கீழ்த்திருப்பதி சீனிவாசமங்காபுரம், கபிலேஸ்வரர் கோயில்களில் 9 நாள் பிரம்மோற்சவம்! இன்று தொடங்கியது! #Tirupati

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் கீழ்த்திருப்பதியில் பல கோயில்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான கோயில்களான சீனிவாசமங்காபுரம் மற்றும் கபிலேஸ்வரர் கோயில்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிரம்மோற்சவம் தொடங்கியது.

திருப்பதி, சீனிவாசமங்காபுரம்

சீனிவாசமங்காபுரம்

திருப்பதி அருகில் இருக்கும் சீனிவாசமங்காபுரத்தில் இருக்கும் கல்யாணவெங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் இன்று 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.
இந்த 9 நாள்களும் திருமலையில் நடைபெறுவதைப் போன்றே சூரிய வாகனம், சந்திர வாகனம் என தினமும் சுவாமி உலா வருவார். பிப்ரவரி 10-ம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார்கள். வரும் 14 - ம் தேதி விழா சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகின்றது.

 

முஷிக வாகனத்தில் விநாயகர்

தல வரலாறு

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது சீனிவாசமங்காபுரம். 

புராணகாலத்தில் சந்திரகிரி பகுதியை ஆட்சி செய்து வந்த ஆகாசராஜனின் மகளாக அவதரித்த பத்மாவதியை, சீனிவாச பெருமாள் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்படத் தயாரானார்.

ஆனால், 'திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது' என அகத்தியர் கூறிவிட்டார். மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாள் திருமலைக்குச் செல்லாமல், வழியிலேயே தங்கிவிட்டார். அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் சீனிவாசமங்காபுரம் என்பது ஐதீகம்.

கபிலத்தீர்த்தம்

மூன்று கோலத்தில் பெருமாள் தரிசனம்!

இந்தத் தலத்தில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் தரிசனம் அருள்கிறார். சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், லட்சுமி நாராயணராக அமர்ந்த கோலத்திலும், ஶ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார். திருமலையில் பெருமாளை நீண்டநேரம் தரிசிக்கமுடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்  பெருமாளை தரிசித்து மகிழலாம். 

கபிலேஸ்வரர் ஆலயம்
திருமலைக்கு மலைப்படிக்கட்டுகள் வழியாகப் படியேறிச் செல்லும் அலிப்பிரியிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் இருக்கிறது கபிலேஸ்வரர் ஆலயம். இங்குள்ள கபில தீர்த்தம் மிகவும் விசேஷமானது. கபில முனிவர் இங்கு தவம் செய்து சிவபார்வதியின் அருளைப் பெற்றதால் அமையப் பெற்ற கோயில் இது. இங்கு கபிலேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், முருகன், தட்சிணமூர்த்தி ஆகியோருக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. 

விநாயகர் ஊர்வலம்

சைவ ஆகம முறைப்படி சிறப்பு ஆராதனைகள்

கபிலேஸ்வரர் கோயிலிலும் இன்று (6-ம் தேதி செவ்வாய்க்கிழமை) ரிஷப கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. சைவ ஆகம விதிமுறைகளின்படி சுவாமி அலங்கரிப்பட்டு தினமும் வீதி உலா வருகிறார். முன்னதாக நேற்று மாலை 'அங்குரார்ப்பனம்' எனப்படும் முளைப்பாரி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

குறிப்பாக, பிப்ரவரி 13 -ம் தேதி சிவராத்திரியையொட்டி இங்கே விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறவிருக்கின்றன. வருகிற 15- ம் தேதிவரை காலை மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில்  சுவாமி வீதி உலா நடைபெறவிருக்கிறது. இரண்டு பிரம்மோற்சவங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!