வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:31 (09/03/2018)

ஜாதகத்தில் `வீர கேந்திரம்’ எனும் 3, 6, 9, 12 இடங்கள்... தரும் பலன்கள் என்னென்ன? #Astrology

ஜோதிட சாஸ்திரத்தில் கேந்திரம் என்னும் கோணத்தில், ஒவ்வோர் இடத்துக்கும் உள்ள முக்கியத்துவம், அவை ஏற்கும் பொறுப்புகள் பற்றி பார்த்து வருகிறோம். இப்போது, `வீர கேந்திரம்' என்று ஜாதகக் கட்டத்தில் குறிப்பிடப்படும் 3, 6, 9, 12 ஆகிய இடங்களைப் பற்றியும், அவை வகிக்கும் காரகத்துவங்கள் பற்றியும் ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

கேந்திரம்

''ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகரின் பலம், பலவீனங்களைச் சொல்லும் 3, 6, 9, 12 ஆகிய இடங்கள் வெற்றிக் கேந்திரங்களாகும். ஜாதகர் ஈடுபடும் காரியங்களில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளைச் சொல்லும் கேந்திரங்கள் இவை. இவற்றில் நிற்கும் கிரகங்களின் தன்மைகளை வைத்துதான் ஒரு ஜாதகர், தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சிக்கல்கள், தடைகள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிவதுடன், தன்னுடைய எதிரிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.

தைரியம் மற்றும் முயற்சி ஸ்தானம் எனும் மூன்றாமிடம்:

எதிரியை வெற்றிகொள்ளும் திறமை, வேலையாள்கள், இசையில் ஆர்வம், வீரியம், சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் செய்து முடித்தல், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், ஆபரணங்கள் அணியும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த இடம் குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும். 

வீரம்

கடன், நோய் மற்றும் எதிரி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் ஆறாமிடம்:

ஒருவருக்கு ஏற்படும் நோய் மற்றும் அதன் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல், வீண் வம்பு, திருடர்களால் ஆபத்து, பொருள்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஏற்படும் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால், விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், நோய் ஆகியவற்றுக்கு 6 -ம் இடம்தான் பொறுப்பாகும். சிறைப்படுதல், உயர்பதவி பெறுதல் போன்றவற்றையும் இந்த ஆறாம் இடம்தான் நிர்ணயிக்கும்.ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்

பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் இடம்: 

பாக்கியஸ்தானம் எனப்படும் 9-ம் இடம், சென்ற பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப,  நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்கும் பலன்களைக் குறிக்கும். 'பாவாதி பாவம்' என்ற விதிப்படி 5-ம் இடத்துக்கு 5-ம் இடம் 9 -ம் இடம். 
தானம், தர்மம் செய்யும் குணம், திருகோயில்களைக் கட்டும் பணியில் ஈடுபடுதல், பழைய கோயில்களை மறுசீரமைப்பு செய்வது, கும்பாபிஷேகம் செய்வது போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மிக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, நன்றியுணர்வு இவற்றைத் தெரிவிக்கும் இடம்.
தந்தையின் வாழ்க்கை நிலையைச் சொல்லும் இடமும் இந்த 9-ம் இடம்தான். ஜாதகர் அனுபவிக்கும் சகல சௌபாக்கியங்கள் பற்றியும்கூட, இந்த ஒன்பதாம் இடத்தையும் அந்த இடத்தில் இருக்கும் கிரகங்களை வைத்தும் கூறிவிடலாம். 

விரயஸ்தானம் எனும் 12-ம் இடம்:

வெளிநாட்டு வேலை, உத்தியோகம், செலவினங்கள், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அநாவசிய செலவுகள், சிறைப்படுதல், நிம்மதியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, இல்லற சுகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கும் இடம். மறுபிறவி, மரணத்துக்குப் பிந்தைய நிலை ஆகியவற்றையும் இந்த இடம் குறிக்கும். குறிப்பாக, 'விரய பாவம்' எனப்படும். ஒவ்வோர் இடத்துக்கும் அதற்கு 12-ம் இடமே மறைவுஸ்தானமாகும்'' என்றார் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்