Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`கோயில் திருப்பணிகளுக்கு வல்லுநர் குழு அறிவுரை அவசியம்’ - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

கோயில் திருப்பணிகள் செய்யவிரும்புபவர்கள் கோயிலின் சிறப்பு, தல வரலாறு, வரைபடம், உத்தேசித்திருக்கும் திருப்பணி வரைபடம் ஆகியவை அடங்கிய அறிக்கையை தொல்லியல்துறை வல்லுநர் குழுவிடம் சமர்பிக்க வேண்டும். வல்லுநர் குழு ஆய்வுசெய்து கொடுக்கும் அறிவுரையின்படிதான் இனி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” - இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்துக் கோயில்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை இது.

 இந்து சமய அறநிலையத்துறை

‘கோயில் திருப்பணிகள் முறையாக நடப்பதில்லை; நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் மேலும் புகார்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும்விதமாகவே இந்தச் சுற்றறிக்கை’ என்கிறது இந்து சமய அறநிலையைத்துறை.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில், `திருப்பணிகள்’ என்ற பெயரில் சிறப்புவாய்ந்த பல கோயில்களின் தொன்மையான பல அடையாளங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. முக்கியமான சிற்பங்கள், சுவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இவையெல்லாம் குறித்து பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றமும், தானாக முன்வந்து கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு ஒன்றைப் பதிவுசெய்து விசாரணை நடத்தியது.

அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களை ஆய்வுசெய்ய மூத்த வழக்கறிஞர் ராமன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு கொடுத்த அறிக்கையின்படி, ‘இனிமேல் முறையான கண்காணிப்பு இல்லாமல் கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

யுனெஸ்கோ அறிக்கை

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும்கூட, முறையான கண்காணிப்பு இல்லாமல் பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாகவும், பல கோயில்கள் இடிக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களை ஆய்வுசெய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோவைக் கேட்டுக்கொண்டது சென்னை உயர் நீதிமன்றம்.

அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பழைமையான கோயில்களை ஆய்வுசெய்தது யுனெஸ்கோ. ஆய்வு குறித்து யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், மதுரை மீனாட்சியம்மன், மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பழம்பெருமை வாய்ந்த கோயில்களில், தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப் பணிகளில் ஏகப்பட்ட விதி மீறல்கள் நடந்துள்ளதாகவும், அதனால் கோயிலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

அறிக்கை வந்தபோது இருந்த பரபரப்பு ஒரு சில நாள்களிலேயே அடங்கியும்விட்டது. இன்றும் பல கோயில்களில் விதிமீறல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இப்போது அறநிலையத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையே சான்றாக இருக்கிறது.

மானம்பாடி கோயில்

இந்தச் சுற்றறிக்கை குறித்து அறநிலையைத்துறை கூடுதல் ஆணையர் (திருப்பணிகள் ) கவிதாவிடம் பேசினோம்...

“உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. `திருப்பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி கையேடு (Manual ) ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி எங்களுக்கு உத்தரவிட்டிருந்தது உயர் நீதிமன்றம். ஆனால், அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில், பல கோயில்களில் கும்பாபிஷேகம் செய்யவேண்டியிருந்தது. அதுகுறித்து பலர் நீதிமன்றத்தில் முறையிடவே தற்காலிகமாக கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கமிட்டியின் மேற்பார்வையில் அவசரமாக மேற்கொள்ளவேண்டிய சில திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான கோயில்களுக்கு மட்டும் தொல்லியல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டது. இனிமேல் எந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றாலும் தொல்லியல் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். இதுதான் இந்தச் சுற்றறிக்கையின் நோக்கம்" என்கிறார் கவிதா.

மீனாட்சி அம்மன் கோயில்

இதுதொடர்பாக, வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்...குடவாயில் பாலசுப்ரமணியன்

“இதுபோன்ற பல சுற்றறிக்கைகள் ஏற்கெனவே வந்துவிட்டன. இது நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றுவதற்காக விடப்பட்ட ஓர் அறிவிப்புதான். அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இதையெல்லாம் சரியாக நடைமுறைப்படுத்த மாட்டார்கள். மேலதிகாரிகளும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இரவு நேரத்தில் கதவைச் சாத்திக்கொண்டு பல கோயில்களில் மார்பிள், கடப்பாக்கல் போடுவார்கள். விதவிதமாக டைல்ஸ் எல்லாம் ஒட்டுவார்கள். அந்தப் பகுதி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியும்.

இதுவரை இருந்த நடைமுறையின்படி, தொல்லியல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் தலைமையில் அமைந்த கமிட்டி திருப்பணிகள் நடக்கும் கோயில்களை ஆய்வுசெய்தது. `பழைமை மாறாமல் ஆய்வுசெய்யுங்கள்’ என்று அறிவுரை மட்டும் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிவிடுவார்கள். திருப்பணிகள் நடக்கும்போது மேற்பார்வை செய்ய மாட்டார்கள். முழுமையாக இருக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது கண்காணிக்க வேண்டும். ஆனால், அதையும் செய்ய மாட்டார்கள். முதன்முறை பார்ப்பதோடு சரி.

தூண்கள்

ஒருவேளை அவர்கள் கண்காணித்து, குறை கண்டுபிடித்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது அவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதனால் அவர்களும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

கான்ட்ராக்டர்கள் கொடுக்கும் பணத்துக்காக நம் தொன்மங்களை அழித்துவருகிறார்கள் அறநிலையைத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள். அவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்தச் சுற்றறிக்கையை மீறும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை என்பதையும் அறநிலையத்துறை ஆணையாளர் அறிவிக்க வேண்டும்.

சிதைந்த சிற்பங்கள்

பணத்துக்காக நம் பாரம்பர்யம் அழிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அநீதிக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும்” என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement