Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக் கூடாது!'' - பைபிள் கதைகள் #BibleStories

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுக்க இருக்கும் மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. இறைவனின் பாதையைப் பின்பற்றிச் செல்ல நாம் நினைத்தாலும், நம் மனம் அவ்வளவு எளிதாக அவரிடம் சென்றுவிடுவதில்லை. அதற்குத் தடையாக நமது மனமே இருக்கிறது. அதைப் பற்றி ஒரு கதையின் வாயிலாக இங்கே அவர் விளக்குகிறார். 

இயேசு கிறிஸ்து


மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் தனது வியாபாரம் காரணமாக  அயல்நாடுகளுக்குச் செல்லவேண்டியிருந்ததால், கப்பற் பயணம் மேற்கொண்டு தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போனார். பல நாடுகளுக்குச் சென்று வர்த்தகம் செய்யவேண்டி இருந்ததால், நீண்ட நாள்களுக்குப் பிறகே சொந்த ஊருக்கு வரும் சூழ்நிலை. அதனால், தனது சொத்துகளையெல்லாம் பராமரிக்கும் பொருட்டு ஒரு மேலாளரை நியமனம் செய்துவிட்டுக் கிளம்பினார். அவனைத் தன் ஐஸ்வர்யங்களை எல்லாம் அனுபவித்துக்கொள்ளும்படியும் கூறிச் சென்றார். 

இயேசு ஜனத்திரள் மத்தியில்...

நாள்கள் வருடங்களாக உருண்டோடின. ஒருநாள் அந்தச் செல்வந்தர் தனது பணியாட்களுடன் கப்பலில் ஊர் திரும்பினார். தன் வீட்டுக்குச் செல்வதற்குள்ளாகவே அவர் நியமித்த மேலாளர் சரியாகவே பணியாற்றவில்லை என்பதை அறிந்தார். 

அப்போது செல்வந்தர் அவனை வரவழைத்து, ``உன்னைப் பற்றி நான் கேள்விப்படுபவையெல்லாம் தவறாகவே இருக்கின்றன. இதுவரை நீ என்ன செய்தாய் என்ற விவரத்தை அறிய வேண்டும். அதற்காக நான் உன்னை விசாரிக்கப் போகிறேன். உன்னிடம் நான் ஒப்புவித்த கணக்கு வழக்குகளை எடுத்துக்கொண்டு நாளை என்னிடம் வா'' என்றார்.

உடனே அவன் நடுநடுங்கிப் போய், `நான் என்ன செய்வேன், என் எஜமானர் விசாரிப்புக்கு உட்படுத்தியுள்ளாரே... நான் என்ன செய்வேன்... என்னை இந்த ஐஸ்வர்யமிக்க வாழ்க்கையிலிருந்து புறம்பே தள்ளிவிடுவாரோ?’ என பயந்து போனான்.

உடனே அவசர அவசரமாக தன் எஜமானரிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து பேசலானான். முதலாவது வந்தவரிடம்,  ''நீங்கள் என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு?'' என்று கேட்டான். 

'' நூறுகுடம் எண்ணெய்." 

''நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று எழுதி சீக்கிரம் கடனை அடைத்துவிடு.''

பிறகு வேறொருவனை நோக்கி,  ''நீ பட்ட கடன் எவ்வளவு?" என்று கேட்டான்.

''நூறு கலம் கோதுமை.''

''நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது.'' இப்படி ஒருவகையாக ஒவ்வொரு கணக்கையும் முடித்து நேர் செய்ய ஆரம்பித்தான். இதை எஜமானர் கவனித்தார். அசட்டையாகவும் அநீதியாகவும் இருந்த மேலாளருக்கு இப்போதாவது புத்தி வந்ததே என அவனை மெச்சிக்கொண்டார். 

இந்தக் கதையின் வாயிலாக எஜமானராகக் கடவுளையும் சகல ஐஸ்வர்யங்களாக பூமியையும் அதன் வளங்களையும் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். 

இயேசு

அவர் மேலும் சொல்கிறார்.. ``ஒளியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், 

கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்யக் கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களாலே கூடாது’’ என்று கூறி முடிக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement