பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சக்தி விகடன் நடத்தும் சிறப்புப் பிரார்த்தனை! - நீங்களும் பதிவு செய்யலாம்! | Special Pooja for Your Children's Education

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (14/02/2018)

கடைசி தொடர்பு:18:36 (14/02/2018)

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சக்தி விகடன் நடத்தும் சிறப்புப் பிரார்த்தனை! - நீங்களும் பதிவு செய்யலாம்!

மார்ச் மாதம் நெருங்குகிறது. மாணவர்கள், பொதுத் தேர்வுகளுக்காகத் பதற்றமும் பரபரப்புமாக தயராகி வருவார்கள். தேர்வுகளை நல்லபடி எழுதி, அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற எண்ணமே, மாணவர்களை டென்ஷனில் ஆழ்த்திவிடும். மனப் பதற்றத்தைப் போக்கி, ஒருமுகப்பட்டு படிக்கவும், நினைவாற்றல் அதிகரிக்கவும் தெய்வ அனுக்கிரகம் அவசியம். கல்வியில் சிறந்து விளங்குவதற்காக நாம் வழிபடவேண்டிய எண்ணற்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன. பாடங்கள் நன்றாக மனதில் பதியவும், நினைவாற்றல் அதிகரிக்கவும், நாம் பாராயணம் செய்யவேண்டிய மந்திரங்களும் இருக்கின்றன.

பிரார்த்தனை

பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும், அவர்களது குடும்பத்தினரும் வழிபட வேண்டிய சில கோயில்களை இங்கே பார்க்கலாம்.  பாராயணம் செய்ய சில மந்திரங்களையும் கொடுத்திருக்கிறோம்.

காரைக்குடி ஶ்ரீலட்சுமி ஹயக்ரீவர்

காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில் உள்ளது நாகநாதபுரம். இங்கே ஶ்ரீகிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. ஶ்ரீகிருஷ்ணமூர்த்தி பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். தாயாரின் திருநாமம் ஶ்ரீசெண்பகவல்லித் தாயார். இங்கு, தனிச் சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மிகவும் விசேஷமானவர்! வியாழக் கிழமைகளில் இவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வணங்கினால், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள்கூட ஞாபகசக்தி அதிகரித்து கெட்டிக்காரர்களாக மாறுவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்கின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் பௌர்ணமியில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், நன்றாகப் படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்பது ஐதீகம்.

கூத்தனூர் சரஸ்வதி

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே கூத்தனூர் கிராமத்தில் உள்ள மகாசரஸ்வதி அம்மன் கோயில்! கல்வி வரம் வேண்டுபவர்களுக்கு அருள் புரிவதற்கென்றே இங்கே வீற்றிருக்கிறாள் கல்விக் கடவுள் சரஸ்வதி. பொதுத் தேர்வுகளுக்கு முன்பாக கூத்தனூர் சரஸ்வதி தேவியின் திருவடிகளில் பேனா, பென்சில் வைத்து வழிபட்டு வேண்டிக்கொண்டு சென்றால், தேர்வுகளை நன்றாக எழுதி, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும் என்று பக்தர்கள்  கூறுகிறார்கள்.

திருமறைக்காடு:

சரஸ்வதிதேவி கலைகளின் வடிவமாக நின்று சிவபெருமானை வழிபட்ட தலம் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம். புதன்கிழமைகளில் இங்கு வந்து, வேத சரஸ்வதியாக வீற்றிருக்கும் கலைமகளை வழிபட, தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம்.

திருவஹிந்திபுரம்:

கடலூருக்கு அருகில் உள்ள திருவஹிந்திபுரத்தில், அருள்மிகு தேவநாத பெருமாள் கோயிலுக்கு எதிரில் உள்ள ஔஷதகிரி என்னும் சிறிய குன்றில் கோயில் கொண்டிருக்கிறார் ஶ்ரீஹயக்ரீவர். ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் தாங்கி, கீழ் வலக்கை அபய ஹஸ்தமும், கீழ் இடக் கை ஸ்ரீகோசத்துடனும் திகழ்கிறது. 108 திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும்தான் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது.தேர்வுகளுக்கு முன்பாக மாணவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, ஶ்ரீஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

