்து கிடக்கிறான். அந்தத் துயர் பொறுக்க முடியாமலே மாடுகள் அழுகின்றன.

துன்பம் சகியாத அவர். தன் உடலை ஒரு மரத்தின் வேர்ப்பகுதியில் மறைத்து வைத்து விட்டு, மூலனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடு பாய்கிறார். கதறியழும் மாடுகள். உயிர்ப்பித்து எழுந்த மூலனைக் கண்டு மகிழ்ச்சியில் கத்துகின்றன!

மீண்டும் தன் உடலைத் தேடி அந்த மரத்தின் மறைவிடம் போகும்போது, அங்கு அவரின் உடலைக் காணவில்லை! ஈசனின் 'திருவிளையாடல்' அது என்பதை உணர்ந்தவர், திருவாவடுதுறையை அடைகிறார்.

அங்குள்ள அரசமரத்தின் கீழ் நிட்டையில் அமர்கிறார். சரியை முதலிய நால்நெறி உணர்த்தும் திருமந்திர மாலையினை ஆண்டுக்கு ஒரு பாடலென ஆக்கியருளினார்.

‘ஒன்றவன்தானே’ எனத் தொடங்கி மூவாயிரம் பாடல்களை யாத்தபின் மீண்டும் கயிலை சென்று ஈசனின் திருவடிகளில் சரணடைந்து இறுதிநிலை எய்தினார்.

திருமூலர் ஜீவசமாதி

வேறு சில சித்தர் பாடல்களில் இவரின் வாழ்வு பற்றிய மாறுபட்ட குறிப்புகளும் உள்ளன.

திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் என போகரின் சப்த காண்டத்தில் குறிப்புள்ளது. இவர் நந்தீஸ்வரரிடம் உபதேசம் பெற்றதும் முக்தி எய்தியதும் மூலநட்சத்திரம் எனவும் இந்நூல் குறிக்கின்றது.

சில சித்தர் பாடல்களில் இவர் வேளாளர் மரபு என்னும் குறிப்பு உள்ளது. சில பாடல்கள் ஆயர்குலத்தவர் எனக் குறிக்கின்றன.

ஓர் இளவயது அரசன் அகால மரணம் அடைவதால், அவன் மனைவியும் சுற்றத்தாரும் அழுது புலம்ப, திருமூலர் தன் உயிரை இறந்த அரசனின் உடலில் புகுத்தி எழுந்தார் என 'வைத்திய ரத்தினச் சுருக்கம்' என்னும் சித்தர் நூலில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.

திருமூலரின் 'திருமந்திரம்' சிறப்புப்பாயிரம், பொதுப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் என்னும் மூன்று பாயிரங்களையும் ஒன்பது தந்திரங்களையும் கொண்டுள்ளது. பாடல்களின் தொகை மூவாயிரம் எனச் சேக்கிழார் குறித்துள்ளார். எனினும் இராமலிங்க வள்ளலார் குருமந்திரப் பாடல் தொகை எட்டாயிரம் எனக் குறிப்பிடுகிறார். வேறு சில சித்தர் நூல்களிலும் இத்தொகைக் குறிப்பே காணப்படுகிறது.

தனித்துவமான கருத்துகளை, உட்பொருளைக் கொண்ட திருமந்திரத்தை சைவ சித்தாந்தத்தின் மூலம் எனச் சொல்லலாம். சைவ சித்தாந்தம் வரித்துக்கொண்ட சித்தர் நூல் என்றும் அதைக் குறிப்பிடலாம்.

திருமந்திரத்தின் முதல் பாடலே பொருட் செறிவு நிறைந்ததாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைந்துள்ளது.

'ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்

சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே

(மந்திரம் - 1)


இப்பாடலை 'எண் குறி இலக்க மொழி' எனச் சித்தர் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள்.

'ஒன்று' என்பது முதலாகிய 'சிவம்!'

'இரண்டு' என்பது சிவத்தின் மறுபாதியாகிய ஆற்றல் 'சக்தி!'

'மூன்று' என்பது ஆன்மா, சிவம், சக்தி என்பதையும், ஆக்கல் (பிரம்மா)

காத்தல் (விஷ்ணு) அழித்தல் (ருத்ரன்) என்பதையும் குறிக்கின்றது.

'நான்கு' என்பது ரிக், யஜூர், சாமம், அதர்வணமாகிய சதுர்வேதங்களையோ அல்லது சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு அனுபவ நிலைகளையோ குறிக்கிறது.

'ஐந்து' என்பது பஞ்சபூதங்களையும் ஐம்புலன்களையும் குறிக்கிறது.

