Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

நாகதோஷம் போக்கும் ஓட்டேரி செல்லப்பிள்ளை ராயர்!

புராதனச் சிறப்பு மிக்க பல ஆலயங்கள் நமக்கு அருகில் இருந்தாலும், அருகில் இருக்கும் ஒரே காரணத்தினால், நமக்கு அத்தகைய ஆலயங்களின் சிறப்புகள் தெரியாமலேயே போய்விடுகிறது. பல திருத்தலங்களுக்குச் செல்லும் நாம், அருகிலிருக்கும் பழைமையான கோயில்களை மறந்துவிடுகிறோம்.

ராயர் கோயில்


கர்நாடக மாநிலம் மேல்கோட்டை திருநாராயண பெருமாள் கோயிலில் என்னென்ன விசேஷங்கள் நடைபெறுகிறதோ அதேபோல் இங்கும் நடைபெறுவதாக அறிந்து, இன்று காலை நாம் கோயிலை தரிசிக்கச் சென்றோம். சுமார் 700 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம், ஓட்டேரியிலிருந்து அயனாவரம் செல்லும் கொன்னூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது அருள்மிகு செல்லப்பிள்ளை ராயர் திருக்கோயில். நாம் சென்றபோது, பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெருமாளை கண்களும் மனமும் குளிரக் குளிர பக்திப் பரவசத்துடன் தரிசித்தோம். 
கோயிலின் சிறப்புகள் மற்றும் விசேஷங்கள் பற்றி பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஆலய அர்ச்சகர் கார்த்திக்.

''கலியுக வரதன், ஶ்ரீராமாநுஜர் கண்டெடுத்த செல்லப்பிள்ளை அருளும் மேல்கோட்டை போலவே, இந்தத் தலத்திலும் பெருமாள் செல்லப்பிள்ளை ராயர் என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார். மேல்கோட்டை திருநாராயண பெருமாளுக்கு என்னென்ன வைபவங்கள் நடைபெறுகிறதோ அதே போன்ற வைபவங்கள் இங்கும் நடைபெறுகின்றன. மேல்கோட்டை செல்ல முடியாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்தால், மேல்கோட்டை பெருமாளை தரிசித்த பலனும், மன நிறைவும் கிடைக்கும். மேல்கோட்டையில் இருப்பதைப் போலவே, இந்தக் கோயிலிலும் பெருமாள் திருநாராயண பெருமாள் என்றும், தாயார் யதுகிரித் தாயார் என்றும் திருப்பெயர் ஏற்றுக் காட்சி தருகிறார்கள். உற்சவருக்கு செல்லப்பிள்ளை ராயர் என்று திருப்பெயர்.

ஆஞ்சநேயர்


இங்கு சுதர்சனர், உடையவர் ஸ்ரீராமாநுஜர், மணவாள மாமுனிகள், ஹயக்ரீவர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் என பல சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. மூலவரின் திருவடிகளில் பீபி நாச்சியார் திருவுருவம் அமைந்திருக்கிறது. டில்லி பாதுஷாவின் மகளான பீபி நாச்சியார், திருநாராயணபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெருமாளிடம் அதீத அன்பு செலுத்தினாள். உடையவர் ஶ்ரீராமாநுஜர் பெரும் முயற்சி எடுத்து விக்கிரகத்தை மீட்டு வரும்போது, பீபி நாச்சியாரும் பெருமாளைப் பிரிய மனமில்லாமல், பின்னாலேயே தொடர்ந்து வந்து, திருநாராயண பெருமாள் திருவடிகளில் ஐக்கியமாகிவிட்டார். இந்தத் தலத்தில் ஶ்ரீராமாநுஜர் தந்தையாகவும் பெருமாள் பிள்ளையாகவும் பாவிக்கப்படுகிறார்கள்'' என்றார்.

பெருமாள் கோயில்


இந்தத் தலத்தில் பெருமாள் குழந்தையாக இருப்பதால், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபடக்கூடிய பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கிறது. மேலும் செல்வச் செழிப்புக்கும் காரணமானவர் என்பதால், வியாபார விருத்திக்கும் இவரை வழிபடலாம். பெருமாள் புற்றிலிருந்து வெளிப்பட்டவர் என்பதால், சர்ப்ப தோஷம் உள்ளிட்ட தோஷங்களும் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் பெருமாளை 21 முறை  வலம் வந்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு குங்கும அர்ச்சனை நடைபெறுகிறது. அர்ச்சனை செய்த குங்கும பிரசாதம் பெற்றுக்கொண்டு தினமும் பெண்கள் நெற்றியில் இட்டுக்கொண்டால், அவர்கள் வீட்டில் சகல செல்வங்களும் நிலைத்திருக்கும் என்பது கோயிலுக்கு வரும் பெண்களின் மனப்பூர்வமான நம்பிக்கையாக உள்ளது. வெள்ளிக்கிழமைதோறும் தாயாருக்கு வில்வார்ச்சனை செய்து ஸ்ரீ சூக்த பாராயணம் செய்யப்படுகிறது. அப்போது தரிசனம் செய்தால் சந்தான பாக்கியம் உண்டாகும். ''மாதம்தோறும் விசேஷங்களுக்கும் விழாக்களுக்கும் குறைவே இல்லாத கோயில் செல்லப்பிள்ளை ராயர் திருக்கோயில்'' என்னும் அர்ச்சகர் கார்த்திக் தொடர்ந்து,

பெருமாள்


''ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஹோமம் நடைபெறுகிறது. சித்திரைத் திருவாதிரையில் உடையவருக்கு திருச்சாத்துமுறை சேவை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலை விட்டு வெளியில் வருவதில்லை. பக்தர்கள்தான் சொர்க்கவாசலுக்கு அருகில் சென்று பெருமாளை சேவிக்கவேண்டும் என்ற வழக்கம் இங்கே இருப்பதால், பெருமாள், 'படி தாண்டா பெருமாள்' என்று போற்றப்படுகிறார். மற்றபடி புரட்டாசி சனிக்கிழமைகள், ஆடிப்பூரம் திருக்கல்யாணம், மாசி மாத பிரம்மோற்சவம் ஆகிய விசேஷங்கள் நடைபெறுகின்றன. கர்நாடகாவின் மேல்கோட்டையூர் நாராயணபுரம் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் இந்த ஓட்டேரி - அயனாவரம்  கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள செல்லப்பிள்ளை ராயர் பெருமாளை தரிசித்து அருள் பெறலாம். வியாபார விருத்திக்கு இன்றும் புகழ்பெற்று விளங்கும் இந்த ஆலயம் உங்களை செல்வச்செழிப்புள்ள நபராக மாற்றும் என்பதில் ஐயமே இல்லை" என்றார். 

தொடர்ச்சியான விரயச் செலவுகள், வியாபார மந்தம் என்று வருத்தப்படுபவர்கள் இந்த ஆலயத்துக்குச் சென்று செல்லப்பிள்ளை ராயரை தரிசித்துப் பலன் பெறலாமே!

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement