கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் பாபாவின் பெரும் கருணை! – இரு நிகழ்வுகள்! #SaiBaba

ஷீரடி சாய் பாபா எண்ணற்ற உபதேசங்களை நமக்கு அருளியுள்ளார். உபதேசங்கள் மட்டுமல்லாமல், நமக்கெல்லாம் ஆறுதல் சொல்வதுபோல் அவர் கூறிய ஓர் உறுதிமொழியை, தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும் காப்பாற்றிக்கொண்டு வருகிறார். அப்படி பாபா நமக்கு அருளிய உறுதிமொழி இதுதான்… 'நான் சமாதியடைந்துவிட்டாலும், என் சமாதியிலிருந்தும் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவேன்.'


தாம் தம்மைச் சரணடைந்த பக்தர்களுக்கு அருளிய உறுதிமொழியை, தம்முடைய மகா சமாதிக்குப் பிறகும் காப்பாற்றி வருகிறார் என்பதை உணர்த்தும் ஓர் அருளாடல்...

சாயி பாபா


1956-ம் ஆண்டு, குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த பங்காராவும், அவர் மனைவியும் டெல்லியில் வாழ்ந்து வந்தனர். திரு பங்காரா அனைத்து மகான்களிடத்தும் பக்திகொண்டிருந்தவர். ஆனால், அவர் மனைவியோ அவருக்கு நேர்மாறானவர். பழைமைவாதியான அவர் மகான்களிடத்தில் நம்பிக்கை சிறிதும் இல்லாதவர். 

அந்த வருடம் அவருக்கு பாபாவின் படம் போட்ட காலண்டர் ஒன்று கிடைத்தது. பங்காராவின் மனைவி அந்த காலண்டரை ஒரு சாதாரண பொருளாகக் கருதியதுடன், அவர்களுடைய படுக்கையறையில் அந்தக் காலண்டரை மாட்டிவைத்தார். ஏற்கெனவே மகான்களிடம் பக்தி கொண்டிருந்த பங்காராவுக்கு, அந்தக் காலண்டரில் இருந்த சாய் பாபாவிடம் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது.

மனைவிக்கு மகான்களிடம் நம்பிக்கை இல்லாத காரணத்தினால், அவருக்குத் தெரியாமல் தினமும் காலண்டரில் இருக்கும் சாய் பாபாவை வழிபடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. ஒருநாள், என்றுமில்லாத புதுமையாக பாபாவின் காலண்டருக்கு பூமாலை அணிவித்திருப்பதை பார்த்து மிகுந்த ஆச்சர்யம் கொண்டார். 

தம் மனைவியை அழைத்தவர், ''பாபாவுக்கு யார் பூமாலை அணிவித்தது?'' என்று கேட்டார்.

 

அவருடைய மனைவி நெகிழ்ச்சியான குரலில், "நான் பூஜையறையில் இருக்கும் படங்களுக்கு பூ சாற்றிக் கொண்டிருக்கும்போது படுக்கையறையிலிருந்து, 'குழந்தாய்! எனக்கும் பூமாலையைச் சாற்றுவாய். உனக்கு அனைத்து நன்மைகளையும் தருவேன்' என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலைக் கேட்டதும் என்னையறியாமலேயே பூமாலையைக் கொண்டு வந்து அந்த காலண்டருக்கு அணிவித்தேன்'' என்றாள்.

சில நாள்களுக்குப் பிறகு, நண்பர் ஒருவர் சாய் பாபாவின் படத்தை பங்காராவுக்குக் கொடுத்தார். பங்காராவும் அந்தப் படத்தை ஃபிரேம் போட்டு பூஜையறையில் வைத்து, கணவரும் மனைவியுமாக தினமும் பூஜைசெய்து வந்தனர்.

ஒருநாள் திருமதி பங்காரா, பாபாவின் மீது நம்பிக்கைகொண்டு இரு கோரிக்கைகளை வைத்தார்.

'தன் கணவர் நலமுடன் இருக்க வேண்டும்; தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்க வேண்டும்' என்பவையே அவர் பாபாவிடம் வேண்டிக்கொண்ட கோரிக்கைகள்.

என்ன ஆச்சர்யம்! அவர் வேண்டிக்கொண்டபடியே, 1957-ம் வருடம், ஜூன் மாதம் அவருக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பங்காராவுக்கும் அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைத்தது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பங்காராவின் நண்பர்களும் பங்காராவின் மூலமாகவே தங்கள் குறைகளை பாபாவிடம் கூறி, பாபாவின் அருளால் தங்கள் குறைகளிலிருந்து விடுபட்டனர்.

