ஸ்ரீசத்ய சாய்பாபா ஸித்தி அடைந்த நாள் இன்று

மனித நேயம், அளவில்லாத அன்பு, எதையும் எதிர்பார்க்காத சமூக சேவை, இடையறாத ஆன்மிகப் பற்று என வாழ்ந்தவர் ஸ்ரீசத்ய சாய்பாபா. இன்றும் அவரது பக்தர்களால், 'இறை அம்சம்' என்று வணங்கப்படுபவர். 1926-ம் ஆண்டு நவம்பர் 23 அன்று, அன்றைய ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பெத்த வெங்கடப்ப ராஜு, ஈஸ்வரம்மா தம்பதியரின் திருமகனாக சத்ய சாய்பாபா அவதரித்தார். 1940-ம் ஆண்டு  மார்ச் 8-ம் நாள், இறைவனருளால் மெய்ஞ்ஞான நிலையை எட்டினார். அன்று முதல், உலகம் வியக்கும் ஓர் உன்னத குருவாக, ஆன்மிக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 1950-ம் ஆண்டு பிரசாந்தி நிலையம் எழுப்பி, உலகெங்கும் ஆன்மிகப் பணிகளையும், மனித நேய உதவிகளையும் செய்யத் தொடங்கினார். உலகெங்கும் இவர் புகழ் பரவியது. தமக்குக் கிட்டிய புகழாலும் செல்வத்தாலும், இவர் ஏழை எளிய மக்களுக்கு சேவைசெய்யத் தொடங்கினார்.

சாய்பாபா

எண்ணற்ற கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆதரவு இல்லங்கள் என சத்ய சாய்பாபாவின் அருள் பெருகத் தொடங்கியது. ஆதரவற்ற பல மக்களுக்கு இவர் தாயானார். காவி உடையில் உலவும் தேவ தூதனாக இவர் மதிக்கப்பட்டார். ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம் என்று போற்றப்பட்டார். சென்னை மக்களின் தாகம் தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்துக்கென ரூ.200 கோடி கொடுத்த வள்ளல் இவர். அன்பால் உலகையெல்லாம் இணைத்த பாபா, 2011-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் இறையோடு கலந்தார். பாபா பிறக்கவும் இல்லை; இறக்கவும் இல்லை. அவர், மண்ணில் வந்து தங்கிவிட்டு சென்றார் என அவரது பக்தர்களால் இன்றும் போற்றப்படுகிறார். சத்ய சாய்பாபா ஸித்தி அடைந்த நாள் இன்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!