‘அன்பானவர்களே அழகானவர்கள்’ – பைபிள் கதைகள்! #BibleStories

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய பைபிள் கதைகள், உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தையும் பூமியையும் இங்கு வாழும் புல் முதற்கொண்டு மனிதன் வரை பல கோடி உயிரினங்களையும் படைத்தார். அத்துடன் நில்லாமல், அவை அவை அதனதன் போக்கில் வாழ்வதற்கான சகல வசதிகளையும் அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வயல்வெளிகளையும் வனாந்திரங்களையும் பச்சைப் பசேலென படைத்தார்.  அவற்றுக்காக செழுமையான  வற்றாத நீர்நிலைகளையும் தந்து அவற்றைப் பாதுகாக்கிறார்.  

பைபிள்

இறைவன் தனது சாயலில் மனிதனைப் படைத்ததாகவும், அவனுக்குத் துணையாக பெண்ணைப் படைத்ததாகவும் வேதாகமம் கூறுகிறது. ஆனால், அவரின் படைப்பில் உருவான உயிர்களிலேயே மனிதன்தான் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆட்பட்டுக் கிடக்கின்றான். 

ஆசை பேராசையாகி, பேராசை சுயநலமாகி விட்டது. சுயநலம், கோபம், போட்டி, பொறாமை, வெற்றி, தோல்வி, விரக்தி எனப் பெருகி சக மனிதனையே நேசிக்கமுடியாத நிலைக்குப் பலரும் போய் விட்டனர். ஆனால், கடவுள் இப்படிப்பட்ட உலகையா விரும்பினார்? அன்புமயமான உலகைப் படைத்தார். 'அன்பானவர்களே அழகானவர்கள்' என எல்லா மனிதர்களையும் உணரப் பண்ணுகிறார். ஆனாலும் மனிதர்களில் பலர் மனம் திரும்பாத நிலையையே பார்க்க முடிகிறது. இப்படிப்பட்டநிலையில் மனம் திரும்புதலில்தான் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி ஒரு கதையின் வழியாக விளக்குகிறார்.

இயேசுநாதர்

மலையும் நதிகளும் கடலும் சார்ந்த ஊர் அது. அந்த ஊரில், ஆடுகளை பராமரித்து மேய்க்கும் மேய்ப்பன் ஒருவன் இருந்தான். தினமும் காலையில் அவனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு போய், மலை அடிவாரத்தில் இருக்கும் புல்வெளியில் மேய விடுவான். 

மதியம், வெயில் உச்சிக்கு வரும்போது, அங்குள்ள குளத்து நீரைப் பருகச் செய்வான். போதாக்குறைக்கு அங்குள்ள குளக்கரையில் இருக்கும் மரங்களிலிருந்து பசுந்தழைகளை அறுத்து வந்தும் போடுவான்.  

மாலைநேரம் வந்துவிட்டால், எல்லா ஆடுகளையும் நீர் வற்றிய சிறு ஓடையில் ஒன்றாகச் சேர்ப்பான். அப்படிச் சேர்த்தபிறகு தன்னிடமுள்ள ஆடுகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? எனப் பார்த்தபிறகே அங்கிருந்து புறப்படுவான். அந்தி நேரம் சூரியன் மேற்கே மறையும் நேரம் அவற்றை ஒருசேர ஓட்டிச் சென்று தனது கொட்டிலில் அடைத்து வைப்பான். 

இயேசு

ஒருநாள் மாலைநேரம் அவனது மந்தையில் 99 ஆடுகள் மட்டுமே இருந்தன. ஒரே ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. 'அந்த ஆடுமட்டும் எங்கே போயிற்று?' எனத் தேட ஆரம்பித்தான். சூரியனும் அஸ்தமிக்கத் தொடங்கிவிட்டான். நேரமும் கடந்து போய்க்கொண்டிருந்தது. இருள் கவ்வியபோது வழிதவறிப்போன ஆட்டை அவன் கண்டுபிடித்தான்.

சொல்லமுடியாத ஆனந்தத் துள்ளலுடன் அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கி தன் தோள்களில் வைத்துக் கொண்டாடியபடியே மற்ற ஆடுகளையும் ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பார்ப்போரிடமெல்லாம் அந்த நிகழ்ச்சியைச் சொல்லிக் குதூகலித்தான்.  

இந்தக் கதையைப் போலவே 'மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்பும் ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

இறைவாழ்விலிருந்து வெகுதூரம் விலகிப்போய், உலகபூர்வமான விஷயங்களில் தன் மனதையும் உடலையும் செலுத்தி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, வழிதவறிப் போன ஆடுகளுக்காக நம் மேய்ப்பன் காத்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!