வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (29/01/2018)

கடைசி தொடர்பு:18:51 (29/01/2018)

அத்தையால் வஞ்சிக்கப்பட்ட நீலகேசி, தெய்வமான கதை!

யற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் மலைகளும், அடர் காடுகளும், அருவிகளும், ஓடைகளும் கண்ணுக்கு விருந்தளிக்கும். குமரி மாவட்டத்தின் குலசேகரம் அருகே காடுகள் சூழ்ந்து அமைந்துள்ளது இட்டகவேலி கிராமம். இந்த அழகிய கிராமத்தின் அடையாளமாக நீலகேசி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

நீலகேசி அம்மன் கோயில்

கேரள கட்டடக்கலை மரபில் கட்டப்பட்டுள்ள கோயிலின் தோற்றம் ஈர்க்கிறது. கோயிலுக்குள் மூன்று கருவறைகள் நேர்க்கோணத்தில் அமைந்துள்ளன. நடுவில் நீலகேசி அம்மன் கருவறை, மேற்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய தாயின் கருவறை, கிழக்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய பாட்டியின் கருவறை உள்ளன. இந்த மூன்று கருவறைகளுக்குள்ளும், ஒரு பெண் தலைமுடியை விரித்து வைத்தது போன்ற பீடங்கள் காணப்படுகின்றன. இப்பீடங்கள் 'முடிப்புரையம்மன் பீடங்கள்' என்று மக்களால் அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் நீலகேசி அம்மனைக் குறிக்கும் தலைமுடி வடிவிலான பீடத்தை ஓர் ஓலைப்பிறையில் வைத்து வழிபட்டனர். தலைமுடியைப் பிறைக்குள் வைத்து வழிபட்டதால் முடிப்பிறை அம்மன் என்று மக்கள் அழைத்தனர். அச்சொல் மருவி முடிப்புரையம்மன் என்று ஆனதாக மக்கள் கூறுகின்றனர். கருவறையில் உள்ள பாட்டியின் பீடத்தின் இருபுறமும் இரண்டு சிறிய சிலைகள் அமைந்துள்ளன. அதில் ஒரு சிலை பாட்டியின் பேரக்குழந்தை என்றும் மற்றொன்று வெள்ளிப் பிள்ளை என்றும் கூறுகின்றனர் மக்கள்.

தொடக்க காலத்தில், கணியர் மற்றும் நாயர் சமூக மக்கள் வழிபட்ட நீலகேசி அம்மனை இன்று, அனைத்து மக்களும் வழிபடுகின்றனர். நீலகேசி அம்மனின் தோற்றம் குறித்து ஒரு கதை அப்பகுதியில் வழக்கிலுள்ளது. கதையைப் பார்ப்போம்...

நீலகேசி அம்மன் கோயில் கொண்டிருக்கும் இட்டகவேலி பகுதியில் பல தலைமுறைகளுக்கு முன்பாக பனங்கோட்டு நாயர்கள் அதிகாரம் செலுத்தி வந்தனர். அதே பகுதியில் மாந்த்ரீகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கணியர் குடும்பமும் வசித்து வந்தது.

அந்தப் பகுதியில் நாயர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வாழ்ந்தாள். கணவனை இழந்துவிட்டதால், தன் அம்மா வீட்டில் அடைக்கலமாகி வசித்து வந்தாள். அவளுக்கு ஒரே மகள். பெயர் நீலகேசி. நீலகேசிக்கு ஒரு மாமன். நீலகேசியை மாமனின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. தன் கணவனும் மாமியாரும் இல்லாத நேரத்தில் நீலகேசியைப் பல வகைகளிலும் கொடுமைப்படுத்தினாள். தன் கணவனிடமும் அவளைப் பற்றித் தவறாகக் கூறி, அவர் மனதிலும் நீலகேசியின் மீது வெறுப்பு ஏற்படச் செய்தாள். எப்படியும் அவளை வீட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்றும் முடிவு செய்தாள்.

ஒருநாள் நீலகேசியை அழைத்தவள், அவள் கையில் ஓர் ஓட்டுச் சிரட்டையைக் கொடுத்து, அருகில் உள்ள கணியன் வீட்டுக்குப் போய் அடுப்புப் பற்ற வைக்க நெருப்புக் கங்கு வாங்கிவரச் சொன்னாள். அப்பாவி நீலகேசியும் அத்தையின் சூழ்ச்சி தெரியாமல் நெருப்புக் கங்கு வாங்கிவரச் சென்றாள். வாங்கி வரும் வழியில் ஓட்டை சிரட்டையிலிருந்த நெருப்புக் கங்கு உள்ளங்கையில் விழுந்து சுட்டது. நீலகேசி சிரட்டையை மறு கையால் பிடித்துக்கொண்டு, சூடு பட்ட கையை வாயில் வைத்துச் சப்பினாள்.

