வெளியிடப்பட்ட நேரம்: 01:08 (17/02/2018)

கடைசி தொடர்பு:01:08 (17/02/2018)

வேலூரில் மயானக் கொள்ளைத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்..!

வேலூரில் நேற்று மயானக் கொள்ளைத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கான், தோட்டப்பாளையம், விரிஞ்சிபுரம், வேலூர், சேன்பாக்கம்  போன்ற சுற்றுவட்டார  இடங்களில் இருந்து அங்காளம்மன் தேர் அலங்கரிக்கப்பட்டு பாலாற்றுக்கு கொண்டுவரப்பட்டது. 

இறந்தப் பிறகு செல்லும் சுடுகாட்டிற்கு,  மக்கள்  முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இந்த விழாவில்தான். வருடம் முழுவதும் கடவுளை வணங்கும் பக்தர்கள் தங்களைக் கடவுளாகவே பாவித்து காளி மற்றும் பிற வேடங்களில் வலம் வருவர். பலரும் முகத்தில் பல வண்ணங்களைப் பூசி, பம்பை மேளத்திற்க்கேற்ப நடனம் ஆடி வருவர்.

மக்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்துவர். இந்த விழாவின் பெயர்தான் மயானக் கொள்ளை. காவல் தெய்வங்களான அங்காளம்மன், முனி, பெரியண்ணன், கருப்பண்ணன் போன்ற தெய்வங்களைச் சிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த மயானக் கொள்ளை.

உலகின் மீது கடும்கோபம் கொண்ட அங்காளப் பரமேஸ்வரி உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருந்தார். அம்மனின் கோபத்தைக் கட்டுபடுத்த சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். பிறகு அம்மனின் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். வருடந்தோறும் வரும்  மகாசிவராத்திரிக்கு அடுத்த அமாவாசை தினத்தில் மட்டும் அம்மனின் கட்டு அவிழ்க்கப்படும் என்றும்,  அந்தத் தினத்தில் மட்டும் உயிர்பலி வாங்க அம்மனுக்கு அனுமதி அளித்தார் சிவபெருமான். எனவே,  வருடம் தோறும் மகாசிவராத்திரிக்குப் பிறகு வரும் அமாவாசை மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது.

 சுடுகாட்டு சாம்பல் மண்ணால் செய்யப்பட்ட மூன்று முதல் நான்கு மீட்டர் நீளமுள்ள அம்மன்  உருவம் சிவராத்திரியன்று  செய்யப்பட்டுவிடுகிறது. மக்கள், தங்கள் உறவினர்களைப் புதைத்த சுடுகாட்டிற்கு சென்று அந்த இடத்தைச் சுத்தம் செய்து படையல் இடுவார்கள். பிறகு, கோயிலில் உள்ள அங்காள அம்மனின் சிலை அலங்காரம் செய்து, கரகம் ஜோடித்து சிம்ம வாகனத்தில்(தேர்) ஏற்றுவர். நேர்த்திக்கடனுக்காக காளி வேடமிட்டவர்களும், பக்தர்களும் தேரோடு பம்பை மேளத்திற்க்கேற்ப நடனமாடிச் செல்வர்.

காளி  வேடமிட்டு ஆடி  வருபவர்கள் மயானத்தை நெருங்கியதும், சாம்பலால்  செய்யப்பட்ட மயான அம்மனைச் சுற்றி வந்து விழுவர். மக்கள் அம்மன் தேரின் மீதும், வான் நோக்கியும் கொழுக்கட்டை, மஞ்சள், பயிறு வகைகளை வீசுவர். பிறகு மயானத்தில் சாம்பலால் செய்யப்பட்ட மண்ணை கொள்ளை அடிக்கிறார்கள்.  இந்தச் சாம்பல் மண் நோய்களையும், தீய சக்திகளையும் விரட்டியடிக்கும் ஆற்றலுடையது என்று நம்புகிறார்கள்.