தைப்பூசத் திருவிழா : திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1.30 மணிக்கே நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்காக விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்  திருச்செந்தூரில் குவிந்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது. உற்சவர் மூர்த்தியான சுவாமி அலைவாய் உகந்த பெருமாள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக தைப்பூச மண்டபத்தை அடைந்த பின், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிக்கு முன்னதாக திருக்கோயிலை அடைகிறார்.

சந்திரகிரகணத்தை முன்னிட்டு இன்று மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாற்றப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.  கிரகணத்துக்குப் பின் இரவு 8.50 மணிக்கு சந்திரகிரகணம் முடிந்த பிறகு இரவு 9.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. பின், ராக்கால அபிஷேகம், ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனையைத் தொடர்ந்து நடை சாற்றப்படுகிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை சுமார் 5 மணி நேரம் வரை சாற்றப்பட இருப்பதால், சுவாமி தரிசனத்தை கிரகணத்துக்கு முன்பு முடித்துவிட வேண்டும் என, அதிகாலை முதலே பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் குளித்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

பாதயாத்திரை வந்த முருக பக்தர்கள் வேன், ஆட்டோக்களில் சப்பரம் போல அலங்கரித்துக்கொண்டு வந்த முருகன் சிலை, திருவுருவப் படம் மற்றும் காவடி ஆகியவற்றை கடற்கரை மணலில் வைத்து பஜனைப் பாடல்கள்  பாடி சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், உதவிடும் வகையிலும் கோயில் புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் முகப்பு, கடைவீதி, கடற்கரை, நாழிக்கிணறு, அய்யா வைகுண்டபதி கோயில் ஆகிய 12 முக்கிய இடங்களில் காமிரா மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருச்செந்தூரில் முருகபக்தர்களின் பஜனைப் பாடல்களும், அரோகரா கோஷமும் பரவசத்தை ஏற்படுத்துகிறது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!