கொளுத்தப்பட்ட திரி, பற்றியெரியும் விவாதங்கள்... அதென்ன ஆன்மிக அரசியல்? | Rajini Political Entry Debates

வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (04/01/2018)

கடைசி தொடர்பு:11:40 (05/01/2018)

கொளுத்தப்பட்ட திரி, பற்றியெரியும் விவாதங்கள்... அதென்ன ஆன்மிக அரசியல்?

'ன்மிக அரசியலை முன்னெடுக்கப் போகிறேன்' என்று சமீபத்தில் வாய் திறந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதையடுத்து, அதென்ன ஆன்மிக அரசியல் என்று திரி கொளுத்திப்போடப்பட, விவாதங்கள் பற்றிக் கொண்டுவிட்டன.

இதைப் பார்த்து ஆடிப்போன ரஜினிகாந்த், ஓடோடி வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'உண்மையான, நேர்மையான, சாதி, மத பேதமற்ற அரசியலே, ஆன்மிக அரசியல்' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

உடனே, ரஜினியின் ஆன்மிக அரசியல் இதுதான் என்றபடி, அவர் ராமகிருஷ்ண மடத்தின் சாதுக்கள் சிலருடன் பேசும் வீடியோவை ரவுண்ட் கட்ட விட்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்துமதத்தின் ஒரு பிரிவினரின் ஆலோசனையுடன் களத்தில் இறங்கும் இவரா... சாதிமதபேதமற்ற அரசியலைத் தரப்போகிறார் என்கிற கேள்விகளையும் வீசியபடி உள்ளனர்.

ஆன்மிக அரசியல்

பொதுவாகவே, ரஜினியின் கடந்த கால மற்றும் நிகழ்கால வரலாற்றைப் புரட்டும்போது, இந்து மதம் என்பதை மட்டுமே உயர்த்திப் பிடித்து வந்துள்ளார். அவருடைய சமீபகாலத்திய படங்களுக்கான தலைப்புகள்... இந்துமதக் கடவுள்களை மட்டுமே குறிப்பவையாக வைக்கப்படுகின்றன. அதிலும் சிவனின் அம்சம் மட்டுமே இருக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'காலா' என்பதும் கரிகாலன் என்று சொல்லப்பட்டாலும், காலன் என்பது சிவனின் அம்சமும்கூட. காலாமுக சைவம் எனும் சைவ மதமே இங்கே இருந்துள்ளது. இதன் எச்சங்கள் இன்றும்கூட உண்டு. இந்த சைவர்கள்... கொஞ்சம் தீவிரமானவர்கள். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இவருடைய ஆன்மிக அரசியல் எப்படி இருக்கும் என்பதுகுறித்து, இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஒருவேளை அவரே குறிப்பிட்டது போல, 2019-ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, அவர் ஆட்சிக்கட்டிலில் ஏறியபின்பு, இந்த ஆன்மிக அரசியல் என்பதற்கான விளக்கத்தை நாம் நேரடியாகவே அனுபவிக்க முடியுமோ என்னவோ? 

அதேசமயம், மதம் சார்ந்த அரசின் நடவடிக்கைளை தற்போது நாம் நன்றாகவே கண்டுணர்ந்து, அனுபவித்தும் வருகிறோம். மாட்டுக்கறி, தாஜ்மகால், தலாக், தாய் மதம் திரும்புதல் என்று எதையெடுத்தாலும், அதில் மத சர்ச்சை ஒட்டிக் கொண்டுவிடுகிறது தற்போதைய நரேந்திர மோடி ஆட்சியில். `அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்' என்பதை தங்களின் தாரக மந்திரமாகக் கொண்டு ஆட்சிக்கட்டிலைப் பிடித்திருக்கும் பி.ஜே.பி-யின் அரசியல்... வெளிப்படையாகவே இந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவேதான் இருக்கிறது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தொடர்ந்து மத அரசியலை முன்வைத்தே கட்சியை வளர்த்த பி.ஜே.பி, 2014-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், தற்போது தன்னுடைய தாய் மண்ணான குஜராத்தில் தட்டுத் தடுமாறித்தான் வெற்றியைப் பெற்றுள்ளார் மோடி. 

