ஜாதகத்தில் 'செல்வ கேந்திரம்' எனும் 2, 5, 8, 11 இடங்கள்... தரும் பலன்கள் என்னென்ன? #Astrology

ஜோதிடம், தனித்துவமானது. ஜாதகக் கட்டத்தில் ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு வகையான பொறுப்பு இருக்கும். அதைவைத்தே ஜாதகரின் குணநலன்கள், அவரின் செயல்பாடுகள், அதனால் அவருக்கு ஏற்படப்போகும் விளைவுகள் ஆகியவற்றை அறியலாம்.  ஜாதகத்தில், `செல்வ கேந்திரம்’ எனும் 2, 5, 8, 11 இடங்கள்... அவற்றின் பொறுப்புகள் பற்றி ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்...

``ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகக் கட்டம்  1, 4, 7, 10  ஆகிய இடங்கள் முதன்மைக் கேந்திரங்கள். அவற்றுக்கு  அடுத்த கேந்திரம் என்றால்,  2, 5, 8, 11 எனும் செல்வ கேந்திரங்கள். இந்த இடங்கள்தான் ஜாதகரின் பண வரவுகளைச் சொல்லும் கேந்திரங்கள்'' என்றவர், ஒவ்வொரு கேந்திரம் பற்றியும் விளக்கமாகக் கூறினார். 

 

கேந்திரம்

`தனஸ்தானம்' எனப்படும் இரண்டாம் இடம்: 

"தனம், குடும்பம், வாக்கு எனும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுவது லக்னத்துக்கு 2-ம் இடம். ஒருவரின் செல்வநிலையைப் பற்றி அறிய உதவும் இடமும் இந்த 2-ம் இடம்தான்.  

ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்புடன் அமையுமா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா என்பதை இந்த இடத்தைக் கொண்டே அறியலாம். மேலும், ஒருவருக்கு சுயதொழில் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத்தின் மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா என்பது பற்றியும் இந்த இடத்தைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். வாழ்க்கைத்துணை வழியில் அவருக்கு செல்வச் சேர்க்கை உண்டாகுமா என்பதையும் இந்த இடமே நிர்ணயிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டா என்பதையும் இந்த இடமே தீர்மானிக்கும். செல்வச் சேர்க்கை மட்டுமல்ல, ஒருவர் உண்மை பேசுபவரா அல்லது பொய் பேசுபவரா என்பதையும் `வாக்குஸ்தானம்' என்னும் 2-ம் இடத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். அவருக்கு அமையும் குடும்ப உறவுகளையும் அறிந்துகொள்ள முடியும்.  

கிரகங்கள்

ஐந்தாம் இடம் எனும் `பூர்வபுண்ணியஸ்தானம்'

ஐந்தாம் இடம் `பூர்வபுண்ணியஸ்தானம்' என்று அழைக்கப்படும். தாய்மாமன், மாமன்மார்களின் உறவு, தந்தைவழி உறவுகள், குழந்தைச் செல்வம், பூர்வபுண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை- தீமைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிவிக்கும் இடம். மேலும் மொழியில் தேர்ச்சி,  உயர்கல்வி பெறும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, பேச்சாற்றல், ஆன்மிகச் சொற்பொழிவாற்றுவதில் நிபுணத்துவம், பெண்களுக்குக் கருத்தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை ஆகியவற்றுக்குக் காரகத்துவம் வகிப்பது இந்த 5-ம் இடம் என்னும் பூர்வபுண்ணியஸ்தானம்தான்.
 
குருவையும் 5-ம் இடத்தையும் அறிந்துகொண்டு குழந்தைச் செல்வத்தை அறியலாம். புதனையும் 5-ம் இடத்தையும் அறிந்து ஜாதகர் கல்விபெறும் தகுதி, ஆன்மிகச் சிந்தனை, மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது போன்றவற்றை அறியலாம். அறக்கட்டளைகள் மற்றும் பங்குவர்த்தகம் வழியே வரும் வருமானத்தையும் இந்த 5-ம் இடம் சொல்லும். 

கிரகங்களின் தாக்கம்

`ஆயுள்ஸ்தானம்' என்னும் 8-ம் இடம்

ஒருவரது ஆயுளைத் தெரிவிக்கும் இடம், `ஆயுள்ஸ்தானம்' என்னும் 8-ம் இடம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதால், ஏற்படும் ஆபத்து, நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவற்றால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், கருத்து மோதல்கள், அஞ்ஞாதவாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் போன்றவற்றைத் தெரிவிக்கும் பாவம் 8-ம் இடம். ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்

11-ம் இடம் எனும் லாப ஸ்தானம்

ஜீவனஸ்தானமான பத்தாமிடத்துக்கு அடுத்த 11-ம் இடம்  லாப ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள கிரகங்களின் தசா புக்திகளில், ஒருவருக்கு  தொழில் மூலம் வரும் லாபம், மறைமுக வருமானம், ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம், இன்ஷூரன்ஸ் மூலம் வருமானம், ஓய்வூதிய வருமானம் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம் 11-ம் இடமான லாபஸ்தானம்தான்.

மேலும் 11-ம் இடத்தைக் கொண்டு மூத்த சகோதரர்கள், சேவை செய்யும் வாய்ப்பு, செய்தொழிலில் கிடைக்கும் லாபம், பயிர்த்தொழில், யானை, குதிரைகளை வளர்க்கும் வாய்ப்பு, கால்நடைப் பராமரிப்பு, மாப்பிள்ளை, மருமகள் ஆகியவர்களால் பெறும் லாபங்கள், உதவிகள், வாகன யோகம்,  ரேஸ், லாட்டரி மூலம் வரும் வரக்கூடிய பெரும் லாபம், மற்ற வகைகளில் ஏற்படும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஆகியவற்றையும் இந்த 11-ம் இடத்தைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்'' என்கிறார் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!