ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமாநுஜ மகா தேசிகர் காலமானார்!

ஜீயர்

ஶ்ரீராமாநுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றி வருகிறது திருச்சி ஶ்ரீரங்கம் ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம். 1700-ம் வருடம் தொடங்கப்பட்ட ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11 வது பட்டமாக, கடந்த 1989-ம் வருடம் ஜூன் மாதம் 1-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் ஶ்ரீமுஷ்ணம் ஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்கராமானுஜ மகாதேசிகன் ஜீயர் சுவாமிகள். 

நியாயம் மற்றும் தர்க்க சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்த சுவாமிகள், தெய்வ மூர்த்தங்களை அலங்கரித்து வழிபடும் முறைகளை விவரிக்கும், 'அலங்கார சாஸ்திர'த்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். 

மேலும் ஆயுர்வேதம், ஜோதிடம், இசை, சிற்பம் போன்ற கலைகளிலும் செய்யுள்கள் இயற்றுவதிலும் புலமை பெற்றிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சிறந்து விளங்கினார். 

ஶ்ரீராமாநுஜரால் தோற்றுவிக்கப்பட்டதும், ஸ்வாமி ஶ்ரீநிகமாந்த மகாதேசிகனால் மேம்படுத்தப்பட்டதுமான ஶ்ரீவைஷ்ணவம் மற்றும் பிரபத்தி மார்க்கத்தைப் பரப்புவதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். மேலும், ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் பள்ளிக்கூடமும் கல்லூரியும் ஏற்படுத்தி, கல்வித்துறையிலும் அரும்பணியாற்றினார்.

சுமார் 30 ஆண்டுகளாக ஶ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11 வது பட்டமாக அரும்பணியாற்றிய ஶ்ரீமத் ஆண்டவன் மகாதேசிகர் சுவாமிகள் இன்று மதியம் 12.45 மணியளவில் காலமானார். ஶ்ரீசுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம் நாளை காலை 9 மணிக்கு மேல் ஶ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் நடைபெறும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!