மோடி

மதம் என்பது ஆரம்ப கட்டத்தில் கைகொடுக்கக்கூடும் அரசியலுக்கு. ஆனால், நிரந்தரத் தேவை... வளர்ச்சிப் பாதைதான். மதஅரசியலை வைத்துக்கொண்டு நீண்டகாலத்துக்கு மக்களை அடிமைப்படுத்தவோ... ஏமாற்றவோ முடியாது என்பதைத்தான் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. இதற்கு நம்முடைய இந்தியா நாட்டின் வரலாற்றிலேயே ஏகப்பட்ட உதாரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், எந்நேரமும் நாட்டின் அடையாளமாக இந்து கலாசாரம் மற்றும் பண்பாட்டை பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பி.ஜே.பி, இந்திய வரலாற்றை மட்டும் கவனிக்க மறந்துவிட்டது. வரலாற்றைக் கொஞ்சம்புரட்டிப் பார்த்தால்... தனியொரு மதத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அந்த மதத்தின் கொள்கைகளை மட்டுமே முன்னிறுத்திய ஆட்சிகள், கடைசிவரை மன்னர்களாக நிலைத்ததில்லை என்கிற நிதர்சனம் புரியும்!

மௌரிய வம்சம்

இந்தியாவின் முதல் பேரரசு... மௌரியப் பேரரசு. இந்த வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன் அசோக சக்கரவர்த்தியைப் படிக்காமல், யாருமே இந்தியாவில் கல்விக்கூடங்களைக் கடக்கமுடியாது. `குளங்கள் வெட்டினார்; சாலைகள் போட்டார்; மரங்கள் நட்டார்; புத்த மதத்தைப் பரப்பினார்' என்ற வரிகள் பசுமரத்தாணி போல நம்மிடம் பதிந்துதானே கிடக்கின்றன. இதன்மூலம் அவர் அகிம்சாவுக்கு அதிபதி என்பது போலத்தான் வரலாற்றாசிரியர்கள் சித்திரித்து வைத்துள்ளனர். ஆனால், அந்த அசோகரின் இறுதிக்காலம் குறித்தும், அப்பேரரசின் முடிவு குறித்தும் மிகச்சிலரே அறிவர். 

அசோகரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றியெல்லாம், அவருடைய காலத்துக்குப் பிறகு பல்வேறு மொழிகளில் நூல்களாக எழுதப்பட்டுள்ளன. நேபாள மொழியில் எழுதப்பட்டுள்ள அசோகவதானா, திவ்யாவதானா, சீன மொழியில் எழுதப்பட்டுள்ள அசோகரின் வாழ்க்கைச்சுற்று, சம்யுக்த ஆகமம், சமஸ்கிருத சூத்ராலாம்காரா, கல்பனாமண்டிதிகா போன்ற பல்வேறு காலத்திய நூல்களும், ஒரேவிதமாக அசோகரின் இறுதிக் காலத்தை சித்திரிக்கின்றன. இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள் மட்டும் இவற்றையெல்லாம் ஏற்பதில்லை.

அசோகவதானா என்ற நூலில் அசோகரின் புலம்பல் இப்படி ஒலிக்கிறது: ‘ஒரு காலத்தில் என் வார்த்தைகளே சட்டங்களாயின. இன்றோ காதுகொடுத்து கேட்பாரும் இல்லையே. என் சட்டங்கள் உயிரற்று வெறும் எழுத்துகளாகிவிட்டனவே’. சர்வசக்தியுடன் ஆட்சிசெய்த அதே பேரரசன்தான், அரியணையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கிறார். 'இன்று என்னிடம் மிச்சம் இருப்பதெல்லாம் சில மட்பாண்டங்களும், பாதி நெல்லிக்காய் மட்டுமே’ என்று அசோகர் சோகப்படும்போது, மௌரியப் பேரரசின் கஜானா காலியாகி விட்டதோ எனவும் தோன்றலாம். ஆனால், உண்மை வேறு. இதற்கெல்லாம் காரணத்தைத் தெரிந்துகொள்ள, மேலும் சில இலக்கிய நூல்களை ஆராய வேண்டும்.

அசோகர்கொள்கை தவறிய அசோகர்

அசோகர், புத்த மதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு மட்டுமே பெரும்பொருள் செலவிட்டார். துவக்கத்தில் மற்ற மதத்தாரை துன்புறுத்தவும் இல்லை, அதேசமயம் நட்பு பாராட்டவும் இல்லை. பின்னாளில் எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கும் மௌரியப் பேரரசின் உன்னதமான கொள்கையிலிருந்து தவறினார். இதனால் கோபமுற்ற சமணர்களும் ஆஜீவகர்களும் மன்னரின் மேல் கோபமும் பகையும் கொண்டனர். விளைவு, நாட்டில் மதக்கலவரங்கள் தலைதூக்கின. புத்தரின் சிலைகளை சிதிலமாக்குவதன் மூலம் மன்னரின் மீதான கோபத்துக்கு வடிகால் தேடினர் அஜீவிகர்கள். மன்னருக்கு கோபம் கண்ணை மறைத்தது. ஆட்சியின் ஒரு கட்டத்தில் அகிம்சையை பரப்பிய அதே அசோகர், அப்பகுதியில் வாழ்ந்த அஜீவிகர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்துங்கள் என்று ஆணை பிறப்பித்தார். அது அப்படியே நிறைவேற்றப்பட்டபோதும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. பாடலிபுத்திரத்தின் சமணர்களும் புத்தரின் சிலைகளை சிதிலமாக்கினர். எத்தனை பேரைக் கொன்றாலும் இது தொடர்வதை உணர்ந்த அசோகர், வேறுவழியின்றி சமணர்களை கொல்லாமல், அவர்களுக்கு வரி மட்டும் விதித்தார்.

உள்நாட்டு கலவரம்

இந்தச் சூழலின் எதிரொலி, நாட்டில் பலவிதமாக பிரதிபலித்தது. உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரித்தன. பல மாகாணங்கள், பேரரசில் இருந்து விலகி சுதந்திரமடைய முயற்சித்தன; மத்திய அரசை எதிர்க்கத் துணிந்தன; நாட்டில் பொருளாதார நெருக்கடி எற்பட்டது, புத்தமத எதிர்ப்புகள் பல்வேறு மத அமைப்புகள் மூலம் பலமாகிக் கொண்டே சென்றன. குறிப்பாக, அன்றைய சமூகத்தில் பலம்பெற்றிருந்த பிராமண வட்டாரங்கள், மன்னனின் மீது பகைமை பாராட்டின. இரண்டாம் பட்டத்து ராணி திச்யரக்‌ஷிதாவை இலக்கியங்கள் பிராமணர்களின் சார்பாளராகவும் புத்தமத எதிரியாகவும் சித்திரிக்கின்றன. அரசன் அரியணையில் இருக்கும்போதே வழக்கத்துக்கு மாறாக தன் பெயரிலேயே கல்வெட்டு வெளியிடுகிறார் இந்த ராணி. இதில், அரசனை பற்றிய எந்தக் குறிப்பும் எழுதப்படவில்லை. இந்த ராணியின் சதியாலும் சூழ்ச்சியாலும் பட்டத்து இளவரசன் (அசோகரின் மகன்) கொல்லப்படுகிறான். இதைத்தொடர்ந்து, அசோகரின் பேரன் சம்பதி இளவரசன் ஆகிறான். இந்த சம்பதி, சமண மதத்துக்கு மாறியதன் மூலமாக புத்த மதத்தின் எதிரியானன். 

அசோக மன்னனின் அந்தப்புரத்திலும் எதிர்ப்புத்தீ கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. உள்நாட்டு கலவரங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மந்திரிசபையில் சலனம் ஏற்பட்டது. அசோகரின் பேரன் சம்பதி, அவருடைய வாரிசாக நியமிக்கப்பட்டிருந்தார். மந்திரிமார்கள், நாளைய மன்னனின் காதைக் கடிக்க ஆரம்பித்தனர். 'புத்த பிக்குகளுக்கும் மடங்களுக்கும் அசோகர் அளிக்கும் செல்வம், கருவூலத்தையே காலியாக்கும், எதிர்காலத்தில் பஞ்சமும் பற்றாக்குறையும் தலைவிரித்தாடும்' என்றனர். தன் மூளையை முடுக்கிவிட்ட சம்பதி, மன்னரின் கரத்தை பலவிதத்தில் முடக்கினான். மன்னன் பலமற்று வாழ்ந்தான். அவனின் சட்டங்கள் வெற்றுச் சடலங்கலாயின. கருவூலத்தின் செல்வம், கைக்கு எட்டாமல்போனது. அசோகரின் வாழ்க்கையில் அத்தனையும் பறிபோனது. மிஞ்சியதெல்லாம் அழுகையும் புலம்பலும் மட்டுமே!

இறுதியாக பேரரசர் அசோக சக்கரவர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டு, பேரனின் கைக்கு ஆட்சி இடம் மாறியது. பேரரசு பல துண்டுகளாயின. அசோகருக்கு பின் ஏறக்குறைய 50 ஆண்டுகள் நீடித்த மௌரிய வம்சம், புஷ்யமித்திரா எனும் பிராமண இன படைத் தளபதியால் முடிவுக்கு வந்தது. சுங்க வம்சம் தன்னுடைய ஆட்சியைத் துவக்கியது. ஒரே மதத்தை ஆதரிப்பது எனும் அசோகரின் கொள்கை, பேரரசின் முடிவுக்கு வித்திட்டது. புத்த மதமும் சரிவைச் சந்தித்தது. ஒரு மதத்தைச் சார்ந்து ஆட்சியை நடத்துவது எனும் அரசரின் கொள்கை, நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை சேர்க்கவில்லை.

சோழ, பல்லவ பேரரசுகளின் மர்மங்கள்!

சோழப் பேரரசிலும் குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே ஆதரவளித்த வரலாறு உண்டு. மூன்றாம் குலோத்துங்கன், சைவ மதத்தை மட்டும் ஆதரித்து வைஷ்ணவ மதத்துக்கு கடும்எதிர்ப்புக் காட்டினார். இவருடைய ஆட்சிக்காலத்தில் விஷ்ணு சிலை கடலில் வீசப்பட்ட சம்பவம் கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றது நினைவிருக்கும்.

சோழர்

தென்னிந்திய வரலாற்றில் அவிழ்க்க இயலாத பல மர்ம முடிச்சுகள் உண்டு. புகழ்மிக்க சோழப் பேரரசின் மன்னன் முதலாம் ராஜராஜனின் அண்ணனும் பட்டத்து இளவரசனுமான ஆதித்ய கரிகாலன், கொல்லப்பட்டதின் சூழ்ச்சி... இன்று வரையிலும் மர்மமே. இதை தொடர்ந்து ராஜராஜனுக்குப் பதிலாக அவரின் சிறிய தந்தை மதுராந்தகன் ஏன் அரியணையேறினார் என்பதும் விளங்கவில்லை. சிவதொண்டர்களின் வாழ்க்கையை விவரிக்கும் பெரியபுராணத்தில் சிவபக்தனாக வந்து மன்னனையே கொல்லும் கதை சொல்லும் நியதி என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இவற்றின் பின்னணியில் மதமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமண, புத்த மதங்களில் மூழ்கிய பல பல்லவ மன்னர்களை, அவர்களின் மனைவியர் மூலம், சைவ மதத்துக்கு மதத்துறவிகள் மதமாற்றம் செய்தது ஏன்? அசோகரின் செயல்களின் எதிரொலியா? இதேகாலத்தில் புத்த, சமணத் துறவிகள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் கழுவேற்றப்பட்ட நிகழ்வும் ஏற்பட்டது. இதற்கும், இன்றைய இலங்கை புத்தத் துறவிகள் தமிழரை வெறுப்பதற்கும் தொடர்புகள் உண்டா? என்பது போன்ற தீராத விடையில்லா கேள்விகள், தமிழக வரலாற்றிலும் உண்டு. அதேசமயம், மதச்சகிப்பு கொள்கையுடன் எல்லா மதங்களையும் சமமாக பாவித்து ஆட்சி செய்த மன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன், முதல் குலோத்துங்கன் எனப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் காலத்தில் நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் வளமையும் ஏற்பட்டதை வரலாறு சொல்கிறது.

