ஆஞ்சநேயருக்குப் பிரியமானது வடைமாலை... ஏன்? #Anjaneya

ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தி ராகுவின் தோஷத்திலிருந்து விடுபடுவோம்...

ஆஞ்சநேயருக்குப் பிரியமானது வடைமாலை... ஏன்? #Anjaneya

ருமுறை வடநாட்டு பக்தர் ஒருவர், காஞ்சிப் பெரியவரை தரிசிப்பதற்காக வந்திருந்தார். காஞ்சிப் பெரியவரை தரிசித்த பக்தர், தனக்கு நீண்டநாள்களாகவே இருந்துவரும் சந்தேகத்தைக் கேள்வியாகக் கேட்டார்: ``பெரியவா, எனக்கு ஒரு சந்தேகம். எங்கள் ஊரில் ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தப்படுகிறது. ஆனால், இங்கே வந்து பார்த்தால், ஆஞ்சநேயருக்கு உப்பு, மிளகு சேர்த்த காரமான உளுந்து வடை மாலை சார்த்துகிறார்கள். இறைவனை வழிபடுவதில் ஏன் இந்தப் பாகுபாடு?''

அதற்கு காஞ்சிப் பெரியவர் புராணக் கதை ஒன்றைக் கூறினார்.

காஞ்சிப் பெரியவர்

``வாயு பகவானுக்கும் அஞ்சனா தேவிக்கும் பிறந்த அனுமன், ஒருநாள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். எப்போதும் அவரோட தாயார் அஞ்சனாதேவி, வானில் நிலவைச் சுட்டிக்காட்டியே சோறூட்டிப் பழக்கப்பட்டவர். தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது பசியால் வாடிய அனுமன், வானில் தெரிந்த சூரியனைப் பழம் என்று நினைத்து, அதை உண்பதற்காகப் பாய்ந்து சென்றார். வாயுவின் மகனான அனுமன் வானை நோக்கி, வாயு வேகத்தில் பறக்கத் தொடங்கினார். அதேவேளையில் ராகுவும் சூரியனைப் பிடித்து கிரகணத்தை உண்டு பண்ண விரைந்து சென்றார். வாயு மைந்தனான அனுமனின் வேகத்துக்கு ராகுவால் ஈடுகொடுக்க முடியுமோ?

தன்னைவிட வேகமாகச் செல்லும் அனுமனின் வேகத்தையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்த ராகு, `அப்பனே, நான் சூரியனைப் பிடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, உன் வேகத்தைக் குறைத்துக்கொள். அதற்கு பதிலாக நான் உனக்கு ஒரு வரம் தருகிறேன். எனக்கு உகந்த தானியமான கறுப்பு உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி, உனக்கு சார்த்தி வழிபட்டால், அவர்களுக்கு என்னால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்’ என்று வரம் கொடுத்தார்.

இந்தப் புராணச் செய்தியிலிருந்து உளுந்தினால் வடைகள் செய்து, மாலையாக்கி அனுமனுக்கு சார்த்தி வழிபட்டால், ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்று தெரிகிறது.

அனுமன்

இப்போது உப்பு, மிளகு விஷயத்துக்கு வருகிறேன். தென்னிந்தியாவில் பெரும் பகுதி கடற்கரையால் நிரம்பியிருக்கிறது. அதேபோல இங்கு உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களும் அதிகம். தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.

வட இந்தியா விஷயம் வேறு. எப்போதும் வற்றாத ஜீவநதிகள் நிறைந்த பகுதி அது. அங்கே கரும்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனால் சர்க்கரை உற்பத்தியும் அதிகம். மேலும், வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு. அங்கே பெரும்பாலான மக்களுக்குக் காலை உணவே ஜாங்கிரிதான். அந்த ஜாங்கிரியும் ராகுவுக்குப் பிடித்தமான உளுந்தினால்தான் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயருக்கு இனிப்பான ஜாங்கிரி மாலை சார்த்தினாலும், காரமான வடைமாலை சார்த்தினாலும், இரண்டுமே உளுந்தினால் ஆனது என்பதே உண்மை. இரண்டுமே ராகு தோஷத்திலிருந்து நம்மை விடுவித்து, நல்லது செய்யும் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான்’’ என்றார் காஞ்சி மகா ஸ்வாமிகள்.

பொதுவாக அனுமனுக்கு 27, 54, 108, 1,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோக்கப்பட்டு வடைமாலை சார்த்தப்படுகிறது. அனுமன் ஜயந்தி போன்ற தினங்களில் சில கோயில்களில் 1,00,008 என்ற எண்ணிக்கையில் வடை கோக்கப்பட்ட வடைமாலை சார்த்தப்படுகிறது. இதில் 108, 1,008 ஆகியவை `பூரண வடைமாலை’ என அழைக்கப்படுகிறது. 27 என்ற எண்ணிக்கையில் கோக்கப்பட்ட வடைமாலை, நட்சத்திரங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும், 54 என்ற எண்ணிக்கையில் கோக்கப்படும் வடைமாலை கிரகங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறவும் அனுமனுக்குப் சார்த்தப்படுகிறது.

ராகுவின் தோஷத்திலிருந்து விடுபட மட்டுமல்லாமல், காரிய சித்திக்காகவும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தப்படுகிறது.

அனுமனுக்குச் சார்த்தப்படும் வடைமாலை செய்வதற்கு, தோல் நீக்காத கறுப்பு உளுந்துதான் பயன்படுத்தப்படுகிறது.

108 வடைகளைக் கொண்ட வடைமாலை செய்யத் தேவையான பொருள்களும் செய்முறையும்...

கறுப்பு உளுந்து - 2 கிலோ

மிளகு - 50 கிராம்

பெருஞ்சீரகம் - 100 கிராம்

நல்லெண்ணெய் - 2 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

அனுமனுக்குப் படைக்க வடைமாலை செய்பவர்கள், தூய்மையாக விரதமிருந்து அனுமனை வேண்டிக்கொண்டு `ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தைத் துதித்தபடியே பக்தியுடன் செய்ய வேண்டும்.

கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரத்துக்கு ஊறவைத்து, தோலை நீக்கிக்கொள்ள வேண்டும். பிறகு நீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக்கொண்டு, தயாராக வைத்திருக்கும் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனுமனுக்குச் செய்யப்படும் வடையை, கையால் தட்டக் கூடாது. தூய்மையான வெள்ளைக் காடாத் துணியால்தான் தட்ட வேண்டும். வடையைத் தட்டும்போதே, அதில் துளையிட்டுக்கொள்ள வேண்டும். தட்டிய வடைகளை பதமாகக் கொதித்துக்கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, முக்கால் வேக்காடு வெந்ததும் எடுத்துவிட வேண்டும்.

தங்களின் வேண்டுதலுக்கேற்ற எண்ணிக்கையில் வடைகள் தயாரானதும், அவற்றை மாலையாக்கி அனுமனுக்கு சார்த்தி வேண்டிக்கொள்ள வேண்டும்.

அனுமனுக்கு வடைமாலை சார்த்துவதற்கு உகந்த தினங்கள் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றியும், பார்த்தசாரதி பட்டரிடம் கேட்டோம்...

உளுந்து வடை

 

``அனுமனுக்கு எப்போது வேண்டுமானாலும் வடைமாலை சார்த்தலாம். அனுமனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை, உகந்த திதியான அமாவாசை மற்றும் துவாதசி, அனுமனின் அவதார நட்சத்திரமான மூலம் ஆகிய தினங்களில் அனுமனுக்கு வடைமாலை சார்த்தி, அனுமனின் பரிபூரண அருளைப் பெறலாம்’’ என்றார் பார்த்தசாரதி பட்டர்.

வடை மாலை

`சொல்லின் செல்வன்' என்று சிறப்பித்துப் போற்றப் பெறும் அனுமனுக்கு வடைமாலை சார்த்தி, பிறகு அந்த வடைகளை அனுமனின் பிரசாதமாக பக்தியுடன் உண்பவர்களுக்கு, அனுமனின் அருளால், ராகு தோஷங்கள் நீங்கும். சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!