வெளியிடப்பட்ட நேரம்: 07:41 (06/05/2018)

கடைசி தொடர்பு:07:41 (06/05/2018)

``அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்!’’ - பைபிள் #Bible

``அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்!’’ - பைபிள் #Bible

ன் தந்தை என்மீது அன்புகொண்டிருப்பதைப்போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டிருக்கிறேன்.” கடவுள் நம்மீது கொண்டிருக்கும் அன்பையும் நாம் ஒருவர் மற்றவரிடம் எத்தகைய அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் சிந்திக்கவேண்டியிருக்கிறது. தந்தையாக கடவுள் இயேசுவின் மீதுகொண்ட அன்பை வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், `இயேசு தந்தையாம் கடவுளுக்கு அன்பார்ந்த மகனாக இருந்திருக்கிறார்’ என்று விவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது (மத் 17:5). அப்படியென்றால், தந்தை கடவுள் இயேசுவின்மீது எத்தகைய அன்புகொண்டிருந்தாரோ, அத்தகைய அன்பை இயேசு நம்மீது கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

இயேசு கிறிஸ்து

இயேசு நம்மீதுகொண்ட அன்பு எத்தகையது என்று ஆராய்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது. முதலாவதாக, இயேசு நம்மீது கொண்ட அன்பு, ஒரு நண்பன் இன்னொரு உயிர் நண்பன் மீது கொள்ளும் அன்புக்கு இணையானது. ஆம், இயேசு எல்லாம் வல்லவர். தமத்திருத்துவத்தின் இரண்டாம் ஆள். அதையெல்லாம் அவர் கணக்கில்கொள்ளாமல், தாழ்நிலையிலிருக்கும் நம் மீது அன்புகொள்கிறார். அன்புகொள்வதோடு மட்டுமல்லாமல், நம்மை தன்னுடைய நண்பராகக் கருதி நமக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருபவராக இருக்கிறார். இதன் மூலம் அவருடைய அன்பு எத்தனை உயர்ந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

பைபிள் - இயேசு

இரண்டாவதாக, இயேசுவின் அன்பு பாரபட்சம் இல்லாத அன்பாக இருக்கிறது. இயேசு ‘இவர் யூதர் அதனால் இவரை அன்பு செய்வேன்’ என்றோ அல்லது `அவர் புறவினத்தார், அதனால் அவருக்கு என்னுடைய அன்பு கிடையாது’ என்றோ இருக்கவில்லை. மாறாக அவர் எல்லோரையும் அன்பு செய்தார். அதுதான் அவருடைய அன்பாக இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலில் சொல்லப்பட்டதுபோல, திருத்தூதர்களின் தலைவராகிய பேதுரு, “கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கின்றேன்” என்கிறார். இந்த நிகழ்வுக்கு முன்புவரை பேதுரு, ‘இயேசு யூதர்களுக்குத்தான்’ என்று நினைத்திருந்தார். ஆனால் இந்த நிகழ்வுக்குப் பிறகு அவருடைய பார்வையில் மாற்றம் வருகிறது. ஆகவே, இயேசு எல்லா மனிதர்களின் வழியாகவும் செயல்படுகிறார், அவருடைய அன்பு எல்லோருக்கும் உண்டு, அவருடைய அன்பில் பாரபட்சம் இல்லை என்பதை நாம் மிகத் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.

மூன்றாவதாக இயேசுவின் அன்பு மன்னிக்கிற அன்பாக இருக்கிறது. விவிலியத்தில் வரக்கூடிய பல்வேறு நிகழ்வுகள் அவருடைய மன்னிக்கும் அன்புக்குச் சான்றாக இருக்கின்றன. தன்னைச் சிலுவையில் அறைந்து சித்ரவதை செய்தவர்களுக்காக தந்தையிடம் ‘தந்தையே இவர்களை மன்னியும்’ என்று சொல்லி ஜெபம் செய்வதன் மூலம், இயேசு தன்னுடைய மன்னிக்கும் அன்பினை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு ஓர் உயிர் நண்பனைப்போல நம்மீது அன்பு காட்டுவதுடன் பாரபட்சமில்லாமல், மன்னிக்கும் அன்பினை நம்மீது பொழியும் இயேசுவைப் போன்று நாம் நம்முடன் வாழக்கூடியவர்கள் மீது அன்பு காட்டுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில் நாம் நம் அருகில் வாழ்பவர்கள் மீதே அன்பு காட்டாமல், கண்டும் காணாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இந்த நிலை மாற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயேசு நம்மை அன்பு செய்ததைப்போல ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும்.

பைபிள் - சிலுவை

இயேசு நம்மை அன்பு செய்ததுபோல ஒருவர் மற்றவரை அன்புசெய்யும்போது இறைவன் நமக்கு எத்தகைய கைமாறு தருவார் என்பது பற்றி பார்ப்போம். “அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்; அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள்” என்கிறார் தூய யோவான். ஆம். நாம் அன்பு செலுத்தும்போது கடவுளை அறிந்தவர்களாக மட்டுமல்லாமல், கடவுளின் மக்களாகிறோம். இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு அவர் கூறும் விளக்கத்தை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும். 

“அன்புக்குக் கைகள் உள்ளன, அவை அழுவோரின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் உள்ளன, அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உள்ளன, அவை அல்லல்படுவோர் மீது பரிவுகொள்வதாக இருக்கும்; அன்புக்கு காதுகள் உள்ளன, அவை அண்டி வருவோரின் குறைகள் கேட்பதாக இருக்கும். அன்புக்கு இதயம் உண்டு, அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காகவும் துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப்போல ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம். அதன்வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.