சனி தோஷம் போக்கும் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில் எள்ளுச் சாத பிரசாதம் செய்வது எப்படி? | How do make Sesame food for offering Saneeswaran?

வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (31/03/2018)

கடைசி தொடர்பு:12:39 (31/03/2018)

சனி தோஷம் போக்கும் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில் எள்ளுச் சாத பிரசாதம் செய்வது எப்படி?

சனீஸ்வர பகவானுக்கு எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயால் விளக்கேற்றி, எள்ளுச் சாதத்தை நைவேத்தியமாகப் படைக்கிறோம் ஏன் தெரியுமா?

சனி தோஷம் போக்கும் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில் எள்ளுச் சாத பிரசாதம் செய்வது எப்படி?

தெய்வங்களுக்கும் நவகிரகங்களுக்கும் நைவேத்தியம் செய்து வழிபடுவது நம்முடைய மரபு. அப்படித்தான் சனீஸ்வர பகவானுக்கு எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்கிறோம். சனீஸ்வரருக்கு எள்ளுச் சாதத்தை நைவேத்தியம் செய்வதால், சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய அத்தனை தோஷங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைக் கொண்டு விளக்கேற்றுவதும் சனீஸ்வர பகவானை குளிர்விக்கச் செய்யும்.

சனீஸ்வரர்

சனீஸ்வரர் கருமை நிறம் கொண்டவர். பூமிக்கடியில் கிடைக்கும் நிலக்கரி, இரும்பு ஆகியவற்றுக்குக் காரகத்துவம் வகிப்பவர். இவருக்கு உரிய தானியம்கூட இரும்புச்சத்து நிறைந்த கறுப்பு நிற எள்ளுதான். எனவேதான், சனீஸ்வர பகவானுக்கு எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயால் விளக்கேற்றி, எள்ளுச் சாதத்தை நைவேத்தியமாகப் படைக்கிறோம்.

சனீஸ்வர பகவான் நீதிமான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்குப் பாரபட்சம் பார்க்காமல் நியாயம் வழங்குபவர். சனிக்கிழமைகளில் அவரை முறைப்படி வழிபடுபவர்களுக்கு, சனிபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் எல்லாம் விலகிவிடும். ஆனால், அவருக்கும் ஒருமுறை தோஷம் ஏற்படத்தான் செய்தது. சனி பகவானின் பிடியில் மனிதர்கள் மட்டுமல்லாமல், தேவர்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மனிதர்களும் தேவர்களும் அவரவர் வினைப்படி சனீஸ்வர பகவானால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைப் பாதித்த தோஷம் சனி பகவானுக்கு ஏற்பட்டுவிட்டது.

எள்ளு சாதம்

 

தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்வதற்காக அவர் சிவபெருமானை வழிபட்ட தலம்தான் பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சனி பகவானுக்குத் தனிச் சந்நிதியும் அமைந்திருப்பதால், இந்தத் தலம், `வட திருநள்ளாறு' என்று போற்றப்படுகிறது.

இது சனீஸ்வர பகவான் பாவ விமோசனம் பெற்ற தலமாக இருப்பதால் அகத்தீஸ்வரரை வணங்கி, சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்குப் பிடித்த `எள்ளுச் சாதம், வெள்ளம் கலந்த எள்' செய்து படையலிட்டு வழிபட்டால் ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என அனைத்துவிதமான சனி தோஷங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.

ஒரு சனிக்கிழமையன்று நாம் கோயிலுக்குச் சென்றிருந்தோம். சனி பகவான் தன்னுடைய தோஷம் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் அருளும் தலம் என்பதால், ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, எள்ளெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றியும், எள்ளுச் சாதத்தை நைவேத்தியம் செய்தும் வழிபட்டார்கள். சனிக்கிழமைகளில் இந்தக் கோயிலில் எள் சாதம்தான் பக்தர்களுக்கு நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.

நாமும் சனீஸ்வர பகவானை வழிபட்டுவிட்டு, கோயிலில் கொடுத்த எள்ளுச் சாதப் பிரசாதத்தை வரிசையில் நின்று வாங்கிக்கொண்டோம். சிறிது எடுத்து சுவைத்துப் பார்த்தோம். அபார ருசி! கோயில் பிரசாதங்கள் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படுவதாலேயே அவற்றின் மணமும் சுவையும் அபரிமிதமாகிவிடுகிறது போலும்!

சனி பகவானுக்கு எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்வதற்குக் கண்டிப்பாகக் கறுப்பு எள்ளைத்தான் பயன்படுத்த வேண்டும்.

எள்ளுச் சாதம் செய்யும் முறை

சனி பகவானுக்கு எள்ளுச் சாதத்தை நைவேத்தியம் செய்பவர்கள், முதலில் சாதத்தை உதிரியாக இருக்கும் பக்குவத்தில் வடித்துக்கொள்ள வேண்டும். வடித்த சாதத்தை ஒரு அகன்ற தாம்பாளத்தில் கொட்டிப் பரப்ப வேண்டும். பிறகு தேவையான அளவு கறுப்பு எள்ளை எண்ணெய்விடாமல், வெறும் வாணலியில் பதமாக வறுத்துக்கொள்ள வேண்டும். சனீஸ்வரருக்கு உகந்த நல்லெண்ணெயில் மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைத் தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும். இவற்றுடன் வறுத்த எள்ளைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துகொண்டு, சாதத்தில் சேர்த்துக் கலக்க வேண்டும். மணமும் சுவையும் சேர்ந்த எள்ளுச் சாதத்தை சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து, சனி பகவானின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

எள்ளு சாதம்

கோயில்களில் சனி பகவானுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் எள்ளுச் சாதத்தை நாம் உண்ணலாமா அல்லது மற்றவர்களுக்கு தானம் செய்வதா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. எனவே, திருநள்ளாறு கோடீஸ்வர சிவாசார்யரிடம் கேட்டோம். ``தோஷம் விலக வேண்டும் என்று நைவேத்தியம் செய்து வழிபட்டால், அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதுடன் காகத்துக்கும் கொடுக்கலாம். மற்றபடி தனக்கு அனைத்தையும் அருளிய சனீஸ்வர பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக நைவேத்தியம் செய்தால், அந்தப் பிரசாதத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து நாமும் உண்ணலாம்'' என்று கூறினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்