அத்தைக்காரி எதிர்பார்த்ததும் இதைத்தான். நீலகேசி வாயில் கையை வைத்துச் சப்பியதைக் கண்ட அத்தைக்காரி, ''யார் வீட்டிலோ எதையோ வாங்கித் தின்றுவிட்டு இப்படி கையைச் சப்பிக்கொண்டு வருகிறாயே, குல மானத்தையே கெடுத்துவிட்டாயே'' என்று பலவாறாகத் திட்டித் தீர்த்தாள். கணவன் வந்ததும் அவனிடமும் கூறி அடிக்கத் தூண்டினாள். மாமன்காரனும் மனைவி சொன்னதை நம்பி, நீலகேசியை பிரம்பால் அடித்தான். அடி தாங்கமாட்டாத நீலகேசி, ''நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்று கதறியும் மாமன் நம்பாமல் தொடர்ந்து அடித்தான்.

நீலகேசி அம்மன்

வலி பொறுக்க முடியாத நீலகேசி, ஓடிச் சென்று பாம்புகள் நிறைந்த புதர்ப் பகுதியில் மறைந்துகொண்டாள். மாமன் அடித்த வலி பொறுக்க முடியாமல் அழுதுகொண்டிருந்தாள். அந்த வழியாக மாந்த்ரீகத் தொழில் செய்துவிட்டு வந்துகொண்டிருந்த பாண்டியநாட்டுக் கணியர் ஒருவர், நீலகேசி அழுவதைப் பார்த்து அவளிடம் வந்தார். நடந்ததை கேட்டு மனம் வருந்திய கணியர், அவளிடம் இரக்கம் கொண்டு தான் வைத்திருந்த இளநீர், பழம், அவல், பலா ஆகியவற்றைத் தின்பதற்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். நீலகேசியும் பசி மிகுதியால் அவற்றை உண்டாள். வெளியில் சென்ற தன் மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பாததால் பதறிப்போன நீலகேசியின் தாய், கணியர் மூலம் மகள் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு வந்து அழுதுகொண்டிருந்த மகளுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றாள். செல்லும் வழியில் குளத்தில் நீராடிவிட்டுப் போகலாம் என்று நீலகேசி கூறவே, மகளை மட்டும் குளத்தில் நீராடிவிட்டு வரும்படிக் கூறினாள். நீராடச் சென்ற நீலகேசி குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டாள். அதிர்ச்சியடைந்த தாயும் குளத்தில் இறங்கி உயிரை விட்டாள். செய்தியைக் கேள்விப்பட்ட நீலகேசியின் பாட்டியும் தன் கையில் இருந்த மற்றொரு பேத்தியுடன் குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டாள்.

நடந்த விஷயம் ஊரெங்கும் பரவியது. ஊர்மக்கள் குளத்தில் இறங்கி எவ்வளவு தேடியும் யாருடைய உடலும் கிடைக்கவில்லை. ஏழுநாள்கள் சென்ற பிறகு நீலகேசியும் மற்றவர்களும் உயிரை மாய்த்துக்கொண்ட குளத்துக்கு அருகில் இருந்த மற்றொரு குளத்தில் நீல நிறமுடைய மூன்று கற்றை முடிகள் மிதப்பதைக் கண்ட சிறுவன், ஊர்மக்களிடம் வந்து கூறினான். ஊரார் திரண்டு வந்து குளத்தில் இறங்கித் தேடியபோது, மூவரின் முடியும் யாருடைய கையிலும் சிக்காமல் மறைந்துவிட்டது.

அதிர்ச்சியடைந்த மக்கள், கோட்டூர்கோணம் சோதிட ஆசானை அழைத்துக் குறி கேட்டனர். அப்பொழுது ஆசான், ''குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டவர்கள் பத்ரகாளியின் பக்தர்கள். எனவே, பத்ரகாளி மாமன் குடும்பத்திடம் கோபம் கொண்டு அழிக்கத் துடிக்கிறாள். பாண்டியநாட்டு கணியனை அழைத்து வந்து காளிக்குப் பூசை செய்து வழிபடுங்கள். அப்படிச் செய்தால் மூவரின் முடியும் கிடைக்கும். அந்த முடியை வைத்துக் கோயில் கட்டி வழிபட்டால் வரப்போகும் துன்பங்களிலிருந்து தப்பலாம்'' என்று கூறினார்.

மாமன் குடும்பமும் பாண்டியநாட்டு கணியனை அழைத்து வந்து பூசை செய்தனர். பிறகு கணியன் குளத்தில் இறங்கித் தேடியபோது மூவரின் முடியும் கிடைத்தது. கணியன் மூவரின் முடியையும் கொண்டு வந்து ஒரு புறையில் வைத்துப் பூசை செய்ததுடன், மற்றவர்களையும் வழிபடச் சொன்னான். குளத்தில் கிடைத்த அம்மனின் முடி நீலநிறமாக இருந்ததால், நீலகேசி அம்மன் என்றும், புறையில் வைத்து பூசை செய்ததால் முடிப்புறை அம்மன் என்றும் பெயரிட்டு மக்கள் வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது முடிப்புரை அம்மன் என்று அழைக்கிறார்கள்.

பாண்டியநாட்டு கணியனின் குடும்ப வழியினரே இன்றும் அம்மனுக்குப் பூசை செய்து வருகின்றனர். முடிப்புரை அம்மனுக்கு முடி கிடைத்த குளத்தின் அருகில் தெற்குப்பக்கத்தில் உள்ள சிறிய கோயிலே மூலக்கோயில். அந்தக் கோயிலின் வடமேற்குப்பகுதியில் வெள்ளிப் பிள்ளை அம்மன் கோயில் ஒன்றும் சிறிதாக அமைந்துள்ளது. வெள்ளிப் பிள்ளை அம்மன் கோயிலுக்குள் பீடம் எதுவும் காணப்படவில்லை. வெள்ளிப் பிள்ளை அம்மன் என்பது காளி அம்மன் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் பாட்டியுடன் இறந்த கைக்குழந்தை என்றும் தெரிவிக்கின்றனர்.

நீலகேசி

நீலகேசி அம்மனுக்கு மாலைநேரத்தில் தினப்பூசையும், வெள்ளிக்கிழமை தோறும் மதியவேளையில் சிறப்புப் பூசையும் நடத்தப்படுகிறது. பூசையின் போது பச்சரிசி, பழம், அவல்பொரி, மஞ்சள்பொடி, இளநீர், கமுகம்பூ ஆகியவை படையலிடப்படுகிறது.

நீலகேசியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாள்கள் திருவிழா நடப்பது வழக்கம். விழா தொடங்கும் முன்பு நாயர்வழிக் குடும்பத்தினரில் மூத்த ஒருவருக்குக் காப்பு கட்டுவர். அதன் பின்பு வடக்கன்குளம், தச்சநல்லூர், ஶ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து வரும் கணியர் இனப் பூசாரிகளை, பூதப்பாண்டி பகுதிக்கு மேளதாளத்துடன் சென்று எதிர்கொண்டு வரவேற்பார்கள். கணியப் பூசாரிகள் அம்மனை வழிபட்ட பிறகு வெள்ளிப் பிள்ளை, மற்றும் மூன்று முடி பீடங்களை புதிய கோயிலிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பிறகு புதிய கோயில் பூட்டப்பட்டுவிடும். பீடங்களை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அதாவது முடிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் வைத்து பூசை செய்வர். அதன்பின்பு தினமும் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.

திருவிழாவின் ஏழாம்நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சைச் சடங்குகோயிலின் சிறப்பான வழிபாட்டு முறையாக உள்ளது. எட்டாம் நாள் விளக்குப்பூசை நடைபெறும். ஒன்பதாம் நாள் அன்று நீலகேசி, அத்தையை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் கமுகுப் பிடுங்குதல் சடங்கு நடைபெறும். அதாவது, ஒரு கமுகு மரத்துக்குப் பூசை செய்து, வேருடன் பிடுங்கி, மரத்தின் ஒரு பகுதியை நீலகேசியாகவும் மற்றொரு பகுதியை மாமியாகவும் கருதி இருபக்கமும் ஆட்கள் நின்று இழுப்பார்கள். இறுதியில் நீலகேசி வெற்றி பெற்றதாக அறிவிப்பர். அதன்பின்பு கமுகமரத்தை ஓரிடத்தில் நட்டு வைப்பர். பின்னர் கமுகமரத்தின் உச்சியில் தீபம் ஏற்றி வைப்பர். பத்தாம் நாள் காளிக்கும் தாருகனுக்கும் நடந்த தாருதயுத்தம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கணியர் இன மக்களில் ஒருவர் முடிவடிவமுடைய நீலகேசி அம்மன் பீடத்தைத் தலையில் எடுப்பார். மற்றொருவர் தாருகன் வேடம் பூணுவார். இருவரும் சண்டை இடுவதுபோல பாவனை செய்வர். இறுதியில் காளி தாருகனை வெற்றி கொள்வதாகச் சடங்கு நிறைவுறும். இதுவும் நீலகேசி அத்தையை வென்றதன் குறியீடு என்று மக்கள் கூறுகின்றனர். மேலும் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டு மாலை நான்கு மணிக்குப் பொங்கல் வைத்து வழிபடுவர். விழா முடிந்த பிறகு பீடங்கள் எடுத்துவரப்பட்டு மீண்டும் புதிய கோயிலில் வைக்கப்படும். அத்துடன் விழா நிறைவுறும். விழாமுடிந்த எட்டாம் நாள் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும். அன்று பூசையுடன் அன்னதானம் வழங்கப்படும்.


டிரெண்டிங் @ விகடன்