`சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சித்தமெல்லாம் சிவமே நிறைந்திருக்க சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்' என்று திருத்தொண்டர்தொகை இயற்றிய சுந்தரமூர்த்து சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 63 நாயன்மார்களையும் 9 தொகையடியார்களையும் சிவனடியார்களாகப் போற்றி வழிபடுகிறோம். அனைத்து சிவாலயங்களிலும் பிரம்மோற்சவத்தின்போது அறுபத்து மூவர் விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மயிலையில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது.
தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்த ஐயனும் அம்பிகையும் அருளாடல் நிகழ்த்திய புனிதத் தலமல்லவா திருமயிலை திருத்தலம்!
கயிலையில் சிவபெருமான் அம்பிகைக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். அப்போது அழகிய மயில் ஒன்று தோகை விரித்து ஆடியபடி வந்தது. அதன் அழகில் தன்னை மறந்து லயித்துவிட்டாள் அம்பிகை.
"நான் உபதேசம் செய்வதைக் கேட்காமல் மயிலின் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருக்கிறாயா நீ?'' என்று கேட்டார் ஈசன்.
"மயில் நம்முடைய மகன் முருகனின் வாகனம் அல்லவா? எனவேதான், நான் என்னை மறந்து மயிலின் ஆட்டத்தில் லயித்துவிட்டேன்'' என்றாள் அம்பிகை.
"என்னைவிடவும் உனக்கு மயில் உயர்வாகப் போய்விட்டதா?"
"சுவாமி, தொண்டர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று தாங்களே பல முறை கூறியிருக்கிறீர்களே? முருகனைச் சுமந்து, தொண்டு செய்யும் வாகனம் மயில். எனவே, மயிலை உயர்வாக நினைப்பதில் தவறில்லையே?"
"உயர்ந்தவர்கள் என்று நான் கூறும் தொண்டர்களைப்போல் உன்னாலும் ஒரு தொண்டராக சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா?''
"இப்பொழுதே நிரூபித்துக் காட்டுகிறேன்" எனத் தெரிவித்த அம்பிகை, எந்த மயிலின் காரணமாக அவர்களுக்குள் விவாதம் எழுந்து சச்சரவு ஏற்பட்டதோ, அதே மயிலின் வடிவத்தை அடைந்து அங்கிருந்து மறைந்தாள்.
தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற தேவியின் பிரிவைத் தாங்கா முடியாத ஈசனும், தேவி மயிலாக வாழ்ந்த இடத்துக்கு அருகில் காணப்பட்ட புன்னை மரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார்.
புன்னை மரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்த ஈசன், தொண்டர்களின் வழிபாடு இல்லாமல் தவிப்பதைக் கண்டு மயில் உருவம் கொண்டிருந்த உமை அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, அலகினால் மலர்களையும், கனிகளையும் எடுத்து வந்து சிவபெருமானுக்கு அர்ப்பணித்தாள்.
காலம் கனிந்தது...
மயில் உருவம்கொண்ட அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்குக் காட்சியளித்தார். அன்னையும் தன் சுய உருவம் ஏற்றாள். அம்பிகையின் மூலம் தொண்டர்களின் பெருமையை ஈசன் உணர்த்திய தலம் என்பதால்தான், மயிலை அறுபத்து மூவர் விழா தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது.
அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின் மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த வைபவம்.
சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.
திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,
`மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்...’
என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.
தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.