வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (21/02/2018)

கடைசி தொடர்பு:16:15 (22/03/2018)

‘எந்த நிலத்தை வாங்கலாம், எப்படி வீடுகட்டலாம்...’ அடிப்படை வாஸ்து விஷயங்கள்! - நிபுணர் சதீஷ்குமார் #Vasthu

வாஸ்து சாஸ்திரப்படி எப்படி வீடு கட்டலாம்...


ந்தப் பிரபஞ்சமே நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களால்தான் இயங்கி வருகிறது. ஒருவர் வீடு கட்டுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்யும்போது, அந்த இடத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமை எப்படி அமைந்துள்ளது, அந்த அமைப்பானது அந்த இடத்தில் வளர்ச்சியை உண்டாக்குமா என்பதையெல்லாம் கணித்துக்கூறுவதே வாஸ்து சாஸ்திரம். 

 

வாஸ்து பூஜை


இப்போதெல்லாம் நிலம் வாங்கினாலும், வீடு கட்டினாலும், முதலில் எல்லோரும் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறார்கள். `காலமெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய ஓர் இடம் சரியாக அமைய வேண்டுமே...’ என்ற மத்தியதர மக்களின் கவலையும் நியாயமானதுதான். ஆனால், தேவையற்ற செலவுகளை வைக்கும் விஷயமாக வாஸ்து சாஸ்திரம் இருக்கக் கூடாது என்பதும் பலரின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. எனவே, அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்த நினைத்து, எப்படிப்பட்ட நிலத்தை வாங்கலாம்;  அங்கு எப்படி வீடு கட்டலாம் என்பது போன்ற அடிப்படை வாஸ்து விஷயங்கள் பற்றி வாஸ்து நிபுணர் சதிஷ்குமாரிடம் கேட்டோம்.


வாஸ்து நிபுணர்"நீங்கள் வாங்கும் நிலம் செவ்வகமாக இருப்பது நல்லது. ஒருவேளை அது செவ்வகமாக இல்லை என்றால், அதற்கு உரிய வாஸ்து பரிகாரம் செய்யலாம். நீங்கள் வாங்கும் நிலத்தில் வடகிழக்கு மூலையைவிட, தென்மேற்கு மூலை சரிந்து அதாவது, தாழ்ந்து இருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் நீங்கள் நீரை ஊற்றினால், தென்மேற்கு மூலைக்குச் சென்று சேரவேண்டும். அதுவே நல்ல இடம். அந்த நிலத்தில்தான் நல்ல வளர்ச்சியும், நல்ல நீரோட்டமும் இருக்கும் என்பது வாஸ்து சாஸ்திரம் மட்டுமல்ல, அறிவியலும் கூறும் உண்மை.

அதுபோலவே நீங்கள் ஓர் இடத்தை வாங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஒரு காரியத்தைச் செய்து பாருங்கள். முதலில், ஒரு மீட்டர் நீள, அகலத்துக்கு ஒரு முழம் அளவுக்கு ஆழமாக ஒரு குழி வெட்டி, அந்தக் குழியில் வேகமாக நீரை ஊற்றிப் பாருங்கள். பூமியில் சேரும் நீர் கடிகாரச் சுற்றுவாக்கில் சுழன்று மறைந்து போனால் அந்த இடத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். நீர் வளம், மண் வளம் அங்கு அதிகம் என்று அர்த்தம். அப்படியில்லாமல் எதிர்மறையான சுற்றில் சுழன்று மறைந்து போனால் அங்கு நிலம் வாங்குவதைப் பற்றி யோசிக்க வேண்டும். 


வாங்கிய இடத்தில் நீங்கள் வீடு கட்டும்போது, தென்மேற்கு திசையில் உள்ள இடங்கள் சற்று இருட்டாகவும், மூடியபடியும் இருப்பது நல்லது. அதாவது படுக்கையறை, பொருள்கள் வைக்கும் அறைகள் அங்கு இருப்பது நல்லது. வடகிழக்குத் திசையில் உள்ள இடங்கள் திறந்தவெளியாகவும், வெளிச்சம் உள்ள அறைகளாகவும் இருப்பது நல்லது. வடகிழக்கு ஈசான்ய மூலையில் கதவு மற்றும் ஜன்னல் வைப்பது நல்லது. கதவையும் ஜன்னலையும் தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் வைக்கலாம். ஆனால், தென்மேற்கு திசையில் மட்டும் கதவு, ஜன்னல் வைக்கக் கூடாது. காரணம், `இந்த திசை தீய சக்திகளின் நுழைவு வாசல்’ என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது, அறிவியல் மற்றும் புவியியல் அடிப்படையில் பார்த்தாலும், தென்மேற்கு திசையில் காற்றும் வெளிச்சமும் அதிகமாகக் கிடைப்பதில்லை என்றே சொல்லலாம்.

வீட்டுக்கான வாஸ்து

பூஜை அறை வடகிழக்கு திசையில் இருப்பது நல்லது. அங்கே பிராணவாயு அதிகம் கிடைக்கும் பகுதி என்பதால், உங்களால் ஆழ்நிலை தியானத்துக்கு எளிதில் செல்ல முடியும். குளியலறை மற்றும் கழிப்பறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். நீரின் போக்கு சீராக இருக்கும் திசை என்பதால், வாஸ்து சாஸ்திரம் பொதுவாக இந்தத் திசைகளைப் பரிந்துரை செய்கிறது.
வரவேற்பறை எனும் ஹால் பகுதி ஒரு வீட்டுக்கு இதயம் போன்றது. எனவே, அது ஒழுங்கான சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது கட்டாயம். வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் ஹால் இருப்பது நல்லது. சின்னச் சின்னதாக நிறைய அறைகள் அமைப்பதைவிட, நான்கு அல்லது ஐந்து அறைகள் விசாலமாக இருப்பது நல்லது. அது மனரீதியாக உங்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும்.

வாஸ்து

வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் அதிக கனமான பொருள்களை வைக்கக் கூடாது. பொதுவாக உங்கள் வீடு தூய்மையாக இருந்தாலே அது நல்ல அதிர்வுகளை உங்களுள் உருவாக்கி வளர்ச்சியைத் தரும். நிறைய பிராணவாயுவை வெளியிடும் செடி, கொடி, மரங்களை வளர்ப்பதும் உங்களின் வாழ்வில் மலர்ச்சியை உருவாக்கும். வாஸ்து என்பது புவியியல், அறிவியல் கலந்த ஆன்மிகம்தான். நல்ல வாஸ்து நிபுணர்களைக் கொண்டு ஆலோசனை பெற்று உங்கள் வீட்டை எளிதாக, இனிமையாக மாற்றிக்கொள்ளலாம்" என்றார்.  

'நமசிவாய என்றிருக்க நாளென்ன செய்யும், கோளென்ன செய்யும்?' என்றார் திருஞான சம்பந்தப்பெருமான். தூய்மையும், பசுமையான சூழலும், மனமார்ந்த பக்தியும்கூட உங்கள் வீட்டை இனிமையாக மாற்றிவிடக்கூடும். 


டிரெண்டிங் @ விகடன்