மானாமதுரை ஆனந்தவல்லி - சோமநாதர் கோயில் தேரோட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரையைப் போன்றே மானாமதுரையிலும் சித்திரை திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது

சித்திரை மாதத்தில் தமிழகமே விழாக்கோலம் பூண்டிருக்கும். குறிப்பாக மதுரை சித்திரை திருவிழா உலகெங்கும் பேசப்படும். மதுரைக்கு அடுத்தபடியாக தென்னகத்தில் விமரிசையாக சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும் ஊர் மானாமதுரை. ஆனந்தவல்லி - சோமநாதர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்குதல் என அனைத்து வைபவங்களையும் மானாமதுரை மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மானாமதுரையில் சித்திரை திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, கடந்த 27-ம் தேதி ஆனந்தவல்லி-சோமநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (28.4.2018) காலை 10.30 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான மக்கள் கலந்து கொண்டனர். தேரில் ஆனந்தவல்லி-சோமநாதர் கடவுள்களை கண்ட மக்கள் பரவசம் அடைந்து கையெடுத்து வணங்கினர்.

இதுகுறித்து மானாமதுரை மக்களிடம் பேசினோம்,"மதுரையைப் போன்றே மானாமதுரையிலும் சித்திரை திருவிழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகம்" என்றனர். விழாவின் தொடர்ச்சியாக நாளை அழகர், ஆனந்தவல்லி அம்மன் கோவிலின் முன் உள்ள வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!