Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல்... ஏன், எதற்குக் கொண்டாட வேண்டும்? #Pongal

மாதங்கள் பன்னிரண்டிலும் தனிப்பெரும் மகிமை பெற்றது 'தை' மாதம். அகத்தியா் முதலான உத்தமா்கள் பலா், பார்வைக்குச் சிறியவா்களாகத் தோன்றினாலும், சக்தியில் மிகவும் பெரியவா்களானவா்கள். அதுபோல, 'தை' என, ஒற்றை எழுத்தால் ஆன இம்மாதம்தான், மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனச் சொல்லி, சூரியன் தன் பாதையை மாற்றிக்கொண்டு போகும் விஞ்ஞான உண்மையைச் சொன்னது இம்மாதம். உலகெங்கிலும் 'தமிழா் திருநாள்' எனப் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதும், இம்மாதத்தில்தான். சூரியன் இல்லாவிட்டால், உலகில் எதுவுமே நடைபெறாது. அனைவரும் வாழ, அனைத்தும் வாழ, நாள்தோறும் வலம்வரும் சூரியனுக்கு நன்றி செலுத்துமுகமாகவே , இப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய வழிபாட்டைப்பற்றி, வேதம் விசேஷமாகச் சொல்கிறது.

பொங்கல்

உலகம் உவப்ப வலன் ஏற்பு திரிதரு
பலா் புகழ் ஞாயிறு  
                                                        - நக்கீரா்.
தயங்கு திரைப் பெருங்கடல் உலகுதொழத்
தோன்றி வயங்கு கதிர்  
                                                       - அகநானூறு.
முந்நீா் மீமிசை பலா் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடா்
                                                            - நற்றிணை.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
                                                                           (சிலப்பதிகாரம்) 
- எனப் பழந்தமிழ் நூல்கள் பலவும் பகலவனைப் போற்றியிருக்கின்றன. சூரியனைப் பற்றிப் பல மொழிகளில் பாடல் நூல்கள் இருந்தாலும், சூரியனைப் பற்றிய அபூா்வமான நூல், தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. அந்த நூலின் பெயா் 'ஞாயிறு ஆயிரம்'. அதை எழுதியவா் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். அந்த நூலில் சூரியனைப் பற்றி, ஆயிரம் பாடல்களுக்கு மேல் உள்ளன.  

சூரியனின் பயணமும் அதையொட்டிய நம் பயணமும்: 

சூரியன் தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பதே, `மகர ரவி’ எனப்படும். அதுவே உத்தராயன புண்ணியகாலம். இந்த உத்தராயன புண்ணிய காலத்தில்தான், தை மாதம் தொடங்குகிறது. தை மாதப் பிறப்பு 'பொங்கல்' திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் வாழ உதவும் சூரியனையும் அவனால் விளையும் மங்கலங்களையும் வரவேற்குமுகமாக, மார்கழி மாதக் கடைசி நாளன்று 'போகிப்பண்டிகை' கொண்டாடப்படுகிறது. உதவாத, தேவையற்ற பழைய பொருள்களை எல்லாம், தீயில் போட்டுப்பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடிப்போம். அதுபோல, நமக்கு உதவாமல் நம் முன்னேற்றத்துக்குப் பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கும், கோபம், பொறாமை முதலான தீயகுணங்களையெல்லாம் தெளிந்த நல்லறிவு எனும் ஞானத்தீயில் போட்டுப் பொசுக்கி, நம் உள்ளமாகிய வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பதே 'போகி'.  

மற்றொரு கதையும் உண்டு. ஒருசமயம் கண்ணனிடம் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழை பெய்யச் செய்து, கண்ணனையும் கோபாலா்களையும் அழிக்க முயன்றபோது, கண்ணன் கோவா்த்தன மலையையே பாதுகாப்பு அரணாகக் கொண்டு கோபாலா்களைக் காத்தார். ஆணவம் அடங்கிய இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டினான். தன்னிடமிருந்த ஆணவம் எனும் தீயகுணத்தைவிட்டு, இந்திரன் கண்ணனிடம் பணிந்த நாளே போகி. இந்திரனுக்கு 'போகி' என்றும் பெயருண்டு. அதன்காரணமாக அவன் ஆணவம் நீங்கிய இந்நாள் 'போகி' எனப்பட்டது.

தை மாதம் முதல் நாளன்று - பொங்கல்; தமிழா் திருநாள் என்றெல்லாம் அழைத்தாலும், இத்திருநாளை 'உழவா் திருநாள்' என்று அழைப்பதே பெருமை. 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என வள்ளுவரும் , 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்' என பாரதியும், 'தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோட போறவரே எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்ன ஆகும்' எனக் கண்ணதாசனும் பாடியபடி, உழவின், உழவா்களின் பெருமையை உணா்த்தும் திருநாள் இது.

pongal

மேலும், நாம் பற்பலத் தெய்வங்களைச் சொன்னாலும், வழிபட்டாலும், பிரத்யட்சமாக நேருக்குநேராகக் காணக்கூடிய ஒரே தெய்வம் உலக அளவில் சூரியன் மட்டுமே . சூரியன் இல்லாவிட்டால் உலக இயக்கமே இருக்காது. நம்மை வாழவைக்கும் அந்தச் சூரியனுக்கு , நன்றி மறவாமல் நன்றிக்கடன் செலுத்தும் நாளே இந்த நாள். சூரியனையும் அதன் சக்தியையும் நன்குணா்ந்த முன்னோர்கள், அதன் காரணமாகவே, சூரியன் தன் பாதையைத் திருப்பும் இந்த நாளைச் சூரிய வழிபாட்டுக்கு உரிய திருநாளாக வைத்தார்கள். 

பொங்கலுக்கு மறுநாள் 'மாட்டுப்பொங்கல்'  உழவரின் உழைப்பும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளின் உழைப்பும் சோ்ந்ததே , நாம் உண்ணும் உணவு. அதன் காரணமாகவே மாடுகளை வழிபடும்விதமாக, நன்றி மறவாமல் 'மாட்டுப்பொங்கல்' திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு `ஜல்லிக்கட்டு’ என்ற பெயரில் வீர விளையாட்டுகள் நடைபெறும். 

அதைப் பற்றிய ஒரு கதை: உழவா் அறுவடை முடித்து மலைபோல் நெல்லைக்குவித்து, மனைவியை அழைத்துக் காட்டி,"எல்லாம் ஐயா உழைப்பாக்கும்" எனப் பெருமைபடச் சொன்னார். அப்போது அங்கிருந்த மாடு, எதற்காகவோ தன் தலையை ஆட்ட, அதைக்கண்ட மனைவி, "நீங்கள் உங்கள் உழைப்பென்கிறீா்கள். ஆனால் மாடோ இது தன் உழைப்பு என்கிறதே..." எனச் சொல்ல, "இந்த மாடா, நானா? பார்த்துவிடுகிறேன்" என உழவா் மாட்டை அடக்குவதில் முனைந்தார். அதை முன்னிட்டே ஜல்லிக்கட்டு வந்தது என்றொரு கதையும் உண்டு. 

பொங்கல்

 

மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல். ஒவ்வோர் ஊரிலும் உள்ளூா்க்கலைஞா்கள், ஊா்வாழப் பாடுபடும் பொது உழைப்பாளிகள் எனப் பலா் இருப்பார்கள். அவா்களையெல்லாம் ஊா்ப்பெரிய தனக்காரா்கள் அழைத்து, நல்லமுறையில் அவா்களுக்கு மரியாதை செய்து அவா்களை கௌரவிப்பார்கள். உழைப்பும் அதற்கு மரியாதையும் ஒன்றை ஒன்று கண்டுகொள்ளும் நாளிது. உணவை வீணாக்காமல் இருப்பதும், நன்றி மறவாமல் இருப்பதும், உழைப்பின் மேன்மையை உணா்ந்து அதை மதிப்பதும், அனைத்தையும் அன்புமயமாகப் பார்ப்பதும், பொங்கல் பண்டிகையின் அடிப்படை உண்மைகள். எனவே, அதை உணா்ந்து செயல்பட்டால் உயா்வுதான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement