சபரிமலை ஐயப்ப ஸ்வாமியின் கோயில் நடை இன்று அடைக்கப்படுகிறது | Sabarimala Sree Dharmasastha Temple

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (20/01/2018)

கடைசி தொடர்பு:08:04 (20/01/2018)

சபரிமலை ஐயப்ப ஸ்வாமியின் கோயில் நடை இன்று அடைக்கப்படுகிறது

கேரளாவின் மிக முக்கிய வழிபாட்டுத்தலம், சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சந்நிதானம். பத்தனம்திட்டா மாவட்டத்தில் 18 மலைகளுக்கிடையே அமைந்துள்ளது சபரிமலை. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஐயப்பன், கானகப்பிரியனாக, கனகச்சிலை ரூபனாக வீற்றிருப்பது சபரிமலையில்தான். இங்கு, மாதம்தோறும் குறிப்பிட்ட நாள்களில் ஆலயம் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தாலும், மண்டல பூஜையும், மகர ஜோதி விழாவுமே சிறப்பானது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது.

ஐயப்ப ஸ்வாமி

இந்த ஆண்டு நடைபெற்ற மண்டல, மகர பூஜைகளில் பல லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப ஸ்வாமியைத் தரிசனம்செய்தனர். மண்டல பூஜைக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை சந்நிதானம், டிசம்பர் 26 வரை பல்வேறு பூஜைகள், ஆராதனைகளால் சிறப்புக் கொண்டிருந்தது. கடந்த 26ல் மண்டல பூஜை முடிந்ததும் சபரிமலை சந்நிதானம் மூடப்பட்டது. பின்னர் மகர ஜோதி பூஜைக்காக மீண்டும் டிசம்பர் 31-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு  ஜனவரி 14-ம் நாள் மகர ஜோதி விழா சிறப்பாக நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் காந்த மலை ஜோதியை, கற்பூரப் பிரியனை கண்டு தரிசித்து அருள்பெற்றார்கள். மகர ஜோதி விழா நிறைவு பெற்றதையொட்டி, நேற்றுவரை சபரிமலை சந்நிதானம் திறந்திருந்தது. பக்தர்களும் ஸ்ரீஐயப்பனைக் கண்டு தரிசித்தார்கள்.

சபரிமலை

கடந்த 18-ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்றோடு (19-ம் தேதி) ஐயப்ப ஸ்வாமியின்  தரிசனத்தை முடித்துக்கொண்ட சந்நிதானம், இன்று (20-1-18) காலை ஐயப்பனின் குலத்தவர்களான பந்தளம் அரச குடும்பத்தினருக்காக சிறப்பு பூஜைகளைச் செய்தது. அரச குடும்பத்தினரின் வழிபாட்டுக்குப் பிறகு, காலை 7 மணி அளவில் கோயில் நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாதாந்திர பூஜைகளுக்காக மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.