'ஆறு' என்ற எண் குறிக்கும் பொருள் ஒன்றுக்கும் மேல் உள்ளது. ஆறு ஆகமச் சமயங்கள், ஆறு ஆதாரங்கள் மற்றும் வண்ணம், பதம், மந்திரம், கலை, புவனம், தத்துவம் ஆகிய அறுபெரும் விஷயங்கள்.

'ஏழு' ஏழாவது சக்கரமாகிய சகஸ்ராரம், ஏழு மேல் உலகங்கள். ஏழு கீழ் உலகங்கள்.

‘எட்டு’ என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சிவன் ஆகிய எண் பெரும் சக்திகள்.

இறுதிச் சொல்லான 'உணர்ந்தெட்டே' என்பதற்கு, இவற்றை அனுபவத்தின் மூலம் அடையுங்கள் அல்லது உணருங்கள் என்று பொருள்! (ஒன்றானவன் உலகில் இரண்டானவன் என்ற பக்திப்பாடலுக்கு மூலமே திருமூலர்தான்!)

மந்திரங்கள், சமாதிக்கிரியைப் போன்ற நுட்பமான கருத்துகள் மட்டுமன்றி தமிழிலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பவையாக புகழ்பெற்றுள்ளன, சமூகக் கருத்துகள் கொண்ட பல திருமந்திரப் பாடல்கள்.

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' (நான் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்!)

'யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே' (பிறர் மனம் புண்படாத இன்சொற்களைப் பேசுங்கள்!)

'அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே' (பேரன்பு காட்டும் ஜீவாத்மாக்கள் சிவனுடன் ஒன்றி விடுகின்றனர்.)

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' (மனித உடம்பு ஓர் ஆலயம். அதனுள்ளே இறைவன் உறையும் கருவறையே மனித உள்ளம்!)

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (மனிதர்கள் என்னும் ஒரே குலம்தான் உள்ளது! எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்றே தெய்வம்!)

இவை 'திருமந்திரம்' என்னும் தீந்தமிழ்க் கடலின் ஒரு சில தேன்துளிகள்!

நாம் சாத்துனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் கோயிலை அடைந்தோம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள அந்தக் கோயில் கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

திருக்கயிலாய சிவயோகியார், இடையர் குல மூலனாக உருவெடுத்து, பின் சித்தர் 'திருமூலர்' ஆகி, தமிழுக்கும் சைவ சமயத்துக்கும், சித்தர் பிரபஞ்சத்துக்கும் அற்புதப் பொக்கிஷமாக அளித்த 'திருமந்திரம்' உருவாகக் காரணமான இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

ஊர் மக்களின் ஒற்றுமையில் எழுந்துள்ள அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் திருமூலரை வழிபட்டு, அமர்ந்து கண்மூடி தியானிக்கும் போது சித்தர் ஜீவசமாதியின் மெல்லிய இறை அதிர்வுகளை நம்மால் உணரமுடிந்தது.

அங்கிருந்து திரும்பும்போது வழியில் ஒரு மேய்ச்சல் மைதானம். அதில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பரம்பொருளின் திருவிளையாடல் காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன.

'கயிலாயத் தொருசித்தர் பொதியின் சேர்வார்

காவிரிசூழ் சாத்தனூர் கருதுமூலன்

பயிலாதோ யுடன்வீயத் துயரநீடும்

பசுக்களைக்கண் டவனுடலிற் பாய்ந்து போத

அயலாகப் பண்படையுடல் அருளால் மேவி

ஆவடுதண் துறையாண்டுக் கொருபாவாகக்

குயிலாரும் அரசடியில் இருந்து கூறிக்

கோதிலா வடகயிலை குற்கினாரே'

என்னும் திருத்தொண்டர் புராணப் பாடல் மீண்டும் நம் நினைவில் புரண்டது. (முன் எழுதியுள்ள மூலன் திருமூலராக மாறிய கதையின் சுருக்கமே இப்பாடலின் பொருள்.)

'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்ன நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்னும் திருமந்திர வரிகளின்படி தமிழ் வேறு இறைவன் வேறு இல்லை என்பது உண்மைதானே?!

-பயணம் தொடரும்.

இந்தக் கட்டுரையைப்  படித்துவிட்டீர்களா?  இந்த க்விஸை கிளிக் செய்து பதில் சொல்லுங்கள் பார்ப்போம்...

loading...

 

 

இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் நான்காம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் ஐந்தாம் அத்தியாயத்தைப் படிக்க ......

இந்தத் தொடரின் ஆறாம் அத்தியாயத்தைப் படிக்க ......

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement