தீமைகளை அழித்து நன்மைகளைக் காக்க திருமால் வராஹர் வடிவமெடுத்த திருநாள் இன்று

திருமாலின் மூன்றாவது அவதாரம், வராஹர் வடிவம். பூமியைக் கவர்ந்துசென்ற இரணியாட்சனை ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு வென்ற அவதாரமே வராஹ அவதாரம். நான்முகனின் நாசியில் இருந்து வெண்பன்றி வடிவாக வெளிவந்த நாராயணன், பூமாதேவியைக் காப்பதற்கும், உலகில் தீயவை அழியவும் அவதரித்தார். தேவாதிதேவர்களின் விண்ணப்பத்தை ஏற்று, பூமாதேவியின் வேண்டுதலுக்காகத் திருவுளம்கொண்டு அரக்கனான இரண்யாட்சனை வதம்செய்து, வராஹமூர்த்தி பூமியில் நிலைகொண்டார். வராஹ வடிவம்கொண்டு திருமால் பூமிக்கு வந்த இன்றைய நாளே,  வராஹ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம், திருக்கூடலூர் ஆகிய திருத்தலங்களில் உள்ள வராஹ மூர்த்தி தலங்களில், இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வராஹர்

திருமாலின் முழுமையான வடிவம் என்பதால், ஆதிவராஹர் என்றும், பூமியைக் காத்ததால் பூவராஹர் என்றும் இவர் போற்றப்படுகிறார். பூமியில் நன்மைகள் ஓங்கி, தீமைகள் ஒழிய வராஹமூர்த்தியின் வடிவமே ஆதியில் உருவானதால், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் வராஹருக்கு முதல் வழிபாட்டை நடத்திய பிறகே, அந்த ஆலய மூர்த்திகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. வராஹ ஜயந்தி நாளில் கோரைக்கிழங்கு மாவுருண்டை செய்து படைத்து, செவ்வரளி, துளசி மாலைகள் சார்த்தி, வராஹ மந்திரம் சொல்லி  வழிபட்டால், எல்லா தீமைகளும் விலகி சுபிட்சம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!