ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா, தவறா?

காரியங்களில் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றி, வெற்றியைத் தருபவர் சனீஸ்வர பகவான். நவகிரகங்களில், சனிபகவான் என்றாலே, எல்லோருக்கும் ஓர் அச்சமும், தவிப்பும் ஏற்படும். சனிபகவானுக்கான வழிபாடுகளும் பூஜைகளும்கூட வெகு சிரத்தையுடன் செய்யப்படுகிறது.  'சனிபகவானைப்போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை' என்ற பயமே காரணம். சனி பகவானுக்கு எள்ளைக் கொண்டு தீபம் ஏற்றுவது சிலருடைய வழக்கமாக இருக்கிறது. ஆனால், சனி பகவானுக்கு எள்ளைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறானது என்றும், சரியானதுதான் என்றும் இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. இது குறித்த நம் சந்தேகத்தைப் போக்கிக்கொள்வதற்காக, திருநள்ளாறு ஆலயத்தின் அர்ச்சகர் கோட்டீஸ்வர சிவாச்சார்யரிடம் கேட்டோம்.

எள் தீபம்

"பொதுவாக தானியங்களை எரிப்பது என்பதே தவறு. யாகங்களில், ஹோமங்களில் தானியங்களை முழுமையாகத் தீயில் சமர்ப்பிப்பது என்பது வேறு. அது அந்தந்த தேவதைகளுக்கு உரிய ஆகுதியாகச் சென்று சேர்ந்து விடுகிறது. ஆனால், சனீஸ்வரனுக்கு உரிய சமித்தான எள்ளைக் கொண்டு விளக்கு ஏற்றுவது என்பது தவறான செயல். எள்ளில் இருந்து பெறப்பட்ட நல்லெண்ணெயைக் கொண்டுதான் விளக்கேற்ற வேண்டும். அதுவே சாஸ்திரங்கள் சொல்லும் உண்மையும்கூட. 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்கூட, ஒருமுறை எள்ளை எரித்து விளக்கிடும் முறை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். ஆர்வக்கோளாறால் எவரோ செய்ததை நாமும் ஆராயாமல் செய்வது தவறானது. ஆகமங்கள் எங்கும் இந்த விளக்கைப் பற்றி சொல்லவே இல்லை. எள் சாதம் செய்து சனீஸ்வரனுக்கு நைவேத்தியமாக்கி கொடுக்கலாம் அது வேறு விஷயம்.

தானியங்கள் யாவும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தைப்பெற்றவை. அந்த கிரகங்களின் குணாதிசயங்களை பிரதிபலிப்பவை. சனீஸ்வர பகவானின் குணங்களைக் கொண்டிருக்கும் எள்ளை தீபத்தின் வழியாக எரிப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல. இதனால் எதிர்மறை எண்ணங்களே உருவாகும். யாரோ எப்போதோ செய்ததால் அதைத்தொடர்ந்து எல்லோரும் செய்து வருகிறார்கள். சண்டிகேஸ்வரருக்கு கையை தட்டி காண்பிப்பது, நந்தியம்பெருமானின் பின்பக்கம் தட்டுவது போன்ற ஆதாரமற்றச் செயலைப்போன்றது தான் எள் தீபம் ஏற்றுவதும். எள் சூடு. எள் நெய் குளிர்ச்சி. எள்ளை எண்ணெய்யாக தீபமிட்டு வணங்குவது தான் சனிபகவானுக்கு ப்ரீத்தியைத்தரும்.   

சனீஸ்வர பகவான்

இறைவனுக்கு ஒளியைத் தரும் விளக்கேற்றும் செயல் புண்ணியமான காரியம். கோயில்களில் விளக்கேற்றும் கைங்கர்யத்துக்காக அரசர்களால் நிவந்தம் எனும் பெயரில் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. முக்கூட்டு எண்ணெய் என்று ஆதிகாலத்தில் பனையெண்ணெய், ஆமணக்கெண்ணெய், எள் எண்ணெய்தான் ஆலயங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என வரலாறு கூறுகிறது. வசதியானவர்களால் மட்டுமே பசு நெய் கொண்டு விளக்கு ஏற்றப்பட்டு வந்துள்ளது. இன்று விளக்கேற்றும் எண்ணெய் என வகை வகையாக பல எண்ணெய்கள் வந்துள்ளன. என்றாலும், எள் எண்ணெய் கொண்டு போடப்படும் தீபமே உத்தமமானது. அப்படி இருக்க மகாலட்சுமி வாசம் செய்யும் எள்ளை எரித்து விளக்கேற்றுவது நல்லதல்ல. 

தமிழகத்தில் இந்த வழக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட இருந்ததில்லை. எள்ளை எரித்து விளக்கிடும் முறை இலங்கையில் இருந்துதான் வந்துள்ளது. அங்குதான் எள்ளைச் சிறு மூட்டையாகக் கட்டி, நல்லெண்ணெயில் இட்டு விளக்கிடுவார்கள். அது அப்படியே தமிழகத்துக்கு வந்துள்ளது. சனிபகவானின் விருப்பத்துக்குரிய சமித்தான எள்ளை எரித்து விளக்கிட வேண்டாம் என்பதே என் கருத்து. மனம் உருகி  வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை இறைவன் நிறைவேற்றுவார். கருணாமூர்த்தியான இறைவன், கண்ணப்பரின் இறைச்சியையும், சபரி சுவைத்துப் பார்த்த கனிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ன? ஆனால், ஆலயங்களில் வழிபாடு என்பது, பகவான் வகுத்துத் தந்த ஆகமங்களிபடிதான் செய்யப்படவேண்டும்" என்றார்.

நாமும் ஆகம விதிகளின்படியே விளக்கேற்றி இறைவனை வழிபடுவோம்; அனைத்து வளங்களையும் பெறுவோம். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!