மயிலை கபாலீஸ்வரர் கோயில் குருக்கள் ஜெயலலிதா சமாதியில் பூஜை செய்தது சரியா?

மயிலை கபாலீஸ்வரர் கோயில் குருக்கள் ஜெயலலிதா சமாதியில் பூஜை செய்தது சரியா?

சென்னை, மெரினா கடற்கரையில்,  எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் 2016-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிய மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குருக்கள் வெங்கடசுப்பிரமணியன் பூஜைகளை நடத்தி வைத்தார். தற்போது இது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. `திருக்கோயிலில் ஆண்டவனுக்குப் பணி செய்யும் ஒருவர், சமாதிக்கான பூஜைகளை மேற்கொள்ளக் கூடாது. ஜெயலலிதா இறந்தபோதுகூட சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அகஸ்தியர் கோயிலின் அர்ச்சகரான வேதாதி என்பவர்தான் ஈமச்சடங்குகளை மேற்கொண்டார். இது ஆகம விதிகளுக்கு முரணானது, குருக்களின் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு எதிரானது' என்று விவாதிக்கப்படுகிறது. 

ஜெயலலிதா சமாதி

ஒரு கோயிலில் குருக்களாக இருந்து இறைப்பணி செய்யும் ஒருவர், ஈமச் சடங்குகள், நினைவிட அடிக்கல் நாட்டு விழாக்களை மேற்கொள்ளலாமா? என்று ஆன்மிகப் பெரியோர் சிலரிடம் கேட்டோம். 

குமார சிவாச்சாரியார் :

 குமார சிவாச்சாரியார்``சம்ஷேப தர்ம சாஸ்திரம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லா வழிகாட்டுதலையும் சொல்கிறது. மனிதர்கள் செய்யவேண்டிய பூஜை, வழிபாடுகளையும் சொல்கிறது. அதன்படி பார்த்தால் ஈமச் சடங்குகள் செய்வதும் ஒரு புண்ணிய காரியம்தான். நான்கு வேதங்களில் ரிக், யஜுர் வேதங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தெய்வக் காரியங்களையும் மங்களக் காரியங்களையும் செய்வார்கள். சாம, அதர்வண வேதம் பயின்றவர்கள் வைத்திய காரியங்களையும் துக்க காரியங்களையும் மேற்கொள்வார்கள். இப்படி தனித் தனி வேதம் பயின்ற காலமும் உண்டு; நான்கு வேதங்களையும் பயின்ற காலமும் உண்டு. தற்போது நான்கு வேதங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, கோயிலில் குருக்களாக இருப்பவர்கள் நான்கு வேதங்களும், சிவாகமங்களும் பயின்றிருந்தால், அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தலாம். அதில் தவறு எதுவுமில்லை.

இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பாரம்பர்யத்தில் இறந்தவர்களின் ஆன்மாவைத் திருப்திப்படுத்தும்  செயல்கூட தெய்வ காரியத்தைப் போன்றது. இன்னும் நெருக்கமாகச் சொன்னால், சைவ, வைணவ முறைப்படி, `ஆச்சார்ய அபிஷேகம்' என்று சொல்வார்கள். அதில் இறந்துபோன பெரியவர்களின் ஆன்மாவை ஆண்டவனோடு ஒப்பிட்டு அதை சாந்திப்படுத்துவது இறைவனுக்குச் செய்யப்படும் திருத்தொண்டு என்றே சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் சமாதி அடிக்கல் நாட்டு விழாவில் கோயில் குருக்கள் கலந்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. எந்த விதியும், மரபும் மீறவில்லை என்றே உறுதியாகச் சொல்லலாம்'' என்றார். 

ஜெயலலிதா சமாதி

கோட்டீஸ்வர சிவாச்சாரியார் : 

``வேதத்தில் எல்லா நிகழ்வுகளுக்கும் சொல்லப்பட்டுள்ள மந்திரங்கள் வேறு வேறு. அதைச் சொல்லும் மனிதர்தான் ஒருவர். ஒருவரே எல்லா நிகழ்வுகளுக்கும் மந்திரம் சொல்லி தேவதைகளைப் பூஜிக்கலாம். நல்ல காரியங்களுக்கு என்றும், துக்க காரியங்களுக்கு என்றும் தனியான மந்திரங்கள் உண்டு. எனவே கல்யாணம் செய்ய ஒருவர், ஈமச்சடங்கு செய்ய தனியானவர் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். கோயில் குருக்கள் ஈமச்சடங்குகள் செய்யக் கூடாது என்று எந்த ஆகம விதியும், குறிப்பும் இல்லை. ஆனால், புகழ்பெற்றவர்களின் ஈமச்சடங்குகளில் கோயில் குருக்கள் கலந்து கொண்டால், மறுநாள் கோயிலுக்கும் வரும் பக்தர்கள், அவர் கையால் பிரசாதம் வாங்கத் தயங்கலாம். எனவே, கோயில் குருக்கள் துக்க காரியங்களில் பங்கேற்பதைத் தவிர்க்கலாம் என்பதே என் கருத்து'' என்றார்.

ஜெயலலிதா மரணம்

சிவராஜ் பட்டர் :

ஆரம்ப காலங்களில் மங்கள காரியங்களுக்கு எனத் தனியாக புரோகிதர்களும், துக்க காரியங்களுக்கு எனத் தனி புரோகிதர்களும் இருந்தார்கள். அதுகூட பழக்கத்தின் காரணமாக உருவான நடைமுறைதான். ஆனால், இன்று புரோகிதம் செய்யும் பிராமணர்களே அருகிப் போய்விட்ட காலத்தில் தனித்தனியாகக் கிடைப்பதில்லை. ஒரு குடும்பத்தில் எல்லா நிகழ்வுகளையும் நடத்தி வைக்கும் புரோகிதரே துக்க காரியங்களையும் செய்து வைத்திருக்கிறார் என்பது மன்னர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் வழக்கம்தான். நான் கூட சமீபத்தில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் சாந்தி பூஜை செய்யப் போயிருந்தேன். ஸ்டேஷனில் விஷம் அருந்தி செத்துப்போன ஒருவரின் ஆத்ம சாந்திக்காக காவலர்கள் செய்த பூஜை அது. கோயில் அர்ச்சகராக இருந்தாலும் அந்த பூஜையைச் செய்ய முடியாது என்று கூறிவிட முடியாது. சிலமுறை அரசின் நிர்பந்தம் காரணமாகவும் துக்க காரியங்களை நடத்தி வைக்க வேண்டிய கட்டாயம் குருக்களுக்கு உருவாகலாம். மேலும், நேற்று நடந்த ஜெயலலிதா சமாதி விவகாரத்தில் நடந்தது பூமி பூஜை மற்றும் யாகம்தான். இதில் கலந்துகொள்ள கோயில் குருக்களுக்கு எந்தத் தடையும் இல்லை. நினைவிடமோ, வீடோ எதுவானாலும் யாகமும் பூஜை முறைகளும் ஒன்றுதான். எனவே இதில் எந்தவித விதி மீறலும் இல்லை'' என்றார். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!