`மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்!’ - பைபிள் கதைகள் #BibleStories

கடவுள் மனிதர்களிடத்தில் நடந்துகொள்வதுபோல நீங்களும் தாராளமாக நடந்துகொள்ளுங்கள். மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள் என்பதே இதன் பொருள்.

`மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்!’ - பைபிள் கதைகள் #BibleStories

இயேசுவுக்கு  மொத்தம் பன்னிரண்டு சீடர்கள் இருந்தனர். அவர்களில் பேதுரு என்பவரே தலைமைச்சீடர். பேதுருவுக்கு ஒருநாள் பெருத்த சந்தேகம் ஏற்பட்டது. தனக்கு எதிராகத் தவறு செய்யும் சகோதரனை எத்தனைமுறை மன்னிப்பது? என்பதே அந்தச் சந்தேகம். 

பைபிள் கதைகள்

இப்படியொரு சந்தேகத்தை தீர்க்க, இயேசு கிறிஸ்துவால் மட்டுமே முடியும் என்று கருதிய பேதுரு, இயேசுவின் முன்னால் போய் நின்றார். `இயேசுவே, எனக்கு எதிராக என் சகோதரன் தவறு செய்தால் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறை மன்னிக்கலாமா?' என்று கேட்டார்.  இதை மிகவும் கவனமாக கேட்டறிந்த இயேசு கிறிஸ்து,  `ஏழு முறை மட்டுமல்ல, எழுபது முறை ஏழு முறை மன்னிக்கலாம்' என்றார். அதாவது, எழுபது முறை ஏழு முறை என்பது அதைக் கணக்கிட்டால் 490 என்று வருகிறது. அதன்படி பார்த்தால் ஒருநாளைக்கு 500 முறைகூட மன்னிக்கலாம் என்பதை மையப்படுத்தியே இயேசு கிறிஸ்து அப்படிக் கூறியிருக்கிறார். ஆனால், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு அத்தனை முறை தவறுகளைச் செய்யப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

மன்னிப்பு குறித்து சொன்ன இயேசு, பேதுருவிடம் ஒரு சம்பவத்தையும் கூறினார்.  ``அரசன் ஒருவன் இருந்தான். அவனது பணியாளர்களில் ஒருவன் கடன் பெற்ற வகையில் 10 ஆயிரம் தாலந்து வரை அரசனுக்குக் கொடுக்கவேண்டியிருந்தது. 

பைபிள் கதைகள்

கடன்பட்டிருந்த பணியாளனை அழைத்த அரசன்,  `நீ பட்ட கடனை திருப்பிக் கொடு. இல்லையென்றால், உன்னையும் உன் மனைவி மற்றும் பிள்ளைகளையும் சிறையில் தள்ளுவேன்' என்று சொன்னான். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பணியாளன்,  `அய்யா, அது பெருந்தொகை. என்னால் அவ்வளவு தொகையைச் செலுத்த முடியாது. கொஞ்சம் இரக்கம் காட்டி என்னைப் பொறுத்தருளுங்கள். என் கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்தான். இதைக் கண்ட அரசன், பணியாளனின் நிலைமையை அறிந்து அவனை மன்னித்தார்.

இதையடுத்து வெளியே சென்ற பணியாளன், தனக்கு 100 தாலந்து தரவேண்டிய வேறொரு பணியாளனைக் கூப்பிட்டு,  `நீ எனக்குத் தரவேண்டிய கடன் தொகை முழுவதையும் உடனடியாக திருப்பிக் கொடு. இல்லாவிட்டால், உன்னையும் உன் மனைவி மற்றும் பிள்ளைகளை சிறையில் அடைப்பேன்' என்கிறான்.  ஆனால், அந்தப் பணியாளனோ,  `என்னால் அவ்வளவு தொகையைச் செலுத்த முடியாது. பொறுத்துக்கொள்ளுங்கள்' என்றான். அதை ஏற்க மறுத்ததுடன், அந்தப் பணியாளனை மன்னிக்காமல் சிறையில் அடைத்தான்.

பைபிள் கதைகள்

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் நடந்தவை அனைத்தையும் அரசனிடம் போய்ச் சொன்னார்கள். உடனே ஆவேசமடைந்த அரசன், அந்தப் பணியாளனை அழைத்து,  `நீ எனக்குத் தரவேண்டிய 10 ஆயிரம் தாலந்தைத் தள்ளுபடி செய்து உனக்கு மன்னிப்பு வழங்கியதுபோல. உன்னிடம் 100 தாலந்து பெற்ற அந்தப் பணியாளன் மீது இரக்கம் காட்டாமல், அவனை மன்னிக்காமல் ஏன் சிறையில் தள்ளினாய்? நீ அவன் மேல் இரக்கம் காட்டாததால் உனக்கு இரக்கமின்மையே தண்டனையாகக் கிடைக்கும்' என்கிறான் அரசன். அந்தக் கையோடு அந்தப் பணியாளனை சிறையில் தள்ளிய அரசன், `நீ எனக்குக் கொடுக்கவேண்டிய 10 ஆயிரம் தாலந்தைத் திருப்பிக் கொடுக்கும்வரை சிறையில் இரு, போ...' என்றான். அதன்படி சிறையில் அடைக்கப்பட்டான் அந்தப் பணியாளன்.'' 

இந்த உவமையை பேதுருவிடம் எடுத்துக் கூறிய இயேசு, `கடவுள் மனிதர்களிடத்தில் நடந்துகொள்வதுபோல நீங்களும் தாராளமாக நடந்துகொள்ளுங்கள். மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்' என்கிறார்.  `உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்றும் இயேசு கூறியிருக்கிறார். தன்னை சிலுவையில் அறையும்போதுகூட,  `பிதாவே இவர்களை மன்னியும்' என்றே இயேசு சொல்கிறார். ஆம், இயேசு போதனைகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவற்றின்படி வாழ்ந்தும் காட்டினார்.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!