முஸ்லிம் மன்னர்கள்

முகலாயப் பேரரசர் அக்பர், அனைத்து மதங்களுக்கு அளித்த ஆதரவு, பள்ளிக் குழந்தைகளும் அறிந்த ஒன்று. அனைத்து மதக்கொள்கைகளையும் சேர்த்து ‘தீன் இலாஹி’ எனும் பெயரில் புதிய மதத்தை உருவாக்க முயற்சித்தார். தன் அரசவைக்கு அனைத்து மதத்தலைவர்களையும் அழைத்து ஆலோசித்தார். அவர்களுக்கு இடையே ஆரோக்கியமான விவாதங்களை நடத்தி முடிவு காண முயன்றார். இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே திருமண உறவுகளுக்கு ஊக்கமளித்த அக்பர், அரண்மனையில் இந்துக் கடவுள் சிலைகளை வைத்து வழிபாடு செய்யவும் வழிவகுத்தார். 

இதன் எதிர்மறையாக ஆட்சி செய்தவர் அவுரங்கசீப். இவரது ஆட்சியில் கோயில்கள் பலவும் இடிக்கப்பட்டன என்பது அனைவரும் அறிந்ததே. அக்பரை போல் மதங்கள் அனைத்தையும் இவர் சமமாகப் பாவிக்கவில்லை. இதனால், ஜாட், சத்னாமி, சீக்கியர் மற்றும் சில மதத்தினர் பல பகுதிகளில் கிளர்ச்சியில் குதித்தனர். அவுரங்கசீப், இதையெல்லாம் அடக்க முயன்றாலும், அவருடைய இறப்புக்குப் பின், 'பரத்பூர் (இன்றைய ராஜஸ்தான்) சுதந்திர பூமி' என ஜாட் சமூகத்தினர் பிரகடனப்படுத்தினர். மற்றொருபுறம் சீக்கியமத குருவான தேஜ்பகதூர் சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்படுகிறார். எனினும், தம் எதிர்ப்பை அவருடைய மகனான குரு கோவிந்த் சிங் தலைமையில் சீக்கியர்கள் தொடர்ந்தனர். 

இதேபோல், ராஜபுத்திரர்களும் அவுரங்கசீப்புக்கு எதிராக தம் வாளை தூக்கினர். இஸ்லாத்தை மட்டும் ஆதரித்த காரணத்தால், தம்முன்னோர்களால் இந்தியாவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த முகலாயர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவதற்குக் காரணமாக அமைந்தார் அவுரங்கசீப். அதேசமயம், தென்னிந்தியாவை ஆண்ட முக்கிய முஸ்லிம் மன்னர்களில் ஒருவரான திப்பு சுல்தான், இந்துக் கோயில்கள் பலவற்றுக்கும் நிலம் மற்றும் பொருள் தானம் கொடுத்ததைக் கல்வெட்டுகள் பெருமையோடு கூறுகின்றன. 

மதத்தையும் அரசியலையும் இணைக்காத மன்னர்களின் பேரரசுகள் சாதனைகள் படைத்த வரலாறு... இந்தியாவின் பொற்காலம், தமிழகத்தின் பொற்காலம் என்றெல்லாம் போற்றப்படுகிறது. நீண்டகால ஆட்சி செய்து, நாட்டில் அமைதி காத்தனர், வளர்ச்சியும் வளமையும் சேர்த்ததால், இன்றும் புகழோடு பேசப்படுகின்றனர் (பார்க்கப் பெட்டிச் செய்தி). ஆனால், கி.மு என்றாலும் சரி... கி.பி என்றாலும் சரி... குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் போற்றிய தலைவனை, மன்னனை இந்திய மண்ணும் மக்களும் ஏற்கவில்லை என்பதுதான் சரித்திரம் சொல்லும் நிதர்சனம். 

