கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 21.03.18 முதல் 02.04.18 வரை 13 நாள்கள் நடைபெறுகிறது. 

பங்குத்திருவிழா

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பெற்றது அருள்மிகு கழுகாசல முர்த்தி திருக்கோவில். இங்குள்ள மலையின் பாறையைக் குடைந்து குகைக்குள் கழுகாசல மூர்த்தியை அமைத்துள்ளதால் இது குடைவரைக் கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இதனால், மலையே இக் கோயிலுக்கு விமானமாகவும், கோபுரமாகவும் அமைந்துள்ளது. இக் கோயிலுக்குச் சுற்றுப்பிரகாரமும் கிடையாது. கோயிலைச் சுற்றி வர வேண்டுமென்றால் மலையைத்தான் சுற்றி வர வேண்டும். அதனால், இங்கு பெளர்ணமி கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானது. எட்டயபுரம் அரண்மனை வாரிசுகள்தான் இக்கோயில் அறங்காவலராக உள்ளனர்.

இக்கோயிலில் உள்ள மூலவரான கழுகாசலமூர்த்தி ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு அருள்பாலிக்கிறார். தென் இந்தியாவிலேயே முருகப் பெருமானுக்கு இம்மாதிரியான திருக்கோலம் வேறெந்த தலத்திலும் இல்லை.  இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு இத்திருவிழா, இன்று (21.03.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தினை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கே திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 

பங்குத்திருவிழா

தொடர்ந்து, சுவாமி – அம்பாள், கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. பின், கொடிமரத்தில் உத்திரத்திருவிழா கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு விஷேச அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இன்று தொடங்கிய இத்திருவிழா வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை 13 நாள்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நாள்களில் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை  எழுந்தருளி திருவீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10வது நாள் திருவிழாவான வரும் மார்ச் 30ம் தேதி காலை நடைபெறுகிறது. 11வது நாளன்று சுவாமி கழுகாசலமூர்த்தி மற்றும் வள்ளி அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 12ம் நாள் பட்டினப் பிரவேசமும், 13ம் நாளான வரும் ஏப்ரல் 2ம் தேதி  மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நவதிருப்பதி தலங்களில் 9வது தலத்திலும், குரு ஸ்தலமுமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோயிலிலும் இன்று பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழா இன்று தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!