``அஞ்சு வயசுலருந்தே அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்ததுதான் ஆன்மிகம்’’ - கங்கை அமரன் #WhatSpiritualityMeansToMe

``விழுந்து விழுந்து கும்பிடுறது கடவுள் வழிபாட்டுமுறை கிடையாது. இது எங்க அம்மா சொல்லிக்கொடுத்த பாடம். - தனது ஆன்மிகப் பாதை, அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்கிறார் கங்கை அமரன்

``அஞ்சு வயசுலருந்தே அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்ததுதான் ஆன்மிகம்’’ - கங்கை அமரன்   #WhatSpiritualityMeansToMe

கங்கை அமரன்... இசை அமைப்பாளர், கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர், சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஆன்மிக அருளாளர், அரசியல் பிரமுகர், அரவிந்த அன்னையின் அணுக்க சீடர், இளையராஜாவின் சகோதரர்... எனப் பல சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்.

கங்கை அமரன்

இவற்றையெல்லாம் தாண்டி, `திரைத்துறையில் சாகாவரம் பெற்ற 'கரகாட்டக்கார'னின் இயக்குநர்’ என்ற அறிமுகம் ஒன்று போதும்... இவரின் தனித்தன்மையை விவரிக்க! தனது ஆன்மிகப் பாதை, அனுபவங்கள் குறித்து கங்கை அமரன் இங்கே பகிர்ந்துகொள்கிறார்...  

``விழுந்து விழுந்து கும்பிடுறது கடவுள் வழிபாட்டுமுறை கிடையாது. இது எங்க அம்மா சொல்லிக்கொடுத்த பாடம். எங்க ஊர்த் திருவிழாவை அவங்கதான் முன்னின்று எடுத்துச் செய்வாங்க. எங்க ஊருக்கு தேவதை மாதிரி எங்க அம்மா. 

`ஏப்பா... சாமி... சாமி...ங்கிற, உனக்குக் கொடுக்கறதுக்குத்தானே அவ உன்னையே பார்த்துக்கிட்டு இருக்கா. நீ கேட்டாதான் கொடுப்பாளா...  கேட்கலைனா கொடுக்கமாட்டாளா... உனக்கு எவ்வளவு கொடுக்கணும், எப்போ கொடுக்கணும் என்ன கொடுக்கணும்னு அவளுக்குத் தெரியாதா? விழுந்து விழுந்து கும்பிட்டு எதையும் கேட்காதே. நீ கேட்கிறது சின்னதா இருக்கும்ப்பா'னு சொல்வாங்க.
`நாம கேட்கிறது சின்னதா இருக்கும். ஆனா, கடவுள் தர்றது ரொம்பப் பெரிசா இருக்கும்’கிற அர்த்தம், அஞ்சு வயசுலருந்தே அம்மா சொல்லிக் கொடுத்து வளர்த்ததுதான் ஆன்மிகம். 

பாட்டு எழுதி, ட்யூன் போட்டு பாடினாலக்கூட, ``நீ பாடுறியாக்கும்... உன் மூலமா அவ பாடுறா'னுதான் அம்மா சொல்லுவாங்க. `அவ கொடுக்கிறா. அதை எடுத்து நீ மத்தவங்களுக்குக் கொடுக்கிறே'னு சொல்லுவாங்க. ஆக,  நமக்குப் பின்னாலருந்து ஒரு சக்தி இயக்கிக்கிட்டே இருக்கு. அது இந்தக் கல்லா... மண்ணா... சிலையா... இல்லை. அது எங்க இருக்கு? அது பிரபஞ்ச சக்தி. அது கல்லுல இருக்கு, மண்ணுல இருக்கு, சிலையில இருக்கு. ஆனா, அதுல மட்டும் இல்லை. அதுலயும் இருக்கு அவ்வளவுதான்.

மூகாம்பிகை

பல ஆயிரம் பேர் ஒரு கோயிலுக்குப் போறாங்கன்னா அங்கே ஏதோ ஒரு சக்தி இருக்குங்கிறதை நாம புரிஞ்சிக்கலாம். பல ஆயிரம் பேர் ஒரு ஞானியைப் போய் பார்க்கிறாங்கன்னா அவருடைய வாக்கில் பலிதம் இருப்பதால்தான் போறாங்க. சும்மாவாச்சும் மக்கள் எதையும் ஏத்துக்க மாட்டாங்க. அப்படி சக்தி வாய்ந்த இடங்களான மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்... இங்கேல்லாம் அடிக்கடி போய் வருவேன். அந்த இடங்களுக்கு நாம் போகும்போது நமக்குக் கிடைக்கும் தரிசனத்தின் வழியாகவே கடவுள் தன் சக்தியை நமக்கு உணர்த்துவார். 

இதில் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்... `கொல்லூர் மூகாம்பிகை'தான். அதுக்குக் காரணம் இருக்கு. அப்போ ஜி.கே.வெங்கடேஷ் சாருக்கு நான், இளையராஜா, பாஸ்கர் மூணு பேரும் இசையில் உதவியாளர்களாக இருந்த நேரம். அவர் அடிக்கடி கன்னடப் படங்களுக்கும் இசை அமைப்பார். கர்நாடகாவில், ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை  அமைத்துக்கொண்டிருந்தோம். ஆனா அன்னிக்குனு பார்த்து இளையராஜாவுக்கு லேசா ஜுரம். நிகழ்ச்சி முடியும்போது ஜுரம் அதிகாகிடுச்சு. 

