``உம் பெருமாளை சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாள் சேவையை யார் செய்வது?’’- வடுகநம்பி #Ramanujar | Story about feelgood incident in vaduka nambi's life - The dearest disciple of Swamy ramanujar

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (19/03/2018)

கடைசி தொடர்பு:18:59 (19/03/2018)

``உம் பெருமாளை சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாள் சேவையை யார் செய்வது?’’- வடுகநம்பி #Ramanujar

`மாதா, பிதா, குரு, தெய்வம்...’ என்று குருவுக்கான இடத்தை, தெய்வத்துக்கும் முன்னதாக இருப்பதாகச் சொல்லி, முக்கியத்துவத்தை உணரவைத்தவர்கள் நம் முன்னோர். நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் குருபக்தியைப் போற்றும் அநேக நிகழ்ச்சிகள் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் மட்டுமல்லாமல், மகான்களின் வாழ்க்கையிலும்கூட, குருபக்தியை உணர்த்தும்விதமாக நெகிழ்ச்சியூட்டும் எண்ணற்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. குருபக்திக்கு ஆகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் ஶ்ரீராமாநுஜரின் சீடரான வடுகநம்பி.

வடுகநம்பி

கர்நாடக மாநிலம் சாளக்கிராமத்தில் பிறந்தவர் வடுகநம்பி. `உடையவர்' ஶ்ரீராமாநுஜர், திருநாராயணபுரம் திருத்தலத்தில் எழுந்தருளியபோது, அவரை தரிசித்து மகிழ்ந்ததுடன், தம்மைச் சீடராக ஏற்றுக்கொள்ளும்படியும் வேண்டிக்கொண்டார். வடுகநம்பியின் வைராக்கியத்தைக் கண்ட ஶ்ரீராமாநுஜர், வடுகநம்பியைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டார். பிரம்மசாரியான இவர், `ஶ்ரீஆந்திர பூரணர்' என்றும் அழைக்கப்பட்டார்.

தம்மிடம் பரிபூரணமாகத் தன்னை ஒப்படைத்துவிட்ட வடுகநம்பிக்கு, ஶ்ரீராமாநுஜர், சகல சாஸ்திர ஞானங்களையும் உபதேசித்து அருளினார். ஶ்ரீராமாநுஜர் எங்கு சென்றாலும் உடன் சென்று அவருக்குத்தேவையானவற்றை செய்து தருவார். குருவின் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்.

திருவரங்கத்தில் நம்பெருமாளின் வீதியுலா அடிக்கடி நடைபெறுவது விசேஷம். நம்பெருமாளை தரிசிப்பதிலும், அவருடைய கண்ணழகை ரசிப்பதிலும் எம்பெருமானாருக்கு எப்போதுமே தனிப் பிரியம் உண்டு.  

திருவரங்கம் பெருமாள்

 

அப்படி ஒருமுறை சுவாமி வீதி உலா நடைபெறும்போது, வடுகநம்பி மடத்துக்குள் பால் காய்ச்சிக்கொண்டிருந்தார். மடத்து வாசலுக்கு வந்த ஶ்ரீராமாநுஜர், நம்பெருமாளை சேவித்துக்கொண்டே, நம்பெருமாளின் திவ்விய அழகை தரிசிக்க வரும்படி வடுகநம்பியை அழைத்தார். ``அடியேன் உம்முடைய பெருமாளைக் காண வெளியே வந்தால், என் பெருமாளின் பால் பொங்கி வீணாகிவிடும். நான் வெளியே வர முடியாது'' என்று கூறிவிட்டார்.

அந்த அளவுக்கு குரு சேவை செய்வதே வடுகநம்பியின் வாழ்க்கை லட்சியமாக இருந்தது. ஶ்ரீராமாநுஜரின் நிழல்போலத் தொடர்ந்து வருவார். அவருடைய இஷ்ட தெய்வமும் அவரே. குருவின் பாதுகைகளை வணங்குவதிலும் பேரார்வம் கொண்டவர்.
ஒருமுறை ஶ்ரீராமாநுஜர் வெளியூருக்கு யாத்திரை புறப்பட்டபோது, வடுகநம்பி, யாத்திரைக்குத் தேவையான பொருள்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த மூட்டையில், ஶ்ரீராமாநுஜரின் இஷ்ட தெய்வமான ஶ்ரீவரதராஜ பெருமாள் விக்கிரகம் இருந்ததுடன், உடையவரின் திருப்பாதுகைகளும் இருந்தன.

 

ராமானுஜர்

பெருமாளின் திருமேனி விக்கிரகத்துடன், தம்முடைய பாதுகைகளும் இருப்பதைக் கண்ட ஶ்ரீராமாநுஜர், ``நம்பி, என்ன காரியம் செய்துவிட்டாய் நீ? பெருமாளின் திருமேனி விக்கிரகத்துடன் என்னுடைய பாதுகைகளையும் வைக்கலாமா?'' என்று கடிந்துகொண்டார்.
குருதேவர் எதற்காக இப்படிக் கடிந்துகொண்டார் என்பது வடுகநம்பிக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும், அவர் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், ``உம்முடைய இஷ்ட தெய்வத்துடன் என்னுடைய இஷ்ட தெய்வத்தைச் சேர்த்ததில் என்ன தவறு?'' என்று கேட்டார்.
இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத ஶ்ரீராமாநுஜர், வடுகநம்பியின் குருபக்தியைக் கண்டு திகைத்துவிட்டார். அவருடைய கோபமும் தணிந்தது.

ஶ்ரீராமாநுஜரிடம் மிகுந்த குருபக்தி கொண்டிருந்த வடுகநம்பி, தமது குருபக்தியை வெளிப்படுத்துவிதமாக, `யதிராஜ வைபவம்', 'ஶ்ரீராமாநுஜ அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம்', ஶ்ரீராமாநுஜர் அஷ்டோத்திர சத நமாவளி' ஆகிய நூல்களை இயற்றி புகழ் பெற்றார்.
வடுகநம்பியின் குருபக்தியின் மகிமை பற்றி,  மணவாள  மாமுனிகள் தாம் இயற்றிய `ஆர்த்தி பிரபந்தத்தில்' 
 

`உன்னையொழிய ஒரு தெய்வம் மற்றறியா
மன்னுபுகழ் சேர் வடுகநம்பி
தன் நிலையை
என்றெனக்கு நீ  தந்தெதிராச எந்நாளும்
உன்றனுக்கே ஆட்கொள் உகந்து'
என்று போற்றிப் பாடியிருக்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்