இன்றையக்கு ஆள்பவர்கள் மட்டுமல்ல, நாளைக்கு ஆள நினைப்பவர்களும், ஆன்மிக அரசியல் என்கிற பெயரில் புதுக்கோஷத்தை உயர்த்துபவர்களும் இதையெல்லாம் உணர்வது அவசியம்.

பொற்காலத்தை உருவாக்கிய சமதர்மராஜர்கள்! 

சத்ரபதி சிவாஜியை இந்து சாம்ராஜ்யத்தின் தலைவராக சித்திரிப்பதுதான் இன்றும் தொடர்கிறது. உண்மையில் அவர் தாராள மதக்கொள்கையை உடையவர். இஸ்லாமியத்துறவிகளின் கல்லறைகளுக்கும், மசூதிகளுக்கும்கூட கொடை வழங்கியுள்ளார். வேத ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற பிராமன கல்வியாளர்களை எப்படி ஆதரித்தாரோ, அதேபோன்று இஸ்லாம் மதத்துறவிகளையும் ஆதரித்துள்ளார். உதாரணமாக கெல்சி பகுதியின் பாபா யாகூப் என்பவரையும் ஆதரித்துள்ளார். சிவாஜி, எப்போதும் மசூதியின் மேல் படை எடுத்ததில்லை என அவரது காலத்தில் வாழ்ந்த காபிகான் எனும் வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். தன் படை எடுப்பில் சிவாஜியின் கைக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் கிடைத்தால், அதை தன் படையில் உள்ள முஸ்லிம் படைவீரர்களிடம் ஒப்படைத்து விடுவார் என்றும் காபிகான் எழுதியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி

குப்தப் பேரரசின் மன்னர்கள் பெரும்பாலும் வைஷ்ணவ சமயத்தை போற்றியவர்கள். இந்திய வரலாற்றில் 'பொற்காலம்’ எனக்கூறப்படும் இவர்களின் ஆட்சியில் சைவம், புத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்களும் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன. இலங்கை மன்னன் ஸ்ரீமேகவண்ணா, புத்த கயாவில் புத்த மடம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. புத்த பிக்குகளால் நடத்தப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் குமாரகுப்தா எனும் கூற்றும் உண்டு. 

இந்து மதத்தைப் பின்பற்றிய இந்தியாவின் முக்கிய அரச வம்சங்களில் சாளுக்கிய வம்சத்துக்கும் இடமுண்டு. மேற்குப்பகுதியை ஆண்ட சாளுக்கியர்கள், விஷ்ணு பக்தர்களாகவும், கிழக்குப்பகுதியை ஆண்ட சாளுக்கியர்கள் சிவபக்தர்களாகவும் இருந்தனர். அதேசமயம் இருபகுதியின் சாளுக்கியர்களும் புத்த மற்றும் ஜைன மதங்களையும் போற்றினர் என்பதை சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

விஜயநகர மன்னர்கள் பெரும்பாலும் கடைபிடித்தது வைஷ்ணவ மதத்தைத்தான். இவர்கள் காலத்தில்தான் தமிழகம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் வைஷ்ணவம் பெரிதும் பரவியது. அதேசமயம், சைவத்தில் தீவிரமாக இருந்த வீரசைவர்கள் (லிங்காய்த்கள், ஜங்கமர்கள் போன்றோர்) சிறப்பாக தங்களின் சைவ மதத்தைப் போற்றிவந்தனர். இதற்கு விஜயநகர ஆட்சியில் எந்த இடைஞ்சல்களும் தரப்படவில்லை. மன்னர் தேவராயர், தன் தலைநகரிலேயே சமணர் கோயிலையும் கட்டுவித்தார். இவருடைய படையில், இஸ்லாமியர்களும் வீரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

(கட்டுரையாளர் முனைவர்.எஸ்.சாந்தினிபீ தமிழகத்தை சேர்ந்தவர்,  அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர்)


டிரெண்டிங் @ விகடன்