Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை! - வழிகாட்டும் இருளர் வாழ்க்கைமுறை!

ரில் ஓரிடத்தில்கூட போஸ்டர் இல்லை; பிரமாண்டமான ஃபிளெக்ஸ் போர்டுகள் இல்லை; எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை; ஒருவருக்குக்கூடத் தனிப்பட்ட முறையில் அழைப்பு அனுப்பப்படவில்லை. ஆனாலும், ஒவ்வோர் ஆண்டும் மாசிமக தினத்தில், மகாபலிபுரத்தில் கூடிவிடுகிறார்கள் இருளர் பழங்குடி மக்கள். அதுவும் நூறு இருநூறு கணக்கிலல்ல... பல்லாயிரக்கணக்கில்! அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனைக் காணத்தான் பல ஊர்களிலிருந்து வந்து திரளாக கடற்கரையில் கூடுகிறார்கள். இந்த வருடம் நாம் அங்கே போனபோது, மலைக்கவைத்தது ஜனத்திரள்.

இருளர் திருவிழா

பௌர்ணமி இரவு... ரம்மியமான கடற்கரை ஓரம்... குடும்பம் குடும்பமாகக் குழுமியிருக்கிறார்கள் இருளர் இன மக்கள். சற்று தூரத்தில் ஒரு மேடை... அதில் இருளர்களின் பண்பாட்டு விழுமியங்களை விளக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்படுகின்றன. ஆண், பெண் பேதமில்லாமல் சகோதர வாஞ்சையோடும் அன்போடும் ஆடிக் களித்து, அதிலேயே திளைத்துப் போகிறார்கள் சில இளைஞர்கள். ஆடல், பாடல்களுக்கு இடையிடையே சமூக விழிப்புஉணர்வுப் பாடல்களும் இசைக்கப்படுகின்றன. அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை அரசிடமிருந்து எப்படிப் பெறுவது என்பது குறித்த ஆலோசனைகளையும் சிலர் வழங்குகிறார்கள். இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த திருவிழா விடிய விடிய நடக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டமாகக் கழிகிறது.

அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கிறது அவர்களின் முக்கியச் சடக்கு. கடலுக்கு மிக அருகே குடும்பம் குடும்பமாகக் கூடுகிறார்கள். குடும்பம் குடும்பமாகப் பிரிந்து நிற்கிறார்கள். கடற்கரை மணலில் கூம்பு வடிவத்தில் சிலைபோலச் (குழந்தைகள் கட்டும் மணல் வீடுபோல) செய்கிறார்கள். அதற்குக் கீழே ஏழு படிக்கட்டுகளை அமைத்து, அதில் பூ, அரிசி ஆகியவை வைத்து சூடமேற்றுகிறார்கள். தங்கள் குடும்பத்திலிருக்கும் ஓர் ஆணின் கழுத்தில் மாலையிட்டு, கன்னத்தில் சந்தனம் பூசி, சாமியாட அழைக்கிறார்கள். அழைத்த சில மணித்துளிகளிலேயே பெரும்பாலானவர்களுக்கு அருள் வந்துவிடுகிறது; உக்கிரமாகக் குரல் கொடுக்கிறார்கள் அவர்களில் பலர்.

நடன நிகழ்ச்சி

சாமியாடுபவரின் மனைவி, அவரிடம் குறி கேட்கிறார். சம்பந்தப்பட்ட சாமியாடி, மனைவியிடம் மட்டும் சங்கேத மொழியில் ஏதோ சொல்கிறார். பிறகு கடலை நோக்கி ஓடுகிறார். சுற்றியிருப்பவர்கள் ஓடிப் போய் அவரைப் பிடித்து, சமாதானம் செய்வதுபோலப் பேசி அழைத்துவருகிறார்கள். அங்கேயே மொட்டையடிப்பது, காதுகுத்துவது, திருமணம் நிச்சயம் செய்வது, திருமணம் செய்துகொள்வது... போன்ற வைபவங்களும் நடக்கின்றன. சூரியன் உதித்த பின்னர், அதுவரை ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் கொண்டு வந்திருந்த சேலையால் அமைத்திருந்த கூடாரங்களை அவிழ்க்கிறார்கள்; ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள்.

இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்துபவரும், இருளர் பழங்குடி நல அமைப்பின் தலைவருமான துரைராஜிடம் பேசினோம்...

"ஒவ்வொரு வருடமும் மாசி மாத பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டிவனம் போன்ற பல மாவட்டங்களில் இருந்து இங்கே வந்து கூடிவிடுவோம். யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த அழைப்பும் கொடுக்க மாட்டோம். ஆனால், எங்கள் இன மக்கள் எல்லோருமே, எப்படியாவது இங்கே வந்துவிடுவார்கள். சிலர் இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னரே வந்து இங்கு தங்கிவிடுவதுமுண்டு.

கன்னியம்மன் - காத்தவராயன்

துரைராஜ்எங்கள் குலதெய்வமான கன்னியம்மனுக்கு ஒரு பழக்கம் உண்டு. நாங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்காக எங்களிடம் கோபித்துக்கொண்டு, மார்கழி மாத ஆரம்பத்திலேயே இங்கே வந்து தங்கிவிடுவார். அடுத்த மூன்று மாதங்களும் எங்களுக்கு மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும். ஏராளமான கஷடங்களை அனுபவிப்போம். அப்போது எங்கள் கன்னியம்மனை வேண்டிக் கொள்வோம்.

