வேண்டுதல்களுக்கு செவிமடுக்கும் அருள் நிறைந்த மரியாள் புனிதரான தினம் இன்று! #VirginOfCandelaria

ன்று தேவமாதா பரிசுத்தரான நாள். ஆம், இயேசுவின் அன்னையான தூய மரியாள் புனிதரான நாள் பிப்ரவரி 2. ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மரியாள்

இயேசு கிறிஸ்து தூய மரியாளின் வழியாகவே இந்த மண்ணுலகம் வந்தார். தூய மரியாள் இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்ததால் சொல்லொண்ணா துன்பங்களையும் வசைச் சொற்களையும் எதிர்கொண்டார். காலம் முழுக்க இயேசுவுக்காக அவர் மறைவான வாழ்க்கையையே மேற்கொள்ள வேண்டியிருந்தது. 'அருள் நிறைந்த மரியே' என்று அகிலத்தோர் புகழ்ந்தாலும் இவர் வாழ்ந்த காலம் முழுக்க, எந்த அற்புதங்களையும் செய்யாமல் பொறுமை கொண்டார். எல்லா ஞானங்களையும் அன்னை மரியாள் பெற்றிருந்தபோதும் கர்த்தருக்காக அமைதி காத்தார். இதனாலேயே உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல்களை இந்த தூய மாதாவின் வழியாகவே சொல்லி மன்றாடி வருகிறார்கள்.

மாதா

வேண்டுபவர்க்கு வேண்டியதை அருளும் தேவமாதா டிசம்பர் 25-ம் தேதி தேவகுமாரனான இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அன்றிலிருந்து அக்கால முறைப்படி 40 நாள்கள் கடுமையான விரதம் இருந்து தேவனைப் பாதுகாத்தார். வீட்டைவிட்டு வெளியே வராமல் பத்திய உணவுகளை மட்டுமே உண்டு பேறுகால வலிகளைக் குணப்படுத்திக்கொண்டார். 40 நாள்கள் விரதத்துக்குப் பிறகு, தூய மரியாள் பிப்ரவரி 2-ம் தேதி விரதத்தை முடித்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவை தங்களது கோயிலுக்கு அழைத்துச் சென்று தேவனுக்கு அர்ப்பணித்தார். பேறுகால அவஸ்தைகள் நீங்கி புனிதரான தேவமாதா, தேவனால் அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். இதே நாளில்தான் இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்; ஆகவே 'ஆண்டவரை அர்ப்பணிக்கப்பட்ட தினம்' என்றும் இந்நாள் அழைக்கப்படுகிறது.

தேவமாதா

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு 40-வது நாள் வரும் இந்த அர்ப்பணிப்பு நாளே கிறிஸ்துமஸ் பண்டிகையின் இறுதி நாளாகவும் கருதப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் ஜோசப்பும் மரியாவும் எருசலேமில் இருந்த ஆலயத்தில் கிறிஸ்துவை அர்ப்பணித்தார்கள் எனவும், இது மோசேயின் கட்டளைப்படி நடத்தப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு மரபுவழி திருச்சபை குறிப்பிட்டுள்ள 12 பெருவிழாக்களில் இந்நாளும் ஒன்று. மரியாள் புனிதரான நாள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளை உலகின் சில நாடுகளில் 'கேன்டில்மஸ்' (Candle mas) என்ற பெயரில் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். பிரகாசிக்கும் மெழுகுதிரிகளை ஏந்தி இந்த நாளில் அன்னை மரியாளையும், தேவகுமாரன் கர்த்தரையும் மகிமைப்படுத்துகிறார்கள். ஆலயங்களில் நடைபெற்ற திருப்பலிக்கு முன்பாக, ஏற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு வீதிகளில் பவனியாக மக்கள் பாடிக்கொண்டு வருவார்கள். எனவேதான் இந்த நாள் 'கேண்டில்மஸ்' (Candle mas) என்றும் அழைக்கப்பட்டது. இப்போதும் இந்த நடைமுறை சில நாடுகளில் உள்ளது.

மாதா திருவிழா

கத்தோலிக்க திருச்சபையில் இயேசு கிறிஸ்துவை அர்ப்பணித்த இந்த நாள் தேவகுமாரன் முதன்முதலாக ஆலயத்தில் நுழைந்த புனித நாளாகவும் போற்றப்படுகிறது. ஐரோப்பாவின் பல பகுதிகளில் இந்த நாளில் கிரீப் (Crepe) எனப்படும் மாவு, பால், முட்டை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அப்பத்தை உண்ணும் வழக்கம் உள்ளது. இந்த அப்பத்தை தயாரிக்கும்போது ஒரு கையில் நாணயத்தை வைத்துக்கொள்வதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது. இதனால் அடுத்த கிறிஸ்துமஸ் வரை தங்களுக்கு உணவோ, பணமோ கிடைக்காமல் போகாது என்பதே இந்த நம்பிக்கையின் அடிப்படை. ஸ்பானிஷ் (Spanish) நாடுகளில் இந்த விழா `Candelaria’ என்றும் அழைக்கப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட அப்பத்தையும், மெழுகுதிரிகளையும் தேவாலயத்துக்கு கொண்டு வருவது இந்த நாளின் வழக்கமாக உள்ளது.

திருவிழா

கிறிஸ்துமஸ் தினத்தில் வைக்கப்பட்ட குடில்கள், அலங்காரங்களை இந்த கேண்டில்மாஸ் தினமான இன்றுவரை வைத்திருப்பதும் சில நாடுகளில் வழக்கமாக இருக்கிறது. இந்த விழா நான்காம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் தூய மரியன்னையை மகிமைப்படுத்த 'புனிதரான மரியாள் விருந்தும்' தேவாலயங்களில் நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இந்த நாளுக்கு பொதுமுறை அளிக்கப்படவில்லை என்றாலும் கத்தோலிக்கர்களின் முக்கிய விழாவாகவே உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது.

"பேசுவதெல்லாம் பொய்யே பேணுவதெல்லாம் பவமே

ஏசுவதெல்லாம் மறையை என் தாயே - காசினியில்

நீயே இரங்கி நெறியை அருளாயேல்

நாயேனுக்கு (உ)ண்டோ நலம்!"

- என்று தேவமாதா அந்தாதி குறிப்பிடுவதைப்போல நலங்களையெல்லாம் அருளும் தேவமாதா, கர்த்தரால் எளிய மக்களின் பிரார்த்தனையை நிறைவேற்றப் படைக்கப்பட்டவர். ஒரே ஒரு மகனான ஆண்டவரை தூய மரியாள் நமக்காக ஒப்புக்கொடுத்து உயர்வடைந்தார். தியாக வாழ்வால் தேவனுக்கு அருகிலேயே வாழும் விண்ணுலக வாழ்வை உடலுடன் பெற்ற தூயவர் அன்னை மரியாள். எல்லா நிலையிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு கர்த்தரை மகிமைப்படுத்தியவர் தேவமாதா. அவர் தமக்காக ஒன்றுமே ஆண்டவரிடத்தில் கேட்காத அருமையான குணவதி. அதனாலேயே அவர் ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார். தூய ஆவியாலே கருவுற்று கர்த்தரைப் பெற்றபோதிலும் விரதமிருந்து இந்த நாளில் புனிதமடைந்தார். எண்ணில்லாத தியாகங்களால் ஏற்றம் கொண்ட புனித மரியாள் பரிசுத்தமடைந்த இந்த நாளில் நமது வார்த்தைகளால், கீர்த்தனைகளால் அவரை மகிமைப்படுத்துவோம்!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!