செய்யும் வேலைகளில் நேர்மையாக இருங்கள்! அதுவே சிவ வழிபாடு

செய்யும் வேலைகளில் நேர்மையாக இருங்கள் அதுவே சிவ வழிபாடு என்று நமது ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. அவரவர்களின் பணிகளை ஈடுபாடோடு செய்து வந்தால் போதும் அதைவிட உயர்ந்த பூஜையே இல்லை. சிவநாமத்தையே சுவாசமாகக் கொண்டவர் பாலாச முனிவர். எந்நேரமும் சிவ தியானத்தில் இருப்பதையே வாழ்வாகக் கொண்டவர். இவரை சந்திக்க ஆசிரமத்துக்கு ஒருவர் வந்திருந்தார். முனிவரின் சீடரோ ஸ்வாமி சிவ தியானத்தில் இருப்பதாகக் கூறி மறுநாள் வரச்சொன்னார்.

சிவ வழிபாடு

மறுநாளும் அவர் வர அதே பதில் வந்தது. இப்படியே ஐந்து நாள் மறுக்கப்பட்டதும் வந்தவர் கோபமானார். அங்கிருந்து சென்ற அவர், ஜன்னல் வழியே பார்க்க பாலாச முனிவர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். வந்தவருக்கோ கடும் கோபம். சீடரைத் தாண்டி உள்ளே சென்று முனிவரிடம் "இது தான் உங்கள் சிவ தியானமோ?" என்று கேட்டார். முனிவரும் "கோபப்படாதே மகனே, என்னுடைய எல்லா செயல்களும் சிவனைக் குறித்த தியானமே, உண்ணாமல் இருந்தால் வாழ முடியுமா? பிறகு என் சிவனை தியானிக்க முடியுமா? எனவே என்னுடைய எல்லா செயல்களும் சிவனை தியானிக்கவே" என்று கூறி அமைதியாக உண்ணத்தொடங்கினார். வந்தவர் தெளிவாகி முனிவரை வணங்கிச் சென்றார்.

இதுமட்டுமா? ஒருமுறை பாலச முனிவரின் தியானத்தை மெச்சி  சிவனும் சக்தியும் அவரது ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது கிழிந்த துணியை தைத்துக் கொண்டிருந்த முனிவர், அவர்களை கண்டு வணங்கி, அவர்களை மரநிழலில் அமர வைத்து விட்டு மீண்டும் துணியை தைக்க தொடங்கிவிட்டார். சற்றுநேரம் பொறுத்துப் பார்த்த சிவனும் சக்தியும் முனிவரை நோக்கி 'உங்கள் தியானத்தை மெச்சி உங்களுக்கு வரமளிக்க வந்துள்ளோம். என்ன வரம் வேண்டும் கேளுங்கள்' என்றார்கள். முனிவரோ 'உங்களின் தரிசனமே எனக்கு போதும், என் வேலையை ஒழுங்காகச் செய்ய வரமருளுங்கள்' என்றார்.

வழிபாடு

'இல்லை உங்களின் தியானத்துக்கான வெகுமதியாக ஏதும் வரம் கேளுங்கள்' என்று வற்புறுத்தியதும், அவர் 'தைக்கும் இந்த ஊசியின் பின்னால், சிக்கில்லாமல் நூல் வரவேண்டும் என்று வரமருளுங்கள்' என்றாராம். இவர்கள் தான் உண்மையான ஞானிகள். இதை அன்னை சக்திக்கு உணர்த்திய பரமன் முனிவரின் வேலையை கெடுக்காமல் அவரை ஆசிர்வதித்து விட்டு சென்றாராம். இது கதையாக இருந்தாலும் இது சொல்லும் பாடம், செய்யும் தொழிலை நேர்மையாக செய்யுங்கள், அதுவே சிறந்த வழிபாடு என்பது தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!