'அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அலங்காரம்..?! - என்ன நடக்கிறது மயிலாடுதுறையில்? | Abayambikai Ambal decorated in Churidar dress code. Is it right or wrong?

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (05/02/2018)

கடைசி தொடர்பு:20:45 (05/02/2018)

'அபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அலங்காரம்..?! - என்ன நடக்கிறது மயிலாடுதுறையில்?

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. இங்கு அபயாம்பிகையாக, அம்பாள் தனிச் சந்நிதியில் அருள்பாலித்துவருகிறார். தினந்தோறும் ஆறு கால பூஜை நடைபெற்றுவரும் அபயாம்பிகைக்குக் கடந்த 2-ம் தேதி, தை மாத வெள்ளிக்கிழமை என்பதால், சிறப்புப் பூஜை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அன்றைய தினம் அம்பாளுக்குச் சுடிதார் உடைபோல சந்தனக்காப்பு அலங்காரத்தை கோயில் குருக்கள் ராஜு சிவாச்சாரியார் செய்திருந்தார்.

அம்பாள் படம்

கர்ப்பக்கிரகத்திலுள்ள அபயாம்பிகை அம்பாளை இப்படியொரு வித்தியாசமான கோலத்தில் பார்த்த பக்தர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சுடிதார் அலங்கார அம்பாள் படம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.  

பரசுராமன்'`அம்பாளுக்கு இப்படி அலங்காரம் செய்யலாமா?’’ என்று ஆன்மிக அருளாளர் பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். 
''அம்பாளுக்கு  எப்படி அலங்காரம் பண்ண வேண்டும் என்பதற்கு சாஸ்திரப்படியும் ஆகமப்படியும் விதிகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு மனம்போன போக்கில், இப்படிச் செய்வது மிகவும் தவறு. டாக்டர் என்றால் கோட்,  ஸ்டெதாஸ்கோப்... என அவருக்கான உடைகள் இருக்கின்றன.

அவர் இஷ்டத்துக்குக் கைலியும் முண்டா பனியனும் போட்டுக்கொண்டு வைத்தியம் பார்க்க முடியுமா?  'அபயம்' எனத் தன்னை நாடி வருபவர்களுக்கு அடைக்கலம் தருபவருக்கு, அதுவும் கருவறையிலிருக்கும் அம்பாளுக்கு இப்படியெல்லாம் அலங்காரம் செய்வது தவறு. இந்துக் கடவுள்களை மற்றவர்கள்தான் மனம்போன போக்கில் சித்திரிக்கிறார்கள் என்றால், கோயில் குருக்களே இப்படிச் செய்வது விசித்திரமாக இருக்கிறது'' என்று கூறினார்.


இது குறித்து, ஆன்மிகப் பேச்சாளர் சாரதா நம்பி ஆரூரானிடம் கேட்டோம்... ``நிச்சயமாக அந்த குருக்கள் செய்தது, சாஸ்திரத்துக்கும் நம் கலாசாரத்துக்கும் பண்பாட்டுக்கும் விரோதமானது. இப்படிப்பட்ட அதிகப்பிரசங்கித்தனமான எல்லை மீறுதல்களைச் செய்ய எப்படி மனம் வந்தது என்பது தெரியவில்லை. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலுக்குள் சுடிதார் அணிந்துகொண்டு போக முடியுமா?   

சாரதா நம்பி ஆரூரன்நான் கல்லூரிப் பேராசியராக 33 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். 40 ஆண்டுகள் பேச்சாளராக இருக்கிறேன். இப்போது நம் கலாசாரத்துக்கு மீறிய செயல்கள் சமூகத்திலேயே நடக்கத் தொடங்கியிருக்கின்றன. 

`கம்பன் கழகத்தில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், புடவை அணிந்துதான் சொற்பொழிவாற்ற வேண்டும்’ என்று நாங்கள் வலியுறுத்தி, அதைக் கடைப்பிடிக்கவும் செய்கிறோம்.

 என்னுடைய மாணவி பர்வின் சுல்தானா. அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர். பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது, புடவையில் கலந்துகொள்ளும்படி கூறினேன். இன்று தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக வலம்வரும் அவர் எல்லா மேடைகளிலும் புடவைதான் அணிந்து செல்கிறார். அப்படி இருக்க, அம்பாளுக்குச் சுடிதார் போட்டு அலங்காரம் செய்வதெல்லாம் தகாத வேலை.

இன்றைக்குச் சுடிதார் போடுவார்கள். நாளைக்கு ஜீன்ஸ், டீ-சர்ட்டெல்லாம் போட்டுவிடுவார்கள். இப்படி ஆகம விதிகளை மீறுவதால்தான் விரும்பத்தகாத விஷயங்கள் நாட்டில் நடக்கின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது'' என்கிறார் சாரதா நம்பி ஆரூரான்.
ராஜு குருக்கள் இது குறித்து ராஜு சிவாச்சாரியாரிடம் பேசினோம்...

''அம்பாளை எப்போதும் ஒரே உருவில்தான் பார்க்கிறோம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து சுடிதாரில் அலங்காரம் செய்தேன். இதைக் கண்டு தரிசித்த பாதிப் பேர், 'நன்றாக இருக்கு' என்று பாராட்டினார்கள். பாதிப் பேர், 'அம்பாளுக்கு இதுபோல அலங்காரம் செய்வதெல்லாம் தவறு' என்றார்கள்.  

ஆதீன மேலாளர் என்னை அழைத்து, 'இனிமேல் இப்படியெல்லாம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யக் கூடாது' என்று எச்சரிக்கை செய்தார். நானும் `இனி அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்''| என்றார் ராஜுசிவாச்சாரியார்.  
திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் குருமூர்த்தியிடம் கேட்டபோது, ''ஏன் இப்படியெல்லாம் குருக்களுக்குப் புத்தி போகிறதோ... அவர் இஷ்டப்படியெல்லாம் அம்பாளுக்கு அலங்காரம் செய்யலாமா? இந்தச் செய்தி விமர்சனத்துக்கு உள்ளானதால், வழக்கத்தை மீறி சுடிதார் அலங்காரம் செய்த ராஜு சிவாச்சாரியாரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்.    

 


-
 


டிரெண்டிங் @ விகடன்