தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் நவகிரகப் பரிகாரத் தலங்கள்! #Interactive | navagraha temples on the river bed of thamirabarani

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (13/04/2018)

கடைசி தொடர்பு:10:37 (11/10/2018)

தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் நவகிரகப் பரிகாரத் தலங்கள்! #Interactive

பரிகாரத் தலங்கள்

தாமிரபரணி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் நவகிரகப் பரிகாரத் தலங்கள்! #Interactive

சோழநாட்டில் நவகிரகப் பரிகாரத் தலங்கள் என ஒன்பது சிவாலயங்கள் இருப்பதுபோலவே, பாண்டியநாட்டின் தாமிரபரணி ஆற்றின் கரையில், நவகிரகப் பரிகாரத் தலங்களாக, 'நவதிருப்பதிகள்' என்று அழைக்கப்படும் ஒன்பது பெருமாள் கோயில்கள் அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த ஒன்பது தலங்களும் நவகிரகத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. பெருமாளே இந்தத் திருத்தலங்களில் நவகிரகங்களின் அம்சமாக வணங்கப்படுகிறார். ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் நீங்கி, இறைவனின் அருளைப் பெறலாம். ஒன்பது நவதிருப்பதிகளும் வைணவ திவ்ய தேசங்களாக விளங்குகின்றன. வைகாசி மாதம் ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் ஒன்பது கருடசேவை வைபவம் மிகவும் பிரசித்திபெற்றது. நம்மாழ்வாருக்குத் தரிசனம் தருவதற்காக, ஒன்பது திவ்வியதேசங்களைச் சேர்ந்த பெருமாள் மூர்த்தங்களும் ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளுவர். இந்த அற்புத வைபவத்தைத் தரிசிப்பவர்களின் பூர்வஜன்ம பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஐதீகம்.

 

ஸ்ரீவைகுண்டம்:

 

ஸ்ரீவைகுண்டம் எனப்படும் கள்ளபிரான் கோயில், நவதிருப்பதிகளில் நாம் தரிசிக்கவேண்டிய முதல் தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி. மீ தொலைவில் அமைந்திருக்கிறது. சோமுகாசூரன் மூலம் தான் இழந்த வேதம் மற்றும் படைப்புத் தொழிலை மீட்டுத் தந்த திருமாலை பிரம்மதேவர் வழிபட்ட தலம். வைகாசி மாதம் நடைபெறும் கருடசேவைத் திருவிழா மிகவும் விசேஷம். பெருமாள் சூரியனின் அம்சமாக விளங்குவதால் சூரியன் தொடர்பான தோஷங்களுக்கு உரிய பரிகாரத் தலமாக ஸ்ரீவைகுண்டம் விளங்குகிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் 6-ம் நாளன்று சூரியனின் கதிர்கள் நேராகப் பெருமாளின் மீது விழுகின்றன. அன்று இறைவனை வணங்கினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெறலாம்.

பரிகாரத் தலங்கள்
 

திருவரகுணமங்கை (நத்தம்):

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருவரகுணமங்கை விஜயாசனப் பெருமாள் கோயில். நவதிருப்பதிகளில் 2 - வது தலமாக விளங்கும் விஜயாசனப் பெருமாள் சந்திரனின் அம்சமாக, விஜயகோடி விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்புரிகிறார். ஆதலால், இந்தத் திருத்தலம் சந்திரன் தொடர்பான அனைத்துவித தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் நவகிரகத் தலமாக விளங்குகிறது. நம்மாழ்வார் உருகி 'இடர்கடிவான்' என அழைத்ததால் உற்சவர், 'ஸ்ரீஎம் இடர்கடிவான்' என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகிறார்.

 

திருவரகுணமங்கை

 

திருக்கோளூர்:

திருவரகுணமங்கைக் கோயிலிலிருந்து 11 கி.மீ தொலைவில் திருக்கோளூரில் கடம்பங்குளம் தெற்கு வாய்க்கால் கரையில் காணப்படுகிறது வைத்தமாநிதி பெருமாள் கோயில். நவ திருப்பதிகளில் 3 - வது தலம். பார்வதி தேவியின் சாபத்தினால் செல்வம் அனைத்தையும் இழந்த குபேரர் திருமாலை வணங்கி சாப விமோசனம் பெற்ற தலம் இது. இத்தலத்தின் வைத்தமாநிதி பெருமாளை வணங்கினால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இது. வைத்தமாநிதி பெருமாள் அங்காரகனின் அம்சமாக இருப்பதால், இந்தத் திருத்தலம் செவ்வாய் தோஷத்தைப் போக்கும் தலமாக விளங்குகிறது. இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கும்.

