வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (22/03/2018)

கடைசி தொடர்பு:22:40 (22/03/2018)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனித் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் பங்குனி திருக்கல்யாணத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் திருவிழாவான வரும் ஏப்ரல் 3-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 

108 திவ்ய தேசங்களில் 90-வது தலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில். மூலவர் வடபத்ரசாயி (ரெங்க மன்னர்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள் தேவியார், ரெங்க மன்னர் மற்றும் கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தலத்தில் காட்சி அளிப்பது இங்கு மட்டும்தான். இத்தலத்தின் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது. ஆண்டாள் அவதரித்த இத்தலத்தில்தான் “சூடிக்கொடுத்த நாச்சியாள்..” என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது.

ஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்துப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி ஆண்டாளை பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டதால்,  இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனித் திருக்கலயாணம் மிகவும் சிறப்பானது. இந்த ஆண்டு பங்குனித் திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை (22.03.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று (21.03.18) திருவிழா கொடியேற்றத்திற்கு தேங்காய் தொட்டு நியமனம் பெறும் வைபவம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. கருடாழ்வார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடிப்பட்டம் கோயில் பிரகாரத்தைச் சுற்றி எடுத்துவரப்பட்டு, மேஷ லக்னத்தில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின், திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீ ஆண்டாள் – ரெங்கமன்னருக்கு விசேச தீபாராதனை நடைபெற்றது. இன்று தொடங்கி வரும் (02.04.18) வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.

தினமும் காலை மற்றும் மாலையில் ஆண்டாள் தேவியாரும், ரெங்க மன்னரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சிறப்புத் திருமஞ்சனங்களும் (அபிசேகங்கள்), விசேச தீபாராதனையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் திருவிழாவான வரும் 30-ம் தேதி மாலை 6.25 முதல் 7.25மணிக்குள் துலாம் லக்னத்தில் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ ஆண்டாள் – ஸ்ரீ ரெங்கமன்னர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து, பக்தர்களுக்குச் சிறப்பு விருந்தும் வழங்கப்பட உள்ளது. 03.04.18 அன்று மாலை புஷ்பயாகம் நடைபெறவிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க