பாபா பங்காராவின் மூலம் அவரது குடும்பத்துக்கு மட்டுமின்றி அவரது சுற்றத்தாருக்கும் அருள்புரிந்தார். என்னதான் பங்காராவுக்கு பாபாவிடம் பக்தி இருந்தாலும், நடைபெறுவதெல்லாம் ஒரு கனவாகத்தான் அவருக்குத் தோன்றியதே தவிர, பாபாவின் அருளாடல்கள்தான் அவை என்பதில் பூரண நம்பிக்கை ஏற்படவில்லை.

பாபா, தம் பக்தர்களிடம் காணிக்கையாகக் கேட்ட தட்சிணைகளில் பூரண நம்பிக்கையும் ஒன்று. எனவே, தம்மால் ஆட்கொள்ளப்பட்ட பங்காராவுக்கு தம்மிடம் பரிபூரண நம்பிக்கை ஏற்படும்படியாக ஓர் அருளாடலை நிகழ்த்தினார்.

சாயி

ஒருமுறை பங்காரா அலுவலகப் பணியின் காரணமாக நூறு மைல்கள் தாண்டி பயணிக்கவேண்டியிருந்தது. அவர் பூஜையறைக்குச் சென்று கடவுளை வழிபட்டார். அப்போது பாபாவின் படத்திலிருந்து ஒரு குரல், 'இன்று நீ வீடு திரும்ப முடியாது' என்று ஒலித்தது. அவர் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, அவருடைய மனைவி அன்று இரவே வீட்டுக்குத் திரும்பும்படிக் கூறியிருந்தார். ஆனால், பாபாவின் வார்த்தைகளைச் சோதிக்க நினைத்த பங்காரா, பாபா தம்மிடம் கூறியதைப் பற்றி எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

அவர் சிறிது தூரம் சென்றதும், ரயில்வே இருப்புப்பாதையைக் கடப்பதற்காக அவரின் கார் ஓரிடத்தில் நின்றது. அப்போது அருகில் இருந்த ஓர் அரசுப் பேருந்திலிருந்து ஒருவர் இறங்கினார். பங்காராவின் காரை நோக்கி வந்தவர், தான் விரைவாகச் செல்ல வேண்டும். ஆனால், பேருந்தில் சென்றால் தாமதமாகும் என்று கூறி, தனக்கு காரில் லிஃப்ட் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே, பங்காராவும் அவரை காரில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்தவுடன் திடீரென்று அவரது காரில் பிரேக் வயர் பழுதடைந்துவிட்டது. கார் தாறுமாறாக ஓடியது. சாலைக்கு ஒருபுறம் பள்ளத்தாக்கும், மறுபுறம் மலையும் இருந்தன. அப்போது பங்காராவுக்கு பாபாவின் சொற்கள் நினைவுக்கு வந்தன. தான் இன்று இறக்க போவதைத்தான் பாபா தமக்கு உணர்த்தியிருக்கிறார் என்பதை அறிந்து, பாபாவைப் பிரார்த்தனை செய்தார்.

சாய்

'பாபா, நான் என் குடும்பத்துக்காக உயிர் வாழவேண்டியிருக்கிறது. எனவே, என்னை தயவு செய்து காப்பாற்றுங்கள். இனி நான் உங்கள் மீது சந்தேகம்கொள்ள மாட்டேன்' என்று மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

பாபாவின் அருளால் ஓர் அதிசயம் நடைபெற்றது. பங்காராவின் கார் சக்கரம் ஒரு கல்லின்மீது மோதி அப்படியே நின்றுவிட்டது. பெரும் விபத்திலிருந்து அவர் பாபாவால் காப்பாற்றப்பட்டார். பிறகு, அந்தப் பக்கமாக வந்தவர்கள் மூலம் உதவி கேட்டுப் பெற்று, தாம் செல்லவேண்டிய ஊருக்குச் சென்றார். இந்தத் தாமதத்தின் காரணமாக, அவருடைய பணி முடிவதற்கு இரவாகிவிட்டது. எனவே, மறுநாள்தான் அவரால் ஊருக்குத் திரும்ப முடிந்தது.

அன்று முதல் பாபாவின் மீது பங்காரா பரிபூரண நம்பிக்கைகொண்டார்.

சாய் பாபா, தம் மகா சமாதிக்குப் பிறகும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திவரும் அருளாடல்களுக்கு,பங்காராவின் வாழ்க்கையில் நிகழ்த்திய அருளாடல், `ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ உதாரணம்!

பாபா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இங்கே க்ளிக் செய்யுங்கள்...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!