மாசி மாதம் பௌர்ணமியன்று எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவோம். பூஜை முடிந்தவுடன்  கன்னியம்மனை மீண்டும் எங்கள் வீட்டுக்கே அழைத்துச் செல்வோம்.  அதற்குப் பிறகுதான் எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பது கால காலமாக எங்களிடையே நிலவும் நம்பிக்கை.

காடுகளில் வசித்தபோது, எங்கள் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். அப்போது, அவர்களுக்கு வழிகாட்டியாக முன்னே சென்றவள்தான் கன்னியம்மா. காலப்போக்கில் அவளையே நாங்கள் தெய்வமாக வழிபடத் தொடங்கினோம். ஆரம்பகாலத்திலிருந்தே ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிக முன்னுரிமை கொடுப்போம். இப்போதும் அது தொடர்கிறது. திருமணமான பிறகு கணவன்-மனைவி இருவருக்கும் சம உரிமை உண்டு. எல்லா வேலைகளையும் இணைந்துதான் செய்வோம். கணவன்-மனைவிக்குள் பிரச்னை, பிரிந்து செல்வது என்று முடிவெடுத்தாலும்கூட சிக்கலில்லாமல் பேசி, பிரிந்துகொள்ளலாம்.

எங்கள் நடைமுறைகள் எங்கள் பெண்களுக்கு இவ்வளவு சுதந்திரம் அளித்திருந்தும், இந்தச் சமூகத்தில் அவர்கள் இன்னும் முன்னேற்றம் பெறாமலேயேதான் இருக்கிறார்கள். பலர் இன்னும் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்பது கொடுமை. வாரம் இருநூறு முன்னூறு ரூபாய் சம்பளத்துக்கு செங்கல் சூளை, கல்குவாரிகளில் வேலை பார்த்துவருகிறார்கள்.

வழிபாடு

இதுபோன்ற விழா நடப்பதால்தான் குறைந்தபட்சம் யார் எப்படி இருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், என்னவெல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்களை மீட்கவும் இந்த மக்கள் ஒன்று கூடல் நிகழ்வு மிகவும் உதவியாகயிருக்கிறது.

இத்தனை ஆயிரம் மக்கள் இங்கே ஒன்று கூடினாலும், இருட்டுக்குள்தான் இருக்கிறோம். ஒரு விளக்குக்கூட இல்லை. டாய்லெட் வசதிகள் இல்லாததால் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது. அடுத்தவருடமாவது அரசாங்கம் எங்களுக்கு இதுபோன்ற வசதிகளைச் செய்துதரவேண்டும். " என்கிற கோரிக்கையோடு முடிக்கிறார் துரைராஜ்.

கிளம்பும் மக்கள்

பச்சையம்மாள்கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு, இப்போது சமூகப் பணிகள் ஆற்றிவருபவர் பச்சையம்மாள். அவரிடம் பேசினோம்... "என் அண்ணன் செய்யாறுக்குப் பக்கத்துல ஒரு கல்குவாரியில வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. அவரைப் பார்க்குறதுக்காக நான் அடிக்கடி அங்கே போவேன். ஒரு தடவை அப்படிப் பார்க்கப் போனப்ப `உன் அண்ணன் வாங்கின கடன் அதிகமாயிடுச்சு. ஒரு ஆள் வேலை செஞ்சு கழிக்க முடியாது. நீயும் கூட இருந்து வேலை செய்'னு அந்த ஓனர் சொல்லிட்டார்.

எட்டு வருச காலம் அங்கேதான் வேலை செஞ்சேன். வாரத்துக்கு 400 ரூவா சம்பளம்... குவாரியில மட்டும் வேலையிருக்காது. செங்கச் சூளைக்கு வர்ற வண்டிகள்ல கல் ஏத்தி, அடுக்குற வேலையையும் பார்க்கணும். அங்கே ஏற்கெனவே கொத்தடிமையா இருந்த ஒருத்தரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவர் பேர் அருள். அவர் சின்ன வயசுலருந்தே கொத்தடிமையா இருந்தாரு. ஓனர்தான் எங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் செஞ்சுவெச்சாரு. கல்யாணத்துக்கு ஆன செலவையும் எங்க கடன்ல ஏத்திட்டாரு. செலவுக்குக் காசு கேட்டாலும் தர மாட்டாரு. 2012-ம் வருஷத்துல `இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன்’கிற அமைப்புதான் எங்க மூணு பேரையும் மீட்டு, கூட்டிட்டு வந்தது. வெளியில வந்த பிறகு நானும் அவங்களோட சேர்ந்து கொத்தடிமையா இருக்கறவங்களை மீட்கும் வேலையில இறங்கினேன். கரன்ட் வசதி, ரேஷன் கார்டு, பட்டா இல்லாம கஷடப்படுற இருளர் இன மக்களுக்கு அதெல்லாம் கிடைக்கவும் போராடிக்கிட்டு இருக்கேன்" என்கிறார் பச்சையம்மாள்.

இருள் சூழ்ந்திருக்கும் திருவிழா

தாங்கள் வாழ்வில் சூழ்ந்திருக்கும் இருளைப் போக்குவதற்காக ஒவ்வொரு வருடமும் பௌர்ணமி வெளிச்சத்தில் கடற்கரையில் கூடுகிறார்கள் இந்த மக்கள். இவர்களின் வாழ்க்கையில் ஒளி பரவச்செய்யும் பொறுப்பு கன்னியம்மனுக்கு மட்டுமல்ல... தமிழ்நாடு அரசுக்குமே இருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement