டாக்டர், இன்ஜினீயர், போலீஸ்காரர்... சிலைவைத்து வேண்டும் பக்தர்கள்! - ஓர் ஆச்சர்யக் கோயில்

'ப்பாடா, என் புள்ளைக்கு சிலைவெச்சாச்சு. இனிமே அவன் நல்லாப் படிப்பான்", "இப்பத்தான் எனக்கு நிம்மதி... என் பொண்ணுக்கு சிலைவெச்சாச்சு. அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் நடந்துடும்"... இப்படியெல்லாம் சிலர் சொல்லக் கேட்டபோது, நமக்குச் சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. 'இது என்ன புதுசாக இருக்கிறதே, சிலைவைத்தால் பிரச்னை எப்படித் தீரும்?' என்ற சந்தேகத்தில் விசாரித்தோம். அப்போதுதான் 'தென்னம்பாக்கம் ஶ்ரீஅழகர் சித்தர் ஆலயம்' பற்றி நமக்குத் தெரியவந்தது. உடனே கோயிலை தரிசிக்கக் கிளம்பிவிட்டோம்.

கோயில்

புதுச்சேரியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில், தமிழக எல்லைப் பகுதியில் இருக்கிறது தென்னம்பாக்கம். இங்கேதான் ஶ்ரீஅழகர் சித்தர் கோயில் அமைந்திருக்கிறது. அடர்த்தியாக ஆலமரங்கள் வளர்ந்திருக்கும் பசுமைச் சூழலில், பல்லாயிரக்கணக்கான மனித உருவச் சிலைகளின் மத்தியில் அமைந்திருக்கிறது அழகு முத்து ஐயனார் கோயில். பின்பகுதியில் கிணற்றின் மீது கட்டப்பட்ட ஸ்ரீஅழகர் சித்தர் கோயில் இருக்கிறது. சுமார் 360 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்துக்கு வந்த அழகர் சித்தர், இந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நோய்களை குணமாக்கியிருக்கிறார். பின்னர், அந்தக் கிணற்றிலேயே சமாதி அடைந்துவிட்டார். அந்தக் கிணற்றின் மேலேயே சித்தருக்கு ஓர் எளிய கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

நாம் சென்றது திங்கள்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் குவிந்திருந்தனர். அத்தனைபேர் முகங்களிலும், 'சிலை வைத்தால் நம் பிரச்னை தீர்ந்துவிடும்' என்ற நம்பிக்கை பளிச்சிட்டது தெரிந்தது.

இங்குள்ள பெரும்பாலான சிலைகள் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், வெளிநாட்டுப் பயணம் வாய்க்க வேண்டும், புத்திரபாக்கியம் கிட்ட வேண்டும், திருமணம் கைகூட வேண்டும், வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டும், சொத்துப் பிரச்னை தீர வேண்டும்... போன்ற பல கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக வைக்கப்பட்டவை. பதவி கிடைப்பதற்கும்கூட இங்கே சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

பக்தர்கள், தாங்கள் என்னவாக ஆக வேண்டும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அந்த வடிவத்தில் சிலை வடித்து வைக்கிறார்கள். அப்படிச் சிலை வைத்ததுமே அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்கிற நம்பிக்கையுடன் செல்கிறார்கள்.

சிலைகள்

வேண்டிக்கொள்ளும்போது ஒரு சிலை வைப்பதும், வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மற்றொரு சிலை வைப்பதும் சில பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. தென்னம்பாக்கம் அழகரை வேண்டிக்கொண்டு, குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், கையில் குழந்தையுடன் இருப்பது போன்ற பெண்ணின் சிலையை வைக்கிறார்கள். அதேபோல் மாணவர்கள், பட்டதாரிகள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வக்கீல்கள், ராணுவ வீரர்கள், போலீஸ்காரர்... என்று பல உருவங்களில் சிலைகள் காணப்படுகின்றன.

வேண்டுதலுக்கேற்ப சிலைகளைச் செய்வதற்கு, தேடி அலைய வேண்டும் என்ற அவசியம்கூட பக்தர்களுக்கு இல்லை. கோயிலுக்கு அருகிலேயே சிலைகளை வடித்துத் தரும் கடைகளும் இருக்கின்றன. சில சிலைகள் ரெடிமேடாகவும் கிடைக்கின்றன.

எத்தனையோ கோயில்களில் என்னன்னவோ வேண்டுதல்களைப் பார்த்த நமக்கு, இந்தச் சிலை வேண்டுதலும், அங்கே குவிந்திருந்த சிலைகளும், இந்த வேண்டுதலில் மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு போன்ற தலைவர்களுக்காகவும் வேண்டிக்கொண்டு இங்கே சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில், இங்கு எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகளின் சிலைகளையும் எதிர்பார்க்கலாம்.

திங்கள்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து, பொங்கல்வைத்து அன்னதானம் செய்வது சில பக்தர்களின் வழக்கம்.

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக இப்போது கோயில் வளாகத்திலேயே சிலைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. பக்தர்கள், தங்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்ப கட்டணம் செலுத்தி சிலைகளைப் பெற்றுக் கோயிலில் வைக்கலாம். வாகனம் வாங்கும் பக்தர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ப கார், வேன், பஸ், லாரி போன்ற வாகனங்களின் சிலைகளை வாங்கி வைப்பது வழக்கம். நாம் சென்றிருந்தபோது, பக்தர் ஒருவர் விமானம் வாங்குவதற்காக விமானத்தின் சிலையைச் செய்து தரும்படிக் கேட்டது, நமக்கு மட்டுமல்ல, அங்கே வந்திருந்த பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

உருவங்கள்

நம்பிக்கைதான் பக்திக்கு ஆதாரம். அந்த வகையில் எளிய பக்தர்களின் சிலை வேண்டுதல்களும் விரைவில் நிறைவேற நாமும் வேண்டிக்கொண்டோம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!