Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோலத்தின் நடுவே பூசணிப் பூ இதற்காகத்தான் #Margazhi

மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம். இந்த மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த மாதம் முழுவதும் தேவர்கள் அனைவரும் தங்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளை வழிபடுகிறார்கள். தேவர்களெல்லாம் தம்மை பூஜித்து வழிபடும் மாதம் என்பதால்தான், பகவான் கிருஷ்ணர் மாதங்களில் தாம் மார்கழியாக இருப்பதாக சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்.

Rangoli

மார்கழி மாதம் வந்துவிட்டாலே பெண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுவிடும். அதிகாலை வேளையிலேயே எழுந்து நீராடிவிட்டு, வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள். தினமுமே கோலம் போடுவார்கள் என்றாலும், மார்கழி மாதம் கோலம் போடுவதை மட்டும் மிகவும் ஆர்வமாகச் செய்வார்கள். மேலும் மற்ற மாதங்களில் சற்று தாமதமாக எழுந்து வீட்டு வாசலில் கோலம் போட்டாலும், மார்கழி மாதத்தில் மட்டும் அதிகாலை 4-5 மணிக்கே எழுந்து தங்கள் ஓவியத் திறனையெல்லாம் திரட்டி பக்கத்து வீட்டு வாசலில் போட்டிருக்கும் கோலத்தை விட தங்களது வீட்டின் வாசலில் பெரிதாகக் கோலம் போட்டு அதனைப் பார்த்து ரசிப்பது ஒரு தனி அழகுதான். இதன் காரணமாக வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும் என்பது சாஸ்திரம்.

மார்கழி மாத அதிகாலைப் பொழுதிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. மார்கழி மாதப் பனிக்காற்றில் உடம்பு நடுங்கத்தான் செய்யும். ஆனால், அந்தப் பனிக்காற்று மருத்துவ குணம் மிக்கதாகவும், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் திகழ்வதாகக் கூறுகிறது மருத்துவ உலகம். மார்கழி அதிகாலையில், பூமியையொட்டிய காற்றுமண்டலத்தில் O3 என்று விஞ்ஞானிகள் குறிப்பிடும் தூய ஆக்சிஜன் அடர்த்தியாக வியாபித்திருக்கும். அந்த வேளையில் வீட்டு வாசலில் கோலம் போடுவதால், தூய ஆக்சிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்க முடிவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடிகிறது.

கோலத்தின் நடுவே பூசணிப் பூ

மார்கழி மாதத்தில் புள்ளிக் கோலம், ரங்கோலிக் கோலம், சிக்குக் கோலம் என்று பலவகையான கோலங்கள் போட்டாலும், கோலத்துக்கு அழகு சேர்ப்பதே அதன் நடுவில் வைக்கும் மஞ்சள்நிற பூசணிப் பூதான்.

தற்போது வண்ண வண்ணப் பொடிகளில் கோலம் போடுகிறார்கள். அந்தக் கோலங்கள் அழகாகவும் இருக்கும். ஆனால், கோலங்களைப் போட சுத்தமான பச்சரிசி மாவைத்தான் பயன்படுத்தவேண்டும். பச்சரிசி மாவைக் கொண்டு போடப்படும் கோலம், அழகாகவும் தூய வெண்மையில் பளிச்சென்றும் இருப்பதுடன், எறும்பு போன்ற ஜீவன்களுக்கு உணவாகவும் இருக்கிறது. அதனால் எறும்பு போன்ற ஜீவன்களுக்கு உணவளித்த புண்ணியமும் நமக்குக் கிடைக்கிறது. அதன் நடுவில் பசுஞ்சாணத்தை உருட்டி வைத்து, அதன் மீது மஞ்சள் நிற பூசணிப் பூவை செருகி வைப்பது மங்களத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

Pumpkin flower

முற்காலத்தில் கோலத்தின் நடுவில் மஞ்சள்நிற பூசணிப் பூவை வைப்பதில் ஒரு நடைமுறை இருந்தது. யாருடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருக்கிறார்களோ, அவர்களுடைய வீட்டில்தான் கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைப்பார்கள். அந்தத் தெருவின் வழியாக நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு வருபவர்கள், கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ பெண் அல்லது பிள்ளை இருந்தால் பேசி முடிப்பார்கள். மேட்ரிமோனி போன்ற வசதிகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் இந்த நடைமுறை மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

காலப்போக்கில் இந்த நடைமுறையை அனைவருமே கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும், வீட்டுக்கு அழகு சேர்ப்பதுடன், மங்களத்தின் அடையாளமாகவும் திகழும் மார்கழிக் கோலம் வரவேற்கத்தக்கதுதானே!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement