`இயேசு நமக்காகவும் நம் பாவங்களுக்காவும் சிலுவையில் மரித்தார்!’ - பைபிள் கதைகள் #BibleStories

கிறிஸ்தவர்களின் புனித நூலான, 'பைபிள்' இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் வரலாற்றுத் தொகுப்பாகத் தொகுக்கப்பட்டு, 'பழைய ஏற்பாடு' எனவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின் நடந்தவை 'புதிய ஏற்பாடு' எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.

இயேசு

கிறிஸ்தவ சித்தாந்தத்தின்படி கடவுள் என்பவர் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று நிலைகளில் அவர் இருப்பது, வழிவழியாக நம்பப்பட்டுவருகிறது. பிதாவானவர்தான், பூமி முதலான கிரகங்களையும், உயிர்களையும் படைத்து, தனது சாயலில் மனிதனையும் படைத்து, அவனுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கினார். அதில் மனிதன் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்கிறார். அதில் அவன் நடந்துகொள்ளும்விதத்தை வைத்து நியாயத் தீர்ப்புநாளில் தீர்ப்பு வழங்குகிறார். இதை அற்புதமான கதையின்வழியாக இயேசு கிறிஸ்து விளக்கியுள்ளார்.

திராட்சைத் தோட்ட முதலாளி ஒருவர், தனது திராட்சைத் தோட்டத்தை, வேலைக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதை அவர்களுக்கே குத்தகைக்கு விட்டுவிட்டார். அதன் பிறகு நெடுந்தூரப் பயணம் போவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டுப்போனார். முதலாளி தனது நெடும்பயணத்தை முடித்துவிட்டு, மீண்டும் வந்து சேர்ந்தார். திரும்பி வந்தவர், அருகாமையில் உள்ள ஓர் ஊரில் தங்கி, தனது தோட்டத்தின் விளைச்சலைப் பார்வையிட்டு, குத்தகை போக மீதி உள்ள பங்கைக் கேட்டு வருமாறு ஒரு பணியாளரை அனுப்பிவைத்தார். அவர்களோ அந்தப் பணியாளரை நையப்புடைத்து, எந்தப் பங்கையும் கொடுக்காமல் வெறுங்கையுடன் அனுப்பிவைத்தார்கள். சில நாள்கள் கழித்து, இரண்டாம் முறையாக வேறு ஒருவரை அனுப்பிவைத்தார். அவரையும் அவர்கள் அடித்துத் துன்புறுத்தி, காயப்படுத்தி அனுப்பிவைத்தார்கள்.

பைபிள்

இதையடுத்து திராட்சைத் தோட்ட உரிமையாளர் தனது சொந்த மகனை அனுப்பி குத்தகையை வாங்கி வரச் சொன்னார். அப்போது அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குள் இப்படிப் பேசிக்கொண்டனர். ''இவன்தான் இந்தச் சொத்துக்கு உரியவன். இவனை நாம் கொன்றுவிட்டால், இந்தச் சொத்து முழுவதும் நமக்குச் சொந்தமாகிவிடும். பிறகு, நாம் இதைப் பங்கிட்டுக்கொள்வோம்...'' அதன்படியே முதலாளியின் மகனைத் தோட்டத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் கொன்றுவிட்டனர்.

இதைக் கேட்ட திராட்சைத் தோட்ட முதலாளி, மிகுந்த கோபத்துடன் அங்கே சென்று அந்தத் தொழிலாளர்களைக் கொன்று போட்டார். அத்துடன் அந்தத் தோட்டத்தை வேறு சிலருக்குக் குத்தகைக்குவிட்டார். இந்தக் கதையில், தோட்டக்காரராக கடவுளும் அவர் அனுப்பிய பணியாளர்களாக தீர்க்கதரிசிகளும் தோட்டக்காரரின் மகனாக இயேசு கிறிஸ்துவும் தோட்டப் பணியாளர்களாக மக்களும், தோட்டமாக இந்த உலகமும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

பைபிள் கதைகள்

இதில் ஆச்சர்யமான உண்மை ஒன்றும் இருக்கிறது. அது என்னவென்றால், இந்தக் கதையை கடவுளின் மகனாக இந்த மண்ணுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்துவே உருவகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதுதான். இதே மக்களால், தான் கொன்று போடப்படுவோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அவர் இறைவாக்கின்படி நமக்காகவும் நமது பாவங்களுக்காவும், முள் முடி தரித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்தார். எந்த எதிர்ப்பையும் காண்பிக்கவில்லை. எந்த மாயஜாலத்தையும் அவர் செய்யவில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதில்தான் உலகம் முழுவதும் கிறிஸ்தவம் மலர்ந்தது.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!