வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (05/02/2018)

கடைசி தொடர்பு:18:50 (05/02/2018)

400 வருட வீர வசந்தராய மண்டபத்தை தின்று தீர்த்த தீ!- பொக்கிஷங்களை வீணடிக்கிறோமா?!

துரை மாநகரின் பெருமைக்குக் காரணமாக விளங்குவதே அருள்மிகு மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் ஆலயம்தான். `நான்மாடக்கூடல்’, `ஆலவாய்’, `கடம்பவனம்’, `தென்கிழக்கு ஏதென்ஸ்’, `மதுரையம்பதி’, `தூங்கா நகரம்’... என்றெல்லாம் பலவாறு போற்றப்படும் நகரம் மதுரை. அந்த நகரின் நடுநாயகமாக, ஒரு தாமரை மலரைப்போல அமைந்துள்ளது மீனாட்சி அம்மன் ஆலயம்.

மீனாட்சி அம்மன்

சக்தி பீடங்களில் ஒன்றாகவும், பஞ்ச சபைத் தலங்களில் ஒன்றாகவும் அமைந்து சிவசக்திதலமாக இந்த ஆலயம் சிறப்பைப் பெற்றுள்ளது. சிறப்புகள் பல கொண்ட இந்த ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும் தீ விபத்து உண்டானதை அறிந்திருப்பீர்கள். இந்தத் தீ விபத்தில் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தை ஒட்டியுள்ள வீர வசந்தராய மண்டபம் பெரிதும் பாதிப்படைந்தது என்று தகவல்கள் வெளியாகின. கிழக்கு கோபுரத்தின் பெருமை, வீர வசந்தராய மண்டபத்தின் சிறப்புகள் எல்லாம் தெரிந்திருந்தால், இத்தனை பெருமை வாய்ந்த கலைச்செல்வங்களையா நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம் என்று கவலைகொள்வோம்.

மீனாட்சி கோயில்

 

12 கோபுரங்கள் சூழ, நான்கு திசைகளிலும் நான்கு வாயில்களைக் கொண்டு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். தெற்கு கோபுரமே 160 அடி உயரத்தில் மிகப் பெரியதாகக் காட்சியளிக்கிறது. மதுரைக்கு வருபவர்களை முதன்முதலில் வரவேற்கும் கோபுரமும் இதுதான். இது 1559-ம் ஆண்டு உருவானது. எனினும், கால அளவிலும், சிற்ப அழகிலும், அதிகமான மக்களின் நுழைவையும் கொண்ட கோபுரமாக இருப்பது கிழக்கு கோபுரம்தான். காரணம், இந்தக் கிழக்கு கோபுரத்தின் வழியே மீனாட்சி அம்மனை நேராக தரிசிக்க முடியும் என்பதுதான். மீனாட்சி அம்மனை தரிசித்த பிறகே, சிவனை தரிசிக்க வேண்டும் என்பது இங்கு ஓர் ஐதீகம். கிழக்கு கோபுரத்தின் எதிரே புது மண்டபம் அமைந்திருக்கிறது. சிற்பக்கலையின் கருவூலமாக விளங்கும் இந்தப் புது மண்டபம் 124 சிற்பத் தூண்களைக்கொண்டது. இதனருகேதான் கட்டி முடிக்கப்படாத மொட்டைக் கோபுரமும் அமைந்துள்ளது. இந்தக் கோபுரம் மட்டும் கட்டப்பட்டிருந்தால் 174 அடி உயரத்தில் பிரமாண்ட வடிவம் கொண்டு மீனாட்சி அம்மன் கோயிலின் வடிவமைப்பே மேலும் சிறப்பாகியிருக்கும் என்று கூறப்படுகிறது.

மதுரை புதுமண்டபம்

புது மண்டபத்தின் எதிரே காணப்படும் கிழக்கு கோபுரம் 1216-ம் ஆண்டு முதல் 1238-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் மாறவர்ம சுந்தர பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. 153 அடி உயர அழகிய கோபுரமாக இந்த கிழக்கு கோபுரம் காட்சியளிக்கிறது. இந்தக் கோபுரத்தின் வழியே நுழைந்ததும், காட்சி தருவது வீர வசந்தராய மண்டபம். `இந்த மண்டபம்தான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டது’ என்கிறார்கள். இந்த மண்டபத்தின் வலது புறம்தான் ஆயிரங்கால் மண்டபம் இருக்கிறது. பொற்றாமரைக் குளத்தின் மேற்குக் கரை ஓரமாக காணப்படும் இந்த வீரவசந்தராய மண்டபம், மிக விசாலமான, நீண்ட நடைபாதைகளைக் கொண்டது. இந்த வீர வசந்தராய மண்டபத்தின் இடதுபுறமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கல்யாண மண்டபம் அமைந்திருக்கிறது. வீர வசந்தராய மண்டபம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரான முத்து வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. 1609-ம் ஆண்டு தொடங்கி 1623-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் பல புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவரது காலத்தில்தான் இந்த புகழ்பெற்ற வீர வசந்தராய மண்டபமும் கட்டப்பட்டது. 7,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த அழகிய மண்டபத்தில் உள்ள கலைச்சிறப்புமிக்கத் தூண்கள் யாவும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் எழில்மிக்கவை.

மீனாட்சி கோயில்

அருள்மிகு மீனாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்புறம் உள்ள அழகுமிக்க விளக்குகள் நிறைந்த `திருவாச்சி’ ஒன்று இருப்பதைப்போலவே இந்த மண்டபத்திலும் ஒரு திருவாச்சி அமைப்பு வளைவு அமைந்திருக்கிறது. வீர வசந்தராய மண்டபம், அதை அடுத்துள்ள ஆயிரங்கால் மண்டபம் போன்றவைதான் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

மழைத்தொட்டி நந்திமதுரை கிழக்கு கோபுரத்தின் நுழைவுவாயிலாக உள்ள இந்த வீர வசந்தராய மண்டபத்தில் ஆண்டவன் சந்நிதியை நோக்கி அமர்ந்திருக்கிறது நந்தி. இந்த நந்தி சிலை அமைந்திருக்கும் அமைப்பு மிகவும் விசேஷமானது. மண்டபத்தின் நந்தியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தொட்டி, `மழைத்தொட்டி’ என்றே வழங்கப்படுகிறது. மழை வராத காலங்களில் மக்கள் இங்கு ஒன்றுகூடி, மழை வேண்டி இந்த நந்தியெம்பெருமானிடம் ஜபம், கூட்டு வழிபாடு, ஹோமம் போன்றவற்றைச் செய்வார்கள். அப்போது ஓர் ஐதீகமாக நந்தியெம்பெருமானைச் சுற்றியுள்ள தொட்டியில், மூழ்கும் அளவுக்கு நீரை நிரப்பி நந்தியெம்பெருமானை வைப்பார்கள். பிறகு நீண்ட நேரம் மழைக்காக அங்கே பிரார்த்திப்பார்கள். அப்போது நந்தி பகவானுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிரமப்பட்டு மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம்.

 

பிரமாண்ட வரவேற்பு வாயிலாக கிழக்கு கோபுரத்தை அடுத்து அமைந்த இந்த வீர வசந்தராய மண்டபம் மட்டுமல்ல, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு பகுதியும் வேறு எதனாலும் ஈடு செய்ய முடியாத கலைப்பொக்கிஷங்கள். அவற்றைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்றே கருத வேண்டும். அதுவே பக்தர்களின் எதிர்ப்பார்ப்பும்கூட!


டிரெண்டிங் @ விகடன்