வெளியிடப்பட்ட நேரம்: 08:26 (05/04/2018)

கடைசி தொடர்பு:08:26 (05/04/2018)

கன்னத்தில் ஓர் அடி, ஒரு ரூபாய் தட்சிணை, காவி ஆடை... பாபாவின் அருளாடல்கள்! #SaiBaba

தம்மை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்த மகானிடம் ஈடுபாடு கொண்டிருந்தார்களோ, அந்த மகானின் வடிவத்திலேயே தரிசனம் தந்தவர் சாய்பாபா

கன்னத்தில் ஓர் அடி, ஒரு ரூபாய் தட்சிணை, காவி ஆடை... பாபாவின் அருளாடல்கள்!  #SaiBaba

ஷீர்டி பாபா அனைத்து மகான்களின் அம்சமாகவே திகழ்ந்தார். தம்மை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, அவர்கள் எந்த மகானிடம் ஈடுபாடு கொண்டிருந்தாரோ, அந்த மகானின் வடிவத்திலேயே தரிசனம் தந்த அற்புதச் சம்பவங்கள் அவருடைய திவ்விய சரிதத்தில் காணக் கிடைக்கின்றன.

பாபா

பாபாவும் நரசிங் மகராஜும்

நரசிங் மகராஜ் என்பவர் நாசிக் என்னும் இடத்தைச் சேர்ந்தவர். பாபாவின் சம காலத்தவரான நரசிங் மகராஜ் பெரிய மகான். மற்ற மகான்களைப் போலவே இவ்விரு மகான்களும் ஒருமை நிலையை அனுபவித்தவர்களாக, ஒருவருக்கொருவர் இசைந்து அருளாடல்கள் நிகழ்த்தியுள்ளனர். 

உடலளவில் அவர்கள் ஒருவரிடமிருந்து மற்றவர் வெகு தொலைவிலிருந்தாலும், ஒருவர் செய்வதை மற்றவர் அறிந்தே இருந்தனர். 

சகோரியைச் சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர், இரண்டு மகான்களிடம் பக்தி கொண்டிருந்தார். அவர் ஆஸ்துமா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே, நரசிங் மகராஜை தரிசிக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளையும் கூறினார். 

நரசிங் மகராஜ், ஹன்ஸ்ராஜ் உடலை ஓர் ஆவி பிடித்துக்கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே அவருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் கூறியதுடன், அவரை ஷீர்டி சாயிடம் செல்லும்படிக் கூறினார்.

சாயி

அதன்படியே ஹன்ஸ்ராஜ் தன் மனைவியுடன் ஷீர்டிக்கு வந்தார். துவாரகாமாயிக்குச் சென்று அவரை வணங்கினார்கள். அவர் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே, பாபா  ஹன்ஸ்ராஜை இரண்டு முறை அடித்து, 'தீய பிசாசே, போய்விடு' என்றார். உடனே ஹன்ஸ்ராஜின் ஆஸ்துமா நோய் குணமானதுடன், குழந்தை பாக்கியமும் கிடைத்தது. 

ஹரிபாவு என்ற பக்தர், ஒரு குருபூர்ணிமா நாளில் ஷீர்டிக்கு வந்து பூஜை செய்தார். பிற்பகலில் அவர் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினார். அப்போது அவருக்கு தாம் பாபாவுக்கு ஒரு ரூபாய் தட்சிணை கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. திரும்பவும் அவர் துவாரகாமாயிக்குச் செல்வதற்குத் திரும்பினார். அவரைத் தடுத்த ஷாமா, பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டுவிட்டால், திரும்பவும் துவாரகாமாயிக்குச் செல்லக்கூடாது என்று தடுத்துவிட்டார். எனவே, ஹரிபாவு வீட்டுக்குப் புறப்பட்டார். போகும் வழியில் நாசிக்கில்  இறங்கி, அங்கிருந்த காலாராமர் கோயிலுக்குச் சென்றார். கோயிலுக்குள் நுழையும்போது, வாசலில் தம் சிஷ்யர்களுடன் அமர்ந்திருந்த நரசிங் மகராஜ், ஹரிபாவுவை நோக்கி வந்து, அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, 'என்னுடைய ஒரு ரூபாயைக் கொடு' என்று கேட்டார். ஹரிபாவு திகைத்துவிட்டாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் ஒரு ரூபாயை அவருக்குக் கொடுத்தார். அப்போதுதான், தான் ஷீர்டியில் கொடுக்க விரும்பிய ஒரு ரூபாயை, பாபாவே நரசிங் மகராஜின் மூலமாகப் பெற்றுக்கொண்டார் என்ற உண்மையைப் புரிந்துகொண்டார்.

குரு கொலாப் மகராஜ்

மூலே சாஸ்திரி என்பவர் ஜோதிடத்திலும் சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தவர். சாஸ்திரங்களில் விதித்துள்ள விதிமுறைகளிலிருந்து சற்றும் தவறாமல் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை பாபாவின் பக்தரும் பெரும் செல்வந்தருமான பாபுசாகேப் பூட்டி என்பவரைப் பார்ப்பதற்காக ஷீர்டிக்குச் சென்றார். பூட்டியைச் சந்தித்த பிறகு அவருடன் பாபாவை தரிசிப்பதற்காக மூலே சாஸ்திரி துவாரகாமாயிக்குச் சென்றார். அப்போது சாயி தன் பக்தர்களுக்கு பழங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். மூலே சாஸ்திரி, பாபாவின் கைரேகையைத் தாம் பார்ப்பதற்கு அனுமதிக்கும்படிக் கேட்டார். ஆனால், அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்ட பாபா, மூலே சாஸ்திரிக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்து அனுப்பினார். பக்தர்கள் எல்லோரும் கிளம்பிவிட்டனர். 

விடுதிக்குத் திரும்பி நீராடிய மூலே சாஸ்திரி, அக்னிஹோத்திரம் முதலிய தம்முடைய அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டார். துவாரகாமாயியிலிருந்த பாபா, அங்கிருந்தவர்களிடம், சிறிது காவிநிறச் சாயத்தைக் கொண்டு வரும்படியும், தாம் அன்று காவியுடை உடுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். பாபா சொல்வதன் அர்த்தம் அவர்களுக்கு விளங்கவில்லை. என்றாலும் கட்டளையை மதித்து, காவிநிறச் சாயத்தைக் கொண்டு வந்து கொடுத்தனர். பகல் வேளை பூஜைக்காக பாபா தமது இருக்கையில் அமர்ந்தார். அதற்கு முன்பு பூட்டியிடம், 'மூலே சாஸ்திரியிடம் போய் தட்சிணை வாங்கி வரும்படிக் கூறினார். பூட்டியும் மூலே சாஸ்திரி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று பாபா தட்சிணை கேட்பதாகக் கூறினார்.

சாயி

மூலே சாஸ்திரி சிறிது தயங்கினார். 'ஒரு பிராமணரான தான், அதுவும் பாபாவின் பக்தராக இல்லாத தான் ஏன் தட்சிணை தரவேண்டும்?' என்பதுதான் அவருடைய தயக்கத்துக்குக் காரணம். ஆனால், பூட்டி தன்னுடைய நண்பர் என்பதால், தவிர்க்கமுடியாமல் அவருடன் துவாரகாமாயிக்குச் சென்றார். துவாரகாமாயியை அடைந்த மூலே சாஸ்திரி, சற்றுத் தொலைவிலிருந்தபடியே பாபாவைப் பார்த்தபோது, காண முடியவில்லை. பாபாவுக்கு பதிலாக, தம்முடைய குரு கொலாப் மகராஜ்தான் காவிநிற ஆடை உடுத்தி பாபாவின் இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்ததுடன், கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க நின்றார். கண்களை மூடி வணங்கிய மூலே சாஸ்திரி மறுபடியும் கண்களைத் திறந்தபோது, அங்கே குரு கொலாப் மகராஜுக்கு பதிலாக பாபா இருப்பதைக் கண்டார். பாபாவும் தம்முடைய குரு கொலாப் மகராஜும் ஒருவரே என்னும் தெளிவும் பெற்றார்.

இவ்விதமாக ஷீர்டி பாபா, மற்ற மகான்களும் தாமும் வேறு வேறு அல்ல என்பதை தம்முடைய பக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.

பாபாவைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...


டிரெண்டிங் @ விகடன்