மூகாம்பிகை, ஸ்ரீசாரதா பீடம், ஸ்ரீசக்கரம்... மகான் வழங்கிய கொடைகள்! ஆதிசங்கரர் அவதார தினப் பகிர்வு! | Sri Adi Shankaracharya Jayanti

வெளியிடப்பட்ட நேரம்: 08:04 (20/04/2018)

கடைசி தொடர்பு:08:12 (20/04/2018)

மூகாம்பிகை, ஸ்ரீசாரதா பீடம், ஸ்ரீசக்கரம்... மகான் வழங்கிய கொடைகள்! ஆதிசங்கரர் அவதார தினப் பகிர்வு!

மூகாம்பிகை, ஸ்ரீசாரதா பீடம், ஸ்ரீசக்கரம்... மகான் வழங்கிய கொடைகள்! ஆதிசங்கரர் அவதார தினப் பகிர்வு!

ளிய விளக்கங்களாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளாலும் இந்து மதத்தை எழுச்சியுறச் செய்த மகான் ஆதிசங்கரர்! சிவபெருமானின் அம்சமாகப் போற்றப்படும் ஆதிசங்கரரின் அவதார தினம் இன்று! 

ஆதி சங்கரர்


கேரளாவின் காலடி என்ற ஊரில் சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு, திருச்சிவபேரூர் என்னும் திருச்சூர் வடக்குநாதப் பெருமானின் அருளால் பிறந்தவர் ஆதிசங்கரர். ஐந்து வயதில் உபநயனம் நடத்தப்பெற்ற சங்கரர், கருவிலேயே திருவாக மலர்ந்தார். எல்லோரும் மகிழ்ந்து கொஞ்சும் குழந்தையாக வளர்ந்தார். உபநயனத்துக்குப் பிறகு ஆசாரப்படி பிட்சை வாங்கப் புறப்பட்ட சங்கரர், ஏழைப் பெண்ணொருத்தி அளித்த நெல்லிக்கனிக்கு மகிழ்ந்து, அவளுடைய வறுமையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டு மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களால் துதித்து, தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தார். அந்த ஸ்தோத்திரம்தான் 'கனகதாரா ஸ்தோத்திரம்.'

வயது முதிர்ச்சியின் காரணமாக பூர்ணா நதியில் தன்னால் ஸ்நானம் செய்ய முடியவில்லேயே என்ற தாயின் ஏக்கத்தைப் போக்க, பூர்ணா நதியை தன் வீட்டின் அருகில் வரவழைத்து, தாயை ஸ்நானம் செய்யவைத்தார். தன் காலைப்  பிடித்துக்கொண்ட முதலையின் பிடியிலிருந்து விடுபடவேண்டுமானால், தான் சந்நியாசம் மேற்கொள்வதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று கூறி, தன்னுடைய சந்நியாசத்துக்குத் தாயின் அனுமதியைப் பெற்றவர். அப்போது அவருக்கு வயது 8.

துறவறம் மேற்கொண்ட ஆதிசங்கரர், கோவிந்த பகவத்பாதரிடம் நான்கு வேதங்களையும் பயின்று, ஆத்ம ஞானியாகப் பரிணமித்தார். மக்களின் நல்வாழ்வுக்காகவே துறவறம் ஏற்றார். ஸ்ரீகோவிந்த பகவத்பாதரின் ஆசி பெற்ற ஆதிசங்கரர், கட்டுக்கடங்காமல் ஓடி பாதையை மறித்த நர்மதை ஆற்றைத் தம் கமண்டலத்தில் அடைத்து, அதன் கர்வத்தை அடக்கினார். காசி, கங்கையில் நீராடச் சென்றபோது, சிவபெருமானே ஒரு புலையனாக எதிரில் வந்தார். அவரை விலகிப் போகும்படி ஆதிசங்கரர் சொன்னபோது, 'நீர் யாரை விலகச் சொல்கிறீர், என்னுடைய இந்த உடலையா அல்லது என்னுடைய ஆத்மாவையா?' என்று கேட்டார். அந்தக்  கேள்வி ஆதிசங்கரருக்குள் ஏற்படுத்திய தெளிவின் காரணமாக அவரால் இயற்றப்பட்டதுதான், 'மனீஷா பஞ்சகம்' என்னும் ஸ்தோத்திரம்.