பரிகாரத் தலங்கள்

திருப்புளியங்குடி:

திருப்புளியங்குடி பெருமாள் கோயில் திருக்கோளூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் காணப்படுகிறது. இதன் வெளிப்பிராகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியே பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இந்தச் சாளரம் மூலம் இறைவனைத் தரிசித்தால் சங்கடம் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. நவதிருப்பதிகளில் நான்காவது தலமான திருப்புளியங்குடி பெருமாள் கோயில் புதன் அம்சத்துடன் விளங்குவதால், புதன் தொடர்பான தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.


பரிகாரத் தலங்கள்

ஆழ்வார்திருநகரி:

திருப்புளியங்குடி பெருமாள் கோயிலிலிருந்து ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் திருக்கோயில் 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. நாராயணன் முதன் முதலில் அவதரித்த திருத்தலமாக நம்பப்படுவதால் பெருமாள் ஆதிநாதர் என அழைக்கப்படுகிறார். நவ திருப்பதியில் 5 - வது தலம் இது. நான்கு தேர் இருப்பதால் வருடத்துக்கு நான்கு முறை இத்திருத்தலத்தில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. ஆதிநாதன் வியாழனுடைய அம்சத்துடன் விளங்குவதால் இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டால், குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால், தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆழ்வார்திருநகரி:

தென்திருப்பேரை:

வியாழன் தலமான ஆழ்வார்திருநகரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில். நவ திருப்பதிகளில் 6-வது தலம் இது. சோழ நாட்டில் திருச்சிக்கு அருகே திருப்பேர்நகர் என்ற பெயரில் தலம் ஒன்று இருப்பதால் பாண்டிய நாட்டில் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருக்கும் இந்தத் தலத்தை, 'தென்திருப்பேரை' என்று அழைக்கிறார்கள். பத்ர விமானத்தின் கீழ் கிழக்கே திருமுக மண்டலமாக வீற்றிருந்த கோலத்தில் காணப்படுகிறார் பெருமாள். மகர நெடுங்குழைக்காதர், சுக்கிரனுடைய அம்சமாக விளங்குவதால், இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், சுக்கிரனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தென்திருப்பேரை

பெருங்குளம்:

பெருங்குளம் பெருமாள் கோயில், தென்திருப்பேரையிலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவ திருப்பதிகளில் 7-வது திருத்தலமான இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளின் திருப்பெயர் வேங்கடவாணன். இவர், சனி பகவானின் அம்சத்துடன் விளங்குகிறார். ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்றபடி அருள்புரியும் இப்பெருமாள் மாயக் கூத்தன் என்றும் அழைக்கப்படுகிறார். நம்மாழ்வார் இப்பெருமானைக் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும் கொண்டு பாடல் இயற்றியிருக்கிறார். இங்கு வந்து பெருமாளை வணங்கினால் அனைத்து விதமான சனி தோஷங்களும் விலகும். திருமணத்தடை நீங்கும் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

பெருங்குளம்

இரட்டைத் திருப்பதி:

ராகு அம்சத்துடன் விளங்கும் தேவர்பிரான் திருக்கோயில் பெருங்குளத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இதற்கு அருகில் காணப்படுவது திருத்தொலைவில்லிமங்கலம். அரவிந்தலோசனன் திருக்கோயில். இந்தத் தலம் கேது அம்சத்துடன் விளங்குகிறது. நவ திருப்பதிகளில் 8 மற்றும் 9-வது திருத்தலங்கள் இவை. இந்த இரண்டு திருக்கோயில்களும் இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகின்றன. இரட்டைத் திருப்பதியை வணங்கினால் பூர்வ ஜன்மத்துப் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. ராகு, கேது பரிகாரத் தலங்கள் இரட்டைத் திருப்பதி. ராகு, கேது தோஷம் உடையவர்கள் இந்த இரட்டைத் திருப்பதிக் கோயில்களுக்கு வந்து வழிபட்டால், தோஷம் விலகி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

இரட்டைத் திருப்பதி
 

தாமிரபரணி கரையில் அமைந்திருக்கும் பரிகாரத் தலங்களான நவதிருப்பதிகளையும் வணங்கி பெருமாளின் அருளைப் பெறுவோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்