வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (13/02/2018)

கடைசி தொடர்பு:16:11 (13/02/2018)

பூம்புகாரில் குப்பைகள் சூழ கண்ணகி சிலை! - தமிழக அரசின் கவனத்துக்கு...

நாகை மாவட்டம், பூம்புகார் தமிழர்களின் பாரம்பர்யத்தையும் பெருமையையும் பறைசாற்றும் நகரம். பூம்புகாரின் கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கிறது சிலப்பதிகார நாயகியான கண்ணகியின் சிலை. தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படும் கண்ணகி சிலையின் நிலை, இப்போது பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. சரியான பராமரிப்பில்லை, சிலையைச் சுற்றியிருக்கும் இடமும் குப்பைக் கூளங்களுடன் அசுத்தமாகக் காணப்படுகிறது. பூம்புகாருக்குச் சுற்றுலாவுக்கு வருவோரும், அங்குள்ள பொதுமக்களும் இதைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள்.

பூம்புகார்

பூம்புகார், வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்த நகரம். இந்த ஊர் தமிழ் இலக்கியங்களில் `காவிரிப்பூம்பட்டினம்’ என்று அழைக்கப்படுகிறது. இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான `சிலப்பதிகாரம்.’ அந்தச் சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகி பிறந்த ஊர் பூம்புகார். இதில் மட்டுமல்லாமல் `பட்டினப்பாலை’ உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்களில் புகார் நகரம் குறித்த குறிப்பு இருக்கிறது. சோழர்களின் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம், வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. பல தொழில்கள் நடைபெற்றதற்கான சான்றுகளும் உள்ளன. நம் பாரம்பர்யம் போற்றும் நகரம் என்பதற்குப் பல தொல்லியல் ஆதாரங்களும் இங்கே கிடைத்திருக்கின்றன. `கற்பில் சிறந்தவள்’ என்று தமிழர்களால் தெய்வமாகக் கருதி வணங்கப்படும் கண்ணகிக்கு பூம்புகாரில் சிலை அமைந்திருப்பது பொருத்தமானது. கண்ணகி சிலை, பூம்புகார் நகரத்தின் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. 1972-ம் ஆண்டு அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் இது அமைக்கப்பட்டது.

கண்ணகி சிலை

ஆரம்ப நாள்களில் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்த இந்தச் சிலை, இப்போது கொஞ்சம்கூட பராமரிப்பில்லாமல், கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாதந்தோறும் இந்தச் சிலை ரசாயன எண்ணெய் கொண்டு புதுப்பிக்கப்பட்டு வந்தது. மலர் மாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு கண்ணகி சிலைக்கு பூஜையும் செய்யப்பட்டு வந்தது. பூம்புகார் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் இங்கு வந்து தீபமேற்றி, கண்ணகி சிலையை வணங்கிவிட்டுச் செல்வார்கள். கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோதுகூட இந்தச் சிலை கொஞ்சமும் பாதிக்கப்படாமல், கம்பீரமாகக் காட்சியளித்தது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்தச் சிலை இருக்கும் இடம் இப்போது பழுதடைந்து, குப்பைகளால் நிரம்பிக்கிடக்கிறது. சிலையைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பூச்செடிகள் பராமரிக்கப்படாததால், அந்த இடமே புதர் மண்டிக் காணப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறைகூட இங்கே பூஜை நடைபெறுவதில்லை. இதேபோல் இங்கு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்காக நீச்சல் குளத்துடன்கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த நீச்சல்குளமும் குப்பைகளால் நிரம்பி, அசுத்தமான நீரோடு பழுதடைந்த நிலையில் இருக்கிறது. ``இதையெல்லாம் குறித்து பூம்புகார் சுற்றுலாத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை’’ என்கிறார் உள்ளூர்க்காரர் ஒருவர்.

சுற்றம்

சுற்றுலாவுக்கு வந்த சிலரிடம் பேசினோம்... ``கற்பின் சிறப்பைத் தன் வாழ்க்கை மூலம் உலகுக்கே எடுத்துரைத்த தெய்வம் கண்ணகி. அப்படிப்பட்ட கண்ணகியின் சிலை, இன்று சரியாக ஆடைகூட அணிவிக்கப்படாமல் இருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள் இதே பூம்புகாருக்கு வந்திருந்தபோதுகூட இந்தச் சிலை முறையாகப் பராமரிக்கப்பட்டுதான் இருந்தது. தெய்விகமாகக் காட்சியளிக்கும் கண்ணகி சிலையைப் பார்த்தாலே மனதுக்கு நிறைவாக இருக்கும். ஆனால், இப்போது பார்ப்பதற்குச் சங்கடமாக இருக்கிறது" என்றார் ஒருவர்.

கண்ணகி சிலையின் நிலை

``பூம்புகார் சுற்றுலாத் துறையின் பொறுப்பில் இந்தச் சிலை இருக்கிறது. அவர்கள்தான் இதைப் பராமரிக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறோம். தமிழக அரசுதான் பாரம்பர்யம் மிக்க கண்ணகி சிலையைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆதங்கப்படுகிறார் உள்ளூர்க்காரர் ஒருவர். கண்ணகி சிலையைக் கண்டுகொள்ளுமா தமிழக அரசு? 


டிரெண்டிங் @ விகடன்