Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`அம்மாடியோவ்... நான் கோவிந்தனை விலைக்கு வாங்கிவிட்டேன்!' கல்லும் கனியும் கீதம் தந்த மீராபாய்

 `ந்த உலகில் எனக்கு வேறெதுவும் தேவையில்லை; இறைவன் போதும்’ என்கிற எண்ணம்...  காதலால் கசிந்துருகி இறையோடு ஒன்றிப் போகும் மனம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. சராசரி வாழ்க்கையில் தெய்வத்தைக் கோயிலில் சென்று வணங்குவது, பண்டிகைகளைக் கொண்டாடுவது, விழாக்கள் நடத்துவது... என பக்திக்கும் எல்லைகளை வகுத்துவைத்திருக்கும் எளிய மனிதர்கள் நாம். எல்லாவற்றையும் துறந்து இறைவனைத் தேடும் பயணமும், அதில் ஸித்தியும் சிலருக்குத்தான் வாய்க்கிறது. அவர்களிலும் பெண்களின் எண்ணிக்கை, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மிகக்குறைவு. நம் தமிழகத்திலேயேகூட காரைக்கால் அம்மையார், ஆண்டாள்... என உதாரணங்களையேகூட தேடித் தேடித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த வகையில் வட இந்தியாவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மீராபாய் முக்கியத்துவம் பெறுகிறார். 

மீராபாய்

நெஞ்சை உருக்கும் தன் பஜனைப் பாடல்களால் அந்தக் கிரிதர கோபாலனோடு ஐக்கியமாகிவிட்டவர், `மீரா', `பக்த மீரா’ என்றெல்லாம் அழைக்கப்படும் மீராபாய். அரச குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்க்கை முழுக்கவே போராட்டம். இவரை, `பித்துப்பிடித்தவர்’ என்கிறார்கள் மக்கள்; `குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு’ என்கிறார் மாமியார்; `நீ வேண்டாம்’ என உதறித்தள்ளுகிறான் சகோதரன்; விஷம் கலந்த பாலைக் கொடுத்தனுப்புகிறார் ராணா... அந்தப் பாலைக் குடித்துவிட்டு, கால்களில் சதங்கை கட்டிக்கொண்டு, வெட்க உணர்வைத் தூக்கியெறிந்துவிட்டு, எளிய மனிதர்களோடு குதூகலமாக ஆடி மகிழ்கிறார் மீரா. `உலக ஆசாபாசங்கள் அனைத்தும் பொய். கிரிதரை சிக்கெனப் பிடித்துக்கொண்டுவிட்டேன். எனக்கு இனிமேல் கிரிதர கோபாலன்தான் எல்லாமும். எனக்கு வேறு எவரும் கிடையாது’ எனத் தன் பாடலில் உருகி உருகிச் சொல்கிறார் மீராபாய்.

உண்மையில், மீராபாய் குறித்த எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லை; கிடைக்கவில்லை. அவர் குறித்த தகவல்களுக்கு ஆதாரமாக இருப்பவை அவருடைய பாடல்கள் மட்டுமே. இந்தியிலேயேகூட இவர் குறித்த ஆய்வுகள் 70 ஆண்டுகளாகத்தான் நடைபெற்றுவருகின்றன. அண்மையில் வெளிவந்திருக்கும் `மீராபாய்: வாழ்க்கை வரலாறும் பாடல்களும்’ என்ற நூல் மீராபாய் வாழ்ந்த காலம், அவரின் வாழ்க்கை, வழிபாட்டுமுறை, பெண்ணிய விமர்சனம், பாடல்களிலிருக்கும் கலையம்சங்கள் அனைத்தையும் விரிவாக ஆராய்கிறது. இந்த நூலை எழுதியிருக்கும் முனைவர் எம்.சேஷன், மீராபாய் குறித்த வெகு நுணுக்கமான தகவல்களையும் அழகாகத் தந்திருக்கிறார்... 

மீராபாய் வாழ்க்கை வரலாறு புத்தகம்

நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகள்... 

* சுமார் 12 வயதில் மீராவின் திருமணம் நடந்ததாகக் கருதப்படுகிறது. மாமனார் வீட்டில் அடியெடுத்துவைக்கிறார். மாமியார் குலதெய்வத்துக்கு பூஜை செய்யும்படி கூற, மீரா தனது இஷ்ட தெய்வமான கண்ணனைத் தவிர வேறு எந்தக் கடவுளரையும் வழிபட மறுத்துவிட்டார். மாமியார் தன் கணவரிடம் மீராவின் போக்கு பற்றிக் குறைகூறி முறையிட்டார். அவர் கோபமுற்று மீராவை ஓர் அறையில்வைத்துப் பூட்டிவிடுகிறார். 