தட்சிணாமூர்த்தி

துடையூர் ஶ்ரீதட்சிணாமூர்த்தி:

திருச்சி- நாமக்கல் செல்லும் பாதையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருத்தலம் துடையூர். இங்கே காவிரி - கொள்ளிட நதிகளுக்கு இடையில் அமைந்திருக்கும் ஶ்ரீமங்களாம்பிகை சமேத ஶ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயில் பிராகாரத்தில்,  வீணையுடன் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவரை, 'திகிசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி' என்கின்றனர். கல்வியில் மந்த நிலை மாறி, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற விரும்புபவர்கள், தேனபிஷேகம் செய்து, மனோரஞ்சித மாலை சாத்தி வழிபடவேண்டும். அபிஷேகம் செய்த தேனை வாங்கி வந்து, தினமும் அதிகாலை வேளையில் ஶ்ரீதட்சிணாமூர்த்தியை தியானித்தபடி பருகி வந்தால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம் என்பது தொன்று தொட்டு பக்தர்களிடையே இருந்து வரும் நம்பிக்கை.

 

கல்விக் கடவுளர்களுக்கான மந்திரங்கள்:

விநாயகர்:

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.

- ஒளவை அருளிய இந்தப் பாடலைப் பாடி, வெள்ளை மலர்கள் தூவி, அனுதினமும் விநாயகரை வழிபட, கல்வித் தடைகள் நீங்கும்.

ஹயக்ரீவர்

ஶ்ரீஹயக்ரீவர்:

ஓம் ஞானானந்த மயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் சர்வ வித்யானாம்

ஹயக்ரீவம் உபாஸ்மஹே

- இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்ரீஹயக்ரீவரை வழிபட, கடினமான பாடங்களும் எளிமையாகப் புரியும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.

 

புதன் காயத்ரி:

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீ மஹி

தந்நோ புத பிரசோதயாத்

- புதன் பகவானுக்குரிய காயத்ரீ மந்திரமாகிய இதை, தினமும் 5 முறை சொல்லி வந்தால், நினைவாற்றல் வளரும்; கணிதப் பாடத்தில் நூறு சதவீதம் வெற்றி பெறலாம்.

 

சரஸ்வதி காயத்ரி:

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே 

ப்ரம்ம பத்தின்யை ச தீமஹி

தந்நோ வாணீ ப்ரசோதயாத்

ஸ்ரீசரஸ்வதிதேவியின் காயத்ரி மந்திரம் இது. தூய பக்தியுடன் இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்து கலைமகளை வழிபட, மாணவ- மாணவியர் கல்வியில் முதலிடம் பெறலாம்.

 

சிவபெருமான்:

நமசிவாயவே ஞானமும் கல்வியும்

நமசிவாயவே நான் அறிவிச்சையும்

நமசிவாயவே நா நவின்று ஏத்துமே

நமசிவாயவே நன்னெறி காட்டுமே

- திருநாவுக்கரசர் அருளிய இந்தப் பாடலைப் பாடி ஈசனை வணங்க, ஞாபகசக்தி பெருகும்.

 

தட்சிணாமூர்த்தி:

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வர:

குரு சாட்சாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

இந்த மந்திரம் சொல்லி, தென்முகத் தெய்வமான தட்சிணாமூர்த்தியை வழிபட, நினைவாற்றல் அதிகரிப்பதுடன், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

 

பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக சக்தி விகடன் நடத்தும் சிறப்புப் பிரார்த்தனை!

 அன்பார்ந்த வாசகர்களே! 

10-ம் வகுப்பு, +1 மற்றும் +2 தேர்வுகள் நெருங்குகின்றன. இந்தத் தேர்வுகளில் உங்களின் பிள்ளைகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறவேண்டும் எனும் நோக்கில் கீழ்க்காணும் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளது சக்தி விகடன். 

கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் பிள்ளையைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து கொள்ளுங்கள். வரும் 25.02. 2018 ஞாயிறன்று கீழ்கண்ட மூன்று ஆலயங்களிலும் உங்கள் பிள்ளைகளுக்காக சங்கல்பித்து பிரார்த்தனை செய்கிறோம். 

உங்கள் பிள்ளைகளின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்- 23.02.2018

விவரங்களை பூர்த்தி செய்ய இங்கு க்ளிக் செய்யவும்...

 

 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்