மறுநாள் நாங்க எல்லாரும் அங்கிருந்து புறப்பட்டு, இசைக்கருவிகள் வெச்சிருக்குற வேன்ல சென்னைக்கு வந்துட்டோம். ராஜா மட்டும் `மூகாம்பிகை கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு காலையிலேயே கிளம்பிப் போயிட்டார். அங்கே அவர் சாமி கும்பிட்டுட்டு சென்னைக்கு வந்தார். 

பாவலர் சகோதரர்கள்

வந்ததும், பஞ்சு அருணாசலம் சார்கிட்டே இருந்து போன். `அன்னக்கிளி' படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு. அதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும். ஏவி.எம், ஆர்.ஆர் தியேட்டர்ல முதன்முதலாக இசையமைக்கப் போற அன்னிக்கு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் ஆலயத்துக்கு அதிகாலை 5 மணிக்கெல்லாம் போய் பூஜை செய்துவிட்டு வந்துதான் இசை அமைச்சோம்.   
நாங்க எல்லாருமே 67-ம் ஆண்டிலேயே சென்னைக்கு வந்துட்டோம். 1970-ம் வருஷத்துலேயே நான் பச்சையப்பன் காலேஜுக்குப் பக்கத்துல `கல்கி கார்டன்'ல இருக்கிற ஆசிரமத்துக்குப் போவேன். அங்கே மகரிஷி மகேஷ் யோகிகிட்ட மெடிடேஷன் கத்துக்கிட்டேன். காலையிலேயே போய் உட்கார்ந்துடுவேன். அப்பவே எனக்கு தியானத்துல ஆர்வம் ஜாஸ்தி. மனக்கவலை, மனக்கிலேசம் இதெல்லாம் இல்லாம மனதை அமைதிப்படுத்த, அது ரொம்ப உதவியா இருந்துச்சு. நான் போனதுக்குப் பிறகுதான் அண்ணனுக்கும் அதுல ஈடுபாடு வந்துச்சு. 

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி `ஆல் இந்தியா ரேடியோ'வுல நான் வேலை பார்த்தேன். அப்போ  யோகி அரவிந்தரோட பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக இசை அமைத்து பாடல்கள் பதிவு செய்யவேண்டியிருந்தது. இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா இசையில் நான் பாடல்கள் எழுதினேன். அந்த நிகழ்ச்சிக்காக பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். அப்போ  `அரவிந்த அன்னை'  பட்டுச் சேலை உடுத்தி, தங்க நிறத்தில் தகதகனு உட்கார்ந்திருந்தாங்க. 

அவங்களைப் பார்த்தபோது மனதில் என்னென்னவோ உணர்வுகள். தொண்டைக்குழி வரை ஏதோ வந்து உருண்டு போனது. உலகின் சக்தி மிக்க ஒரு தாயை தரிசித்த உணர்வு.  

அரவிந்த அன்னை

அதன் பிறகு சினிமாவுக்கு வந்து சில ஆண்டுகள் ஆன பிறகு பாண்டிச்சேரி ஆசிரமத்துக்குப் போனேன். அன்னை சமாதியில் அமர்ந்து மௌனமாக தியானித்தேன். `எங்கே போயிட்டே... ஏன் உன்னைக் காணோம்?’னு கேட்டாங்க. யாரோ அப்படியே என் கையைப் பிடிச்சு அழுத்தி உட்காரவெச்சிருந்ததுபோல ஓர் உணர்வு. எவ்வளவு மணி நேரம் அந்த ஏகாந்த நிலையில் இருந்தேன்னு எனக்குத் தெரியாது. அந்தப் பரவச உணர்வை எந்த வார்த்தைகளாலும் வர்ணிக்க முடியாது.

மலர்களின் வழியாக அன்பு, நல்லுணர்வு, தூய்மை, பரவசம், சாகசம், சுகந்தம்... இப்படிப் பலவித நல் உணர்வுகளை என் மனதில் வெளிப்படுத்தினாங்க.  அதன் பிறகுதான் `மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...'னு வேண்டினேன்.

கங்கை அமரன்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு எதுவுமே தேவையில்லைங்கிற மாதிரி ஆகிப்போச்சு. வீட்டுல இருந்த சாமி படங்கள் எல்லாத்தையும் எடுத்து, கேட்கிற நண்பர்களுக்கெல்லாம் கொடுத்துட்டு `அன்னை' படம், மலர்கள், மலர் அலங்காரங்கள்னு எங்க வீடே ரொம்பவும் மாறிப்போச்சு. மனம் மலரத் தொடங்கியது. புதுவாழ்வு. அன்பு, அமைதி, ஆனந்தம் எங்களுக்குள் நிறைந்தது. எங்கள் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் வந்து, எங்கள் இல்லத்தில் தியானம் செய்யத் தொடங்கினாங்க. பலரும் அன்னையை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

நான் பிரபஞ்ச சக்தியை உணரத் தொடங்கினேன். அதன் வழியே பயணம் செய்கிறேன். எந்தவித சலனமும் சஞ்சலமும் இல்லாமல், மனம் பயணிக்கிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தச் சக்தியுடன் நமக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டால், நாம் வெறும் கருவிதான் என்பது புரிந்துவிடும். நம்மை நாமே பார்வையாளனாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் போகலாம்'' எனக் கூறி விடைகொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!