அன்னை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அக்னிப் பிரவேசம்செய்த  நாள் இன்று

தீமைகள் ஓங்கி நன்மைகள் அழியும் காலங்களிலெல்லாம் அன்னை ஆதிபராசக்தி நீதியைக் காப்பாள் என்பது நம்பிக்கை. அப்படி அன்னை ஆதிபராசக்தி ஒரு மானிட வடிவெடுத்து, தன்னை நம்பிய மக்களைக் காத்து ரட்சித்தார். அதுவே, ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி வடிவம் எனப்படுகிறது. ஆந்திர வைஸ்ய குல மக்களின் அதிதேவதையான ஸ்ரீவாசவி அம்மன் அவதரித்த தலம், மேற்கு கோதாவரிக் கரையருகே இருக்கும் பேனுகொண்டா நகரம். 

ஸ்ரீவாசவி

ஈசனின் சாபத்தால், வைஸ்ய குல தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார் அன்னை சக்தி. வாஸவாம்பாள் என்ற வாசவிதேவி, பருவமடைந்ததும் பேரழகியாக விளங்கினார். அந்த அழகே அவருக்கு ஆபத்தானது. ஆம், அண்டை நாட்டு அரசர் விஷ்ணுவர்த்தனர்  வாசவிதேவியை மணம் முடிக்க வற்புறுத்தித் தொல்லைசெய்தார். ஆனால் வாசவிதேவியின் பெற்றோர், உற்றார் உறவினர், மன்னனுக்கு  மணம் முடிக்க மறுத்தனர். இதனால், இரு நாடுகளும் போர்ச்சூழலைச் சந்திக்கவேண்டிவந்தது. ஒரு பெண்ணுக்காக ஒரு நாடே அழிவதா என்று பலரும் வாசவிதேவியின் சுற்றத்தை எதிர்க்கத்தொடங்கினர். தன்னால் உண்டான கலகத்தைத் தானே முடிக்க எண்ணி, ஸ்ரீவாசவி தேவி தனது பெற்றோர், உற்றார் உறவினரோடு (102 பேர்) தீயில் விழுந்து மாய்ந்தார். அதைக்கேட்டு விஷ்ணுவர்த்தனரும் உயிரிழந்தார்.

கன்னிகா பரமேஸ்வரி

சக்தி வடிவமாகத் தோன்றி, கன்னிகாபரமேஸ்வரி எல்லோருக்கும் அருள்பாலித்தாள். ஒரு குலத்தையே காத்த ஸ்ரீவாசவியின் தியாகம் போற்றப்பட்டது. அவள் அன்னை சக்தியின் வடிவமாக வணங்கப்பட்டாள். தை மாத அமாவாசை தினத்துக்கு அடுத்த  இரண்டாவது நாளான சுக்ல துவிதியை நாளன்றுதான், அன்னை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி தீயில் பாய்ந்தார். இதனால், அன்றைய தினம் கன்னிகா பரமேஸ்வரி  விஸ்வரூப நாள் என்றும், அன்னை வாசவி ஆத்மார்ப்பண நாள் என்றும் இந்தியாவெங்கும் இருக்கும் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. அன்னை ஸ்ரீவாசவி கன்னிகாபரமேஸ்வரி அக்னிப்பிரவேசம் செய்த  நாள் இன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!