* மீராபாயின் திருமணம் புகழ்பெற்ற ராணா சங்காவின் மூத்த மகனான போஜராஜனுடன் நடைபெற்றது. திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே, ராணா சங்கா உயிருடன் இருக்கையிலேயே போஜராஜன் மரணமடைந்தான். அவர்கள் குடும்ப வழக்கப்படி, மீராவை `சதி’யாவதற்கு (உடன்கட்டை ஏறுவதற்கு) வற்புறுத்துகிறார்கள். மீரா மறுத்துவிடுகிறார். மீரா ஒருபோதும் போஜராஜனைத் தன் கணவனாகக் கருதியதாகத் தெரியவில்லை. தனக்கு, பரம்பொருளாகிய கண்ணனுடன் இளமையிலேயே திருமணம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறார். பிறகு அவரைக் கொல்லும் முயற்சிகளும்கூட நடந்தன.


மீராவின் பாடல்கள்...

* 500-க்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை எழுதியிருக்கிறார் மீராபாய். மீரா பாடல்களை இயற்றினார் என்று கூறுவதைவிட அவரது பாடல்கள்தாம் அவரது வாழ்க்கையை இயக்கின என்றே கூறலாம். அவரின் சில அற்புதமான பாடல்வரிகள் சில... 

*  `யோகியே! என்னைவிட்டு விலகிப் போகாதே! உன்காலில் விழுந்து கெஞ்சுகிறேன். காதல் பக்தியின் வழி அற்புதமானது. எனக்கு வழி சொல்லிவிட்டுப் போ. அகர்பத்தி, சந்தனக் கட்டைகளால் ஆன சிதை உண்டாக்கி, அதில் உன் கையாலேயே என்னை எரித்துவிடு. எரிந்து சாம்பலாகிவிட்ட பிறகு, அதனை உடல் முழுவதும் பூசிக்கொள். மீராவின் காதலன் கிரிதர நாகர்... என்னை ஜோதியுடன் கலக்கச் செய்துவிடு.’ 

* 'அம்மாடியோவ்! நான் கோவிந்தனை விலைக்கு வாங்கிவிட்டேன்! சிலர் அவரை 'எளிதாகக் கிட்டியவர்’ என்கிறார்கள். சிலரோ, அவரை `மிகவும் பாரமானவர்’ என்கின்றனர். நான் தராசில் எடைபோட்டு வாங்கிவிட்டேன். சிலர் `அவர் விலைமதிப்பற்றவர்’ என்கின்றனர். வேறு சிலரோ `எளிதானவர்’ என்கின்றனர். நானோ அந்த விலைமதிப்பற்ற பொருளை எளிதாக அடைந்துவிட்டேன். சிலர் அவரைக் `கருமை நிறக் கண்ணன்’ என்கின்றனர். சிலர் அவரை `வெளுப்பு நிறம் கொண்டவர்’ என்கின்றனர். ஆனால், எனக்கோ அவர் அன்பின் வசப்பட்டவராகக் காணப்படுகிறார்...’ 

* `என் மீது வண்ணம் கலந்த நீரை பீய்ச்சியடிக்காதே கண்ணா! எனது புடவை முழுவதும் வண்ண நீரில் நனைந்துவிட்டது. வண்ண நீரை அடிப்பதை நிறுத்து. இல்லாவிட்டால், நான் உன்மீது கடுஞ்சொற்களை வீசுவேன். சிவப்பு வண்ணப் பொடி நாலா பக்கங்களிலும் பறக்கிறது. இதை நீ கவனத்தில் கொள்ள வேண்டும். நேரே என் முகத்திலேயே வண்ண நீரைப் பீய்ச்சி அடிக்கிறாயே... நீ மிகவும் போக்கிரி! மனம்போல் செய்கிறவன். மீராவின் காதலன் கிரிதர நாகர் உன் பாதத் தாமரைகளைத் தொட்டு வணங்குகிறேன்.’ 

பெண்களுக்கு மதிப்புக் கொடுக்காத ஒரு சமுதாயச் சூழலில் மீராபாய் போன்றதொரு சிறந்த பக்த சிரோமணி, பெண் கவிஞர் இருந்து, வாழ்ந்து, பக்திப் பாடல்கள் பாடியது மிகப்பெரிய, போற்றுதலுக்குரிய செயலாகவே கருதப்பட வேண்டும். 

நூல்: மீராபாய்: வாழ்க்கை வரலாறும் பாடல்களும்

ஆசிரியர்: எம்.சேஷன் 

வெளியீடு: எல்கேஎம் பப்ளிகேஷன், 33, ரங்கன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: 044-24361141. விலை: ரூ.120/-. 
***  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement