வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (29/01/2018)

கடைசி தொடர்பு:07:53 (30/01/2018)

நாளை சந்திர கிரகணம்... திருப்பதியில் 5 மணி நேரம் மட்டுமே அனுமதி #Tirupati

திருப்பதி

அன்றைய தினம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 9:30 மணி முதல் 12:30 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும். அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த அனைத்து சேவைகள், 300 ரூபாய் சிறப்பு தரிசனம், வி.ஐ.பி தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுகின்றன.

'சந்திர கிரகணத்தின்போது, சாப்பிடக் கூடாது' என்பதால் பகல் 11 மணிக்கு அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்பட்டு, அன்னதானக்கூடம் சாத்தப்படுகிறது. திருமலையில் இருக்கும் அனைத்து ஓட்டல்களும் மூடப்படுகின்றன.

திருமலைக்கு வரும் பக்தர்கள் இதற்கேற்றாற்போல் பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளும்படி திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

சீனிவாச மங்காபுரத்தில் பிரமோற்சவம்!

திருப்பதி அருகில் இருக்கும் சீனிவாச மங்காபுரத்தில் கல்யாணவெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவம், வருகிற பிப்ரவரி 6-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா பிப்ரவரி 14-ம் தேதி சக்கரஸ்நானத்துடன் நிறைவுபெறுகிறது.

சீனிவாசமங்காபுரம்

அந்த 9 நாள்களும் திருமலையில் நடைபெறுவதைப் போன்றே சூரிய வாகனம், சந்திர வாகனம் என அனுதினமும்சுவாமி உலா வருகிறார். பிப்ரவரி 14-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. இதில் ஏராளமன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்கள். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக, திருமலையில் குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டது. விழாவில் கொடியேற்றி இனிப்பு வழங்கிய பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக்குமார் சிங்கால் பேசினார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

* திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் நடவடிக்கைகள் திறந்த புத்தகமாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும். சாதாரண மற்றும் பாமர மக்கள் எளிதாக தரிசனம் செய்யும் வண்ணம் எல்லாவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

* பக்தர்களின் பாதுகாப்புக்கென சக்திமிக்க சி.சி.டி கேமராக்கள் பொருத்தப்படும்.

வெங்கடேசப் பெருமாள்

* எஸ்.எஸ்.டி எனப்படும் 'நேரம் குறிப்பிடப்பட்ட சர்வபூபால தரிசன டோக்கன்களை' வழங்க துரித நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகின்றன. கீழ்த் திருப்பதியில் 55 இடங்களும், திருமலையில் 35 இடங்களும் இதற்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு எல்லோரும் எளிதாகவும் விரைவாகவும் சுவாமி தரிசனம் செய்துவர முடியும். இந்தத் திட்டம் மார்ச் முதல் வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரும்.

* திவ்ய தரிசனம் எனப்படும் பாதசாரிகளுக்கான டோக்கன்கள் தினமும் அலிப்பிரி வழியில் 14 ஆயிரமும், ஶ்ரீவாரிமெட்டு வழியில், 6 ஆயிரம் டோக்கன்களும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

* தினமும் கூடுதலாக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும்.

* திருமலை திருப்பதி தேவஸ்தான ஆப் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

* திருமலையில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு ஆன் லைனில் மணடபம் புக் செய்துகொள்ளும் வசதி செய்து தரப்படும்.

* திருமலையில் சேவை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு, '7 நாள் சேவை', '4 நாள் சேவை', '3 நாள் சேவை' என ஏழுமலையான் பக்தர்களுக்குத் தொண்டாற்றுவதற்கு வசதியாக அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வுசெய்யும் வசதி விரைவில் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்