வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (30/03/2018)

கடைசி தொடர்பு:12:14 (30/03/2018)

`இயேசுவின் சிலுவைச் சாவு... ஒரு மீட்பின் அடையாளம்!’ புனித வெள்ளி சொல்லும் சேதி! #GoodFriday 

யேசுவின் இறப்பை, இன்று உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் `புனித வெள்ளி’ என்ற பெயரில் நினைவுதினமாகக் கொண்டாடுகிறார்கள். இயேசு ஓர் இறைமகன், இறைவாக்கினர், மெசியா, போதகர் எனப் பலவாறு அழைக்கப்பட்டாலும், அவர் அவமானமிக்க சிலுவைச் சாவை ஏற்றார். யூதர்களின் பண்பாட்டில் ஒரு தனி மனிதருக்குக் கொடுக்கக்கூடிய உச்சபட்ச தண்டனை சிலுவைச் சாவு. அந்த அகோரமான சாவு ஏன் இயேசுவுக்கு வழங்கப்பட வேண்டும்... அந்தச் சிலுவைச் சாவு இந்த உலகத்துக்குக் காட்டும் படிப்பினை என்ன... கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவைச் சாவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறார்கள்... அந்தச் சிலுவை எப்படி ஒரு மீட்பின் அடையாளமாக மாற்றப்பட்டது?

சிலுவைச் சாவு

லட்சியவாதியை மரணம் தோற்கடிப்பதில்லை

இயேசுவின் சிலுவைச் சாவை வரலாற்றில் கொள்கைக்காகவும், உயர்ந்த லட்சியத்துக்காகவும் வாழ்ந்து மரணத்தைத் தழுவிய பெரிய பெரிய தலைவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு லட்சியவாதியை மரணம் தோற்கடிப்பதில்லை. உயர்ந்த லட்சியத்தைக் கொண்டு வாழும் தலைவர்களுக்கு மரணம் ஒரு புதிய பிறப்புதான். இயேசுவும் சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்தார். அந்த லட்சியத்தை யாரும் தோற்கடிக்க முடியாது என்பதைச் சிலுவைச்சாவின் மூலம் உலகுக்குக் காட்டினார். 

ஏன் இந்த சிலுவைச் சாவு?

இயேசு ஓர் இறைமகன்; கடவுளுக்கு இணையானவர்; கடவுளாகவே இருந்தார். ஆனால், மனித உருவில் பிறந்து, பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதர்களைப்போல வாழ்ந்தார். ஏழைகள், அனாதைகள், பாவிகள், தொழுநோயாளர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களோடு சங்கமித்தார். மக்களை ஒடுக்கும், ஏமாற்றும் சட்டங்கள், அதிகாரங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கினார். யூதர்கள் கடைப்பிடித்த ஓய்வுநாளுக்குப் புதிய விளக்கம் கொடுத்தார். ஜெருசலேம் ஆலயத்தில் நடந்த ஊழலையும் விதிமீறலையும் கடுமையாகச் சாடினார். ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டித்தார். பணக்காரர்களின் பகட்டுத் தன்மையை வெறுத்தார். `நான் ஓர் இறைமகன்’ என்றும், `மெசியா’ என்றும் பறைசாற்றினார். எனவேதான் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி, அவருக்குச் சிலுவைச் சாவை தண்டனையாகக் கொடுத்தார்கள். மக்களுக்காக அவர் எடுத்த நிலைப்பாடுதான் அவருக்குச் சிலுவைச் சாவைக் கொண்டுவந்தது. அவரது சிலுவைச் சாவு, யூத சமூகத்தில் நடந்த மிகப் பெரிய அரசியல் படுகொலை. அந்த அரசியல் படுகொலையை இயேசு தயக்கமின்றி, ரத்தம் சிந்தி ஏற்றுக்கொண்டார்.

புனித வெள்ளி

சிலுவைச் சாவு...  ஒரு மீட்பின் அடையாளம்!

சிலுவைச் சாவு என்பது உலகத்தின் பார்வையில் ஓர் அவமானச் சின்னம். இழிவின் அடையாளம். ஒரு மிகப்பெரிய தோல்வி. ஆனால், இறைவனின் பார்வையில் அது ஒரு மாபெரும் வெற்றி. இயேசு தன்னுடைய வலுவின்மையில் வல்லமையை வெளிப்படுத்தினார். அவருடைய உயிரைக் கொல்வது எளிது. உயர்ந்த லட்சியத்தையும் ஆன்மாவையும் கொல்வது கடினம். ஒன்றுமில்லாத தன்மையில் அனைத்தையும் கண்டார். அவருடைய சிலுவைச் சாவின் மூலமாக இந்த உலகுக்கு ஒரு பெரிய மீட்பும் விடுதலையும் கிடைத்தது. இயேசு தன்னுடைய சிலுவைச் சாவின் வழியாக உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் அன்பு செய்கிறார், விடுதலை வாழ்வுக்கு இட்டுச் செல்கிறார் என்பதைப் பறைசாற்றியிருக்கிறார். யோவான் எழுதிய நற்செய்தியில் `தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு வேறொன்றுமில்லை (யோவா. 15:13)' என்று கூறியிருக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய அது பலன் தராது என்பதைத் தன்னுடைய சாவின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார். இயேசு மற்றவருக்காக இறந்து காட்டியதுபோல நாம் மற்றவருக்காக சிறு சிறு தியாகங்கள் செய்யத் தயாராக இருக்கிறோமா?

இயேசு

இயேசுவின் மரணம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம்

மனிதர்கள் இனி சாவை ப்பற்றி ஒருபோதும் கவலைப்படக் கூடாது என்பதற்காக இயேசுவே இறந்துகாட்டினார். சாவுக்கே சாவு மணி அடித்தார். அந்தச் சாவை ஒரு புதிய வாழ்வின் தொடக்கமாக நாம் பார்க்க வேண்டும். பிறரின் வாழ்வு மலர்வதற்காக, ஒருவர் சாக வேண்டும் என்ற உச்சகட்ட அன்பை இயேசு சிலுவைச் சாவின் மூலம் காட்டியிருக்கிறார். சிலுவையைப் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு தியாகத்தின் அடையாளத்தை அதில் பார்க்கிறார்கள். இயேசுவின் உச்சபட்ச அன்பை அதில் பார்க்க முடிகிறது. உண்மை, அன்பு, நீதி, மன்னிப்பு, உறுதியான நிலைப்பாடு அதில் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. எனவே, இயேசுவைப்போல நாம் தியாகத்துடன் வாழ வேண்டும். உண்மைக்காகவும் நீதிக்காகவும் உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைப் பெற வேண்டும். பகிர்வையும் மன்னிப்பையும் இரக்கத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்து சக்தி நமக்குள் பிறக்கட்டும். கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு சிலுவையில் இறந்தார். எனவே, நாம் சாவைப் பற்றி கவலைப்படாமல் ஆவிக்குரிய இயல்போடு புதிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நம்பிக்கையைப் பெறுவோம். இதுவே சிலுவைச் சாவின் வெற்றி!


டிரெண்டிங் @ விகடன்