ஆதி சங்கரர்

இமாலயத்தில் தவமியற்றச் சென்ற ஆதிசங்கரர், தமது கமண்டலத்தையும் தண்டத்தையும் தேவையில்லை என்று வீசினார். அந்த தண்டம் விருட்சமாகவும், கமண்டலத் தீர்த்தம் நதியாகவும் மாறிய அற்புதம் நிகழ்ந்தது. ஆதிசங்கரரின் வேத பாஷ்யங்களைக் கேட்டு மகிழ்ந்த ஸ்ரீவியாச முனிவர், அவரை அனுகிரகித்து வரமருளினார். வாதத்தில் தோற்ற மண்டனமிஸ்ரரை மன்னித்து, அவருக்கு சந்நியாச தீட்சைக் கொடுத்தார். அவரே ஞானி சுரேச்வரர்.

கொல்லூரின் சௌபர்ணிகா நதிக்கரையை அடைந்த ஆதிசங்கரர் அந்தத் தலத்தில் ஸ்வர்ணரேகையுடன் கூடிய மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். எண்ணற்ற ஆலயங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு ஆலயங்களைப் பெருக்கினார். அங்கிருந்த மூர்த்தங்களைச் சாந்தமாக்கினார். உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்தினார். சாத்விகமான வழிபாட்டு முறைகளை ஆலயங்களில் ஏற்படுத்தினார். கடுமையான வழிபாட்டு முறைகளை மாற்றியமைத்து, எளிய பாமர மக்களும் வழிபடும்படிச் செய்தார்.

கடுமையான வெயிலில், ஒரு பாறையில் பிரசவ வேதனையில் துடித்த தவளைக்கு, ஒரு பாம்பு தன் படத்தை விரித்து நிழல் தந்துகொண்டிருந்த அதிசயத்தைக் கண்டு வியந்த ஆதிசங்கரர், அங்கேயே தன்னுடைய முதல் மடத்தை நிறுவினார். அதுவே சிருங்கேரி ஶ்ரீசாரதா பீடம். பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு விளக்கம் எழுதிய மகா ஞானி. மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், பஜகோவிந்தம், சுப்ரமண்ய புஜங்கம், மனிஷா பஞ்சக ஸ்தோத்திரம், சிவானந்த லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி ஆகிய ஸ்தோத்திரம் மற்றும் சாஸ்திர நூல்களை இயற்றினார்.

ஆதி சங்கரர்

ஸ்ரீஆதிசங்கரர் உருவாக்கியதுதான் ஸ்ரீசக்கர வழிபாடு. அம்பிகையை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது இன்றும் தொடர்கிறது. இதில் விஞ்ஞானமும், துல்லியமான கணிதமும் இருப்பதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தன்னுடைய தாய்க்குக் கொடுத்த வாக்கின்படி, தன் தாய் மறைந்தபோது தனியொருவராக இருந்து தாயின் ஈமக்கிரியைகளைச் செய்தார். தெற்கில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம், மேற்கில் துவாரகை துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம், கிழக்கில் பூரி நகரில் கோவர்த்தன பீடம் என்று நான்கு திசைகளிலும் நான்கு அத்வைத மடங்களை நிறுவி பக்திப் பயிர் செழித்து வளரச் செய்தார்.

`காலடி’-யில் அவதரித்து, தம் காலடித் தடங்களை புண்ணிய பாரதம் முழுவதும் பதித்த மகான் ஆதிசங்கரர். தம்முடைய 32-வது வயதில் தாம் எங்கிருந்து வந்தாரோ அந்தப் பரம்பொருளிடமே ஐக்கியமாகிவிட்டார். இந்து தர்மத்துக்கு இணையற்ற அரும் பணிகள் ஆற்றிய மகான் ஆதிசங்கரரின் அவதார தினத்தில், அவருடைய திருவடிகளைப் பணிந்து புனிதமடைவோம்!


டிரெண்டிங் @ விகடன்