காஞ்சிபுரம் இட்லி... ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் சிறப்புப் பிரசாதம் செய்வது எப்படி? #KanchipuramIdly

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 'ஹஸ்தகிரி கோயில்' என்றும் 'அட்டியூரான் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. திருவரங்கம், திருப்பதி ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற தலம். 

 

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்

யாகமியற்றி தம்மை வழிபட்ட பிரம்மதேவருக்கு தரிசனம் தந்து வரமும் அருளியதால், பெருமாள் 'வரதராஜ பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் அத்தி மரத்தாலான பெருமாள், 'அத்தி வரதர்' என்ற பெயரில், கோயில் திருக்குளத்தில் பள்ளிகொண்டிருக்கிறார். 40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். வரும் 2019-ம் வருடம் திருக்குளத்திலிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தரவிருக்கிறார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்

வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது.  இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இரண்டு இட்லியும் மிளகாயும் நல்லெண்ணெயும் சேர்க்காமல், மிளகும் நெய்யும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.

பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நைவேத்தியம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன.

அத்தி வரதர்

15-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு வழிப்பட்ட நிவந்தம் ஒன்று, கோயிலில் தாயார் சந்நிதிக்கு எதிரில் கல்வெட்டாகப் பொறிக்கப் பட்டிருக்கிறது.

அந்தக் கல்வெட்டில் இறைவனுக்குப் படைக்கப்படும் தோசைக்குத் தேவையான பொருள்கள், எப்படிச் செய்ய வேண்டும், அதை யார் யாருக்கு எப்படிப் பகிர வேண்டும் என்பதுபோன்ற தகவல்களைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுடன், அதற்குத் தேவையான தானம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், கிரந்தமும் தமிழும் கலந்த மொழியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் தோசை கல்வெட்டு

வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி நைவேத்தியம் செய்தவர், கிருஷ்ணரின் எட்டு பக்தர்களில் ஒருவரான வல்லபாச்சார்யர் என்று சொல்கிறார்கள். அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் நைவேத்தியம் செய்திருக்கிறார். அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து இட்லியை வேகவைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் இட்லியை மிளகாய் சேர்க்காமல், மிளகை மட்டுமே சேர்த்துச் செய்வதற்குக் காரணம் உண்டு. காரணம், மிளகு கொடிய விஷத்தையும் முறிக்கும் சக்தி கொண்டது என்பதால்தான்.

 

 

காஞ்சிபுரம் இட்லி செய்யத் தேவையான பொருள்கள் 

பச்சரிசி - 750 கிராம்

தோல் நீக்கிய உளுந்து - 500 கிராம்

வெந்தயம் - 100 கிராம்

மிளகு - 100 கிராம்

சீரகம் - 100 கிராம்

சுக்கு - 50 கிராம்

நெய் - 400 கிராம்

தயிர் - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

காஞ்சிபுரம் இட்லி எப்படிச் செய்வது?

முதலில் பச்சரிசி, தோல் நீக்கிய உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு, அத்துடன் தயிர் சேர்த்து கொரகொரப்பாக மாவை அரைக்க வேண்டும். பிறகு அரைத்த மாவுடன் மிளகு, சீரகம், சுக்கு, தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் புளிக்கவைக்கவும்.

காஞ்சிபுரம் இட்லி

பிறகு மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குடலையில் இட்டு அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும். கோவிலில் தயாரிக்கப்பட்டும் இட்லி வேக, இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் எடுக்கும். எவ்வளவு வேக வைக்கிறோமோ அவ்வளவு பக்குவமாக இருக்கும். வீட்டில் இட்லி பாத்திரத்தில் குறைந்தது அரை மணிநேரமாவது வேகவைக்க வேண்டும்.

இட்லி வெந்ததும் அரை மணி நேரம் கழித்து ஆறவைத்துக் கவிழ்த்தால் காஞ்சிபுரம் இட்லி தயார்.

காஞ்சிபுரம் இட்லி

பக்தர்கள் கேட்கும் வரங்கள் யாவும் அருளும் வரதராஜ பெருமாளுக்கு இட்லியை நைவேத்தியம் செய்து, வேண்டிய வரத்தைப் பெறுவோம். பெருந்தேவித் தாயாரின் அருளையும் சேர்த்தே